சங்ககாலத் தமிழரும் சங்கு வளையல்களும்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டையினை அடுத்துள்ள கரிசல்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது (படம் காண்க). வெம்பக்கோட்டைப் பகுதியில் ஏற்கனவே பல சங்ககாலத்தினைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைத்து வரும் நிலையில் புதிதாக இப்போது சங்கினால் செய்யப்பட்ட வளையல் கிடைத்துள்ளது.
சங்க இலக்கியச் சான்றுகள்
கபிலர்: அகம் 2.
'அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன் கை'
அகநானூறு: 6
(தித்தனின் மகளான 'ஐயை' பல அணிகலன்களை அணிந்திருந்தாள், அவற்றில் சங்கினை வாளால் அறுத்துச் செய்யப்பட்ட வளையலினை முன் கையில் அணிந்திருந்தாள்)
மாமுலனார் - அகம் 349.
'அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த'
அகநானூறு: 349
(சங்கை அரத்தால் அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை உடைய எனது முன்கையினைப் பற்றித் தலைவன் என்னைக் கை பிடித்தார்).
'பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து'
நெடுநல்வாடை: 141-142
(பாண்டிய அரசனான நெடுஞ்செழியனின் மனைவியான பாண்டிமாதேவி பொன்னலான வளையல்களுடன் வலம்புரிச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களையும் அணிந்திருந்தாள்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் சங்கிலான வளையலை அணிந்திருந்தாள்.
சிந்துவெளி நாகரிக மக்களும் சங்கிலான வளையல்களை அணிந்திருந்தமைக்கான சான்றுகளுண்டு.
'வளை', 'தொடி' ஆகிய பெயர்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வளையல் எனும் அணிகலனினை ஈழத்தில் 'காப்பு' எனப் பொதுவாக அழைப்பர்.
சங்கிலான வளையல், பொன்னிலான வளையல் என்பன போன்றே பூச்செடிகளிலிருந்தும் (ஆம்பல், குவளை, வள்ளி) வளையல்களைச் செய்து பழந் தமிழர் அணிந்திருந்தமைக்கான இலக்கியச் சான்றுகளுண்டு.
தற்போது வெம்பக்கோட்டையில் கிடைத்திருந்த சங்கு வளையலைப் போன்று ஏற்கனவே பல இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளிலும் சங்கிலான வளையலுக்கான சான்றுகள் கிடைத்திருந்தன,
அத்தகைய தொல்லியல் இடங்கள் கீழடி, கொற்கை, அழகன்குளம், கொடுமணல், உறையூர், காவிரிப்பூம்பட்டினம்...
- இலங்கநாதன் குகநாதன்