பாண்டியபதிகள்
பரதவர்களின் மன்னர் குடும்பம் பாண்டியபதிகள்..!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏசுசபை பாதிரியார் "குபே" சுவாமியவர்கள் தனது பயண குறிப்பில் பரதவர் நாட்டின் ஏழுகடற்றுறை ராஜாக்களான பாண்டியபதிகள் மற்றும் பரதவர்களை குறித்து இவ்வாறாக குறிப்பிடுகிறார்......
பரதவர் சமூகத்தவர்கள் ஜாதி தலைவன் என்னும் ஒரு மன்னரால் ஆளபடுகிறார்கள். (குறிப்பு: ஜாதி தலைவன் என்பது பாண்டியபதி ராஜாக்களின் பட்டங்களில் ஒன்று, இவர்கள் ஒட்டுமொத்த பரதவர் சமூகத்தவர்களின் பரம்பரை தலைவர்கள் என்பதால் இப்பட்டப்பெயர் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.)
ஆங்கிலேயர்கள் ராஜவம்சத்திற்குரிய சாயலை மட்டுமே இவருக்கு விட்டுவைத்துள்ளனர் என்பது உண்மையே இருப்பினும் இவரது வாக்கை சட்டமாக கருதி இவர் மீது அதிக பற்றுதல் கொண்டிருக்கும் இவரின் சொந்த மக்களிடையே இவர் அனுபவித்துவரும் அந்தஸ்தை அவர்களால் அபகரிக்க முடியவில்லை.
தற்போது ஆட்சியிலிருக்கும் மன்னர் டான் கேபிரியேல் டி குருஸ் வாஸ் பல்தான் (1856 - 1889) என்ற பாண்டியபதி வயது முதிர்ந்தவராவார். அவரது மகன் மரித்த நிலையில் அவர் பேரப் பிள்ளைகளில் ஒருவரே அடுத்த ராஜ பட்டத்திற்குரியவராக இருக்கிறார்.
பண்டைய காலம் தொட்டே ஆட்சியிலிருக்கும் மேற்கூறிய ராஜவம்சமானது பரதவர் நாட்டில் வெற்றிகரமாக கால்பதித்த போர்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது ஆட்சி உரிமையை தக்கவைத்து கொண்டது.
டச்சுக்காரர்களை எதிர்த்த பாண்டியபதி:-
(முன் குறிப்பு: கி.பி. 1658ல் டச்சு குடியரசு போர்சுகல் மன்னரின் பாதுகாப்பு பெற்றிருந்த பரதவர் நாட்டை கைப்பற்றி அப்போது ஆட்சியில் இருந்த ராஜா டான் சவியர் ஹென்றி டி குருஸ் கொரைரா (1646 - 1671) என்ற பாண்டியபதிக்கு ராஜா பட்டம் கட்டி அவரை நண்பராக்கி கொண்டனர். இருப்பினும் அரசியல் காரணத்திற்காக பரதவர்களை தங்களுடைய நெதர்லாந்தின் கால்வினிய கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக் கொள்ள தூண்டினர் டச்சுக்காரர்கள். அதற்கு பதிலடி கொடுத்தார் பாண்டியபதி)
பரவர் நாடு தலைவர்களின் கூட்டமைப்பு ஒன்று டச்சுக்காரர்களின் சமயத்தை கைகொள்கிரவர்களை கொலை செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. பரவன் ஒருவன் டச்சுக்காரர்களால் தூண்டப்பட்டு அவர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கால்வினிய தேவாலத்துக்குள் நுழைந்தான். இதனை கண்டு கோபமடைந்த மக்கள் மன்னரிடம் இவற்றை தெரிவித்தனர். மன்னர் உடனடியாக துப்பாக்கிகள் (Muskets) ஏந்தியிருக்கும் தமது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு அவ்வின துரோகியை தண்டிக்க டச்சு தேவாலயத்துக்கு முன் அவனை எதிர்பார்த்து காத்திருந்தார். அவன் வெளியே கதவருகே வந்ததும் துப்பாக்கி குண்டு அவன் உடலை துளைத்து உயிரற்றவனாக்கியது.
இதன்பின்னர் அங்கிருந்து மன்னரும், அவருடைய ஆட்களும் தங்களுக்கு எதிராக ஒரு விரல் கூட தூக்க துணியாமல் பிரமிப்புடன் பார்த்து கொண்டிருக்கும் டச்சுக்காரர்களுக்கு நடுவே மெதுவாக அவர்களை கடந்து சென்றார்கள். (குறிப்பு: இத் தண்டனை வழங்கிய மன்னரின் பெயர் ராஜா டான் காஸ்பர் அந்தோனி டி குருஸ் 1808-1839 என்ற பாண்டியபதி)
ஒவ்வொரு ஆண்டும் கடலில் எடுக்கப்படும் முத்து சிப்பிகளின் ஒரு குறிப்பிட்ட அளவு ஆங்கிலேய அரசுக்கும், மற்றொரு பகுதி பரவர்களின் மன்னருக்கும் மூன்றாவது பகுதி வறுமையில் வாடும் கத்தோலிக்க மிஷனரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
லூயிஸ் டி'ஆர் என்னும் பிரஞ்சு தங்க நாணயங்களை அந்நாட்டு மன்னரான எட்டாம் லூயிஸ் கிபி1640 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். பரவர் பெண்கள் தாங்கள் அணியும் கழுத்து மாலையில் இந்த லூயிஸ் டி'ஆர் பிரஞ்சு தங்க நாணயங்களை சேர்த்து உள்ளனர்.
பணக்கார பரவர் ஆண்கள் அனைவரும் தாங்கள் அணியும் மேல் சட்டையின் (Coat) பொத்தானையாக (buttons) லூயிஸ் டி'ஆர் பிரஞ்சு நாணயங்களை பயன்படுத்துகின்றனர். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரும், இந்த லூயிஸ் டி'ஆர் பிரஞ்சு தங்க நாணயங்களை தங்களது உடை ஆபரணங்களின் சேர்ந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் மேற்கூறியுள்ள தகவல் அனைத்தும் பாதிரியார் குபே சுவாமியவர்கள் பிரஞ்சு மொழியில் தான் எழுதியிருந்த பயண குறிப்பை இங்கிலாந்து நாட்டின் ஏசுசபையினர் 'தீ மந்த்' என்று அழைக்கப்படும் தங்களுடைய கத்தோலிக்க இதழில் அவர் அனுமதியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'A Visit to Pearl Fishery Coast' என்ற தலைப்பில் கிபி1889 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.
- UNI