வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday, 14 September 2024

தூத்துக்குடி முத்து

தூத்துக்குடி என்றாலே ஞாபகம் வருவது முத்துதான்-முத்துக்குளித்தலால் தான் முத்து நகரம் என்று பெயர் பெற்றது.


தூத்துக்குடியில் முத்து குளித்தல் கடந்த 1957 ஆம் ஆண்டுகளுக்கு அப்புறம் இதுவரை நடைபெறவில்லை. இது குறித்து அப்போதைய காலகட்டங்களில் முத்து குளித்தல் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளை தேட துவங்கினோம். தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருகே தனுஷ்கோடி என்ற ஒரு பெரியவர் இருப்பதாக தகவல் கிடைத்தது அவரைப் பார்க்க நாமும் சென்றோம்.


ஒல்லியான தேகம், உடல் முழுக்க சுருக்கங்கள், ஆனாலும் கணீர் குரலில் பேசுகிறார் 92 வயதை எட்டிய பெரியவர் தனுஷ்கோடி. அவரிடம் பேச்சு கொடுத்தோம். முத்துக்குளித்தல் தொழில் எப்போது நடைபெறும், முத்துக்குளி தொழிலில் எத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டீர்கள், முத்துக்கள் உங்களுக்கு கிடைத்ததா, முத்துக்கள் இருக்கும் இடம் எப்படி தெரியும் என பல்வேறு கேள்விகளோடு அவரை சந்தித்தோம்.


இதுகுறித்து தனுஷ்கோடி கூறுகையில், கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை முத்துக்குளி தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தூத்துக்குடி கடலில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவிற்கு நாட்டுப்படகில் சென்று கண்ணுக்கு மட்டும் கண்ணாடி அணிந்து கொண்டு தன் மூச்சில் சுமார் 40 அடி ஆழம் வரை கடலுக்குள் சென்று முத்து சிற்பிகளை பாறைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் முத்துச்சிப்பிகளை தேடி எடுத்து வருவோம் எனக் கூறியவர், சுமார் மூன்று முதல் நான்கு நிமிடம் வரை தான் கடலுக்குள் இருக்க முடியும். இதனைத் தொடர்ந்து கடலின் மேல் மட்டத்திற்கு வரும் நாங்கள் படகில் உணவை உண்டு விட்டு கொஞ்சம் தங்களை ஆசுவாசப்படுத்தி மீண்டும் கடலுக்குள் தன் மூச்சில் செல்வோம் என்கிறார்.


ஒருமுறை கடலுக்கு சிப்பி சேகரிக்க சென்றால் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறை தான் கடலுக்குள் தன் மூச்சில் சென்று சிப்பிகளை சேகரிக்க முடியும், அவ்வாறு சேகரித்த சிப்பிகளை மேலே கொண்டு வந்து அதை அரசு அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள முத்துச்சிப்பி குடத்துக்கு சென்று அங்கு சிப்பிகளை அதற்காக அமைக்கப்பட்டுள்ள களங்களில் ஒவ்வொன்றாக சுத்தப்படுத்தி முத்துக்களை சேகரிப்போம் என்று கூறும் இவர் 1952 காலகட்டங்களில் முத்துக்குளி தொழிலில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குளி வீரர்கள் சுமார் 100 பேர் இருந்ததாக கூறுகிறார்.


தூத்துக்குடி முத்துக்கென்று எப்போதும் ஒரு மவுசு இருக்கும் என கூறும் பெரியவர் தனுஷ்கோடி, பவளப்பாறைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சிற்பிகளை சேகரிப்பது மிகவும் கடினமான காரியம் தான் என்கிறார். மழைக்காலம் முடிந்ததும் சிற்பிகள் கூட இருக்கும் இடம் தெரியும். அங்கே படகில் சென்று முத்துக்குளித்தலில் ஈடுபடுவோம். எடுத்து வரும் முத்து சிப்பிகள் எங்களுடனே வரும் அரசு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் முத்து சிப்பி கூடத்திற்கு அழைத்து செல்வார். சிப்பி கூடத்தில் அதற்கென இருக்கும் தளங்களில் சிப்பிகளை உடைத்து முத்துகளை சேகரித்து அரசிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.


சங்கு குளிக்க சென்றால் கூலி 10 ரூபாயும், முத்துக்குளிக்க போனால் ரூ.15ம் கூலியாக கிடைக்கும் என்கிறார். மழைக்காலத்தை தொடர்ந்து முத்துக்குளித்தொழில் நடைபெறும் என்பதால் ஓரளவு கூலி கிடைக்கும், பிற சமயங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம் எனக்கூறும் இவர், என்னுடன் பணிபுரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை எனக்கு ஒரு பெரியவர் நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வூதியம் கேட்டு அரசுக்கு மனு அளித்தோம் இன்று வரை அதற்கு விடை தெரியல என்கிறார்.

Thanks:www.tamil.abplive.com
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com