ஏழுகடற்றுறையின் சிற்றரசர்கள்
பரதவர் நாட்டு ஏழுகடற்றுறையின் சிற்றரசர்களான பரதகுல தலைவர்கள்:
பரதவர் நாடு இரண்டு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. வடபகுதி ஏழுகடற்றுறை என்றும், தென்பகுதி மேல்நாடு என்றும் அழைக்கப்பட்டது. ஏழுகடற்றுறையில் பாண்டியபதி ராஜாக்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்து முத்துக்குளித்தலையும் நடத்தி வந்த பரதகுல தலைவர்களின் அதிகார உச்சமும் அதிகார வீழ்ச்சியையும் பற்றி காண்போம்.
டச்சு தளபதிகளான "வான் ரீடி" மற்றும் "லாரென்ஸ் பைல்" என்பவர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த "வான் ஜியோன்ஸ்" என்பவருக்கு கிபி1669 ஆம் வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதத்தில்....
"முத்துக்குளித்தலின் முதலாளிகளாக இருந்த பரதகுல தலைவர்களே அந்த முத்துக்குளித்தலின் வருமானத்தை தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்கின்றனர். வலிமைமிக்கவர்களாகவும், செல்வமிக்கவர்களாகவும் இருந்த பரதகுல தலைவர்கள் பகையரசர்களின் படையெடுப்புகளை முறியடித்து தங்களை பாதுகாத்து கொள்ள சொந்தமாக படைவீரர்களும், போராயுதங்களும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்கள்.
அரசர்கள் என்று குறிக்கப்பட்ட ஏழுகடற்றுறை சிற்றரசர்களான பரதகுல தலைவர்கள்:-
ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் ஏசுசபை குருவானவருமான "ஹென்றி ஜேம்ஸ் கோல்ரிட்ஜ்" அவர்கள் தமது "புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கையும், கடிதமும்" என்ற நூல் பக்கம் எண் 144 யில்......
"நமக்கு கிடைத்த ஐரோப்பிய ஏசுசபை பாதிரியார்களின் குறிப்புக்களில் பரதகுல தலைவர்களை அரசர்கள் என்றே பதிவு செய்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.
ஏழுகடற்றுறையின் சிற்றரசர்களான பரதகுல தலைவர்களின் வீழ்ச்சி:-
போர்ச்சுகீசியர்கள் காலம் வரையில் வலிமையாகவும், செல்வாக்குமிக்கவர்களாகவும் இருந்த பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர் காலத்தில் வீழ்ச்சியடைய தொடங்கினர்.
டச்சுக்காரர்களுக்கு அடுத்து வந்த ஆங்கிலேயர்களோ பரதகுல தலைவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கவுமில்லை, அவர்களுக்கு முத்து குளித்தலில் வரும் வருமானத்தையும் கிடைக்கவிடாமல் செய்தனர்.
பரதவர் நாட்டு ஏழுகடற்றுறையின் சிற்றரசர்களான பரதகுல தலைவர்கள் முதலில் டச்சுக்காரர்களாலும் பிறகு ஆங்கிலேயர்களால் அதிகாரம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, பாண்டியபதி ராஜாக்கள் தலையிட்டு பரதவர் நாட்டு ஏழு கடற்றுறையில் புதிய தலைவர்களை உருவாக்கும் சூழல் உருவானது.
००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
Life and letters of st Francis Xavier by Jesuit James henry coleridge Pg. 144
* Letter to Van Geons from the dutch chiefs Van Rheede and Lauren Pyl dated 19th December 1669 , Tuticorin.
- UNI