வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday, 7 September 2024

திரளி முறி

மீன் குழம்பு வைக்கும்போது மீனைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றை மண்சட்டியலிட்டு, தேங்காய், மிளகாய், கறிச்சரக்குச் சேர்த்து அரைத்த கூட்டை இட்டு நீர்விட்டுக் குழம்பாக்கிப் புளியும் சேர்த்து அடுப்பில்வைத்துக் கொதிக்க வைத்து எடுப்பார்கள். இது ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்த செய்தி. தற்காலத்தில் மீன்குழம்பு வைப்பதிலோ பலவிதம். குழம்பில் உள்ள மீன்துண்டுகளை முறி என்று சொல்வதுதான் தற்போதைய பிரச்சனை. திரளி முறி என்ற பதத்தைச் சில தினங்களுக்கு முன் இணையத் தளத்தில் பார்த்தபோது எனது நினைவுக்கு வந்தது இந்த மீன்குழம்பும், மீன் முறிகளும்தான். மீனைத் துண்டு துண்டாக வெட்டி எடுக்கும் போது அந்தத் துண்டுகளை முறி என்று சொல்லுவது வழக்கம். அதுவும் திரளி முறி என்றவுடன் திரளிமீனின் முறி என்பது என்மனதில் தட்டியது. திரளி ஒருவகை மீன். அதிலே நானறிந்த மட்டில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கருந்திரளி மற்றையது வெண்திரளி. கருந்திரளியின் செதில்கள் கருமையாக இருக்கும். வெண்திரளியின் செதில்கள் வெள்ளை வெளீர் என்றிருக்கும்.

28.07.10 அன்றைய தமிழ் நெற் இணையத்தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையில் தென் இலங்கையின் ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் திசமாறகம என்னும் இடத்தில் சில காலத்துக்கு முன்னர் ஜெர்மனிய அகழ்வாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலவோட்டுத் துண்டின் விபரங்களைப் படித்தேன். இது சூளையில் சுட்டு எடுக்கப்பட்ட ஒரு மட்பாண்டத்தின் உடைந்த துண்டு. இக்கலவோடு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் அதிலே தமிழ் பிராமி எழுத்துக்களிலே “திரளி முறி” என்று எழுதப்பட்ட வாசகம் இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓட்டின் தொன்மையிலும் அதில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் பிராமி எழுத்திலும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களிடையே அதிக கருத்து வேற்றுமை காணப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் அது எழுதப்பட்டிருக்கும் முறையிலும், அந்த வாசகத்தின் விளக்கத்திலும் சிறிது வேற்றுமை இருக்பதாகத் தெரிகிறது.

இதுபற்றிய கருக்து முதலில் 24.06.10 அன்று வெளியாகிய இந்தியாவின் The Hindu பத்ததிரிகையில், தமிழர்களிடையே அகழ்வாராய்ச்சியில் மேதை எனக் கருதப்படும் ஐராவதம் மகாதேவன் அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் மட்பாண்ட ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்ட பழைய கண்டுபிடிப்புகளைப் பற்றி விளக்கிக் கூறிய அவர் அவ்வகைப்பட்ட கண்டுபிடிப்புகளால் சாதாரணமாக வாழ்ந்த பழந்தமிழ் மக்களிடையேயும் எழுத்தறிவு இருந்திருக்கிறது என்றும் அவர்கள் உபயோகித்த எழுத்து வடிவம் தமிழ் பிராமி என்றும் எடுத்துக் காட்டியிருந்தார்.
இவ்வாறு விபரிக்கின்ற போதுதான் மகாதேவன் அவர்கள் திசமாறகமவில் கண்டுபிடிக்கப்பட்ட “திரளி முறி” வாசக ஓட்டைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த வாசகத்தை விளக்கிய அவர் அதை “written agreement of the assembly” ” என்று கூறி தென் இலங்கையில் கி.மு. 300 ஆண்டளவில், உள்நாட்டுக் கடற்துறைத் தமிழ் வியாபாரிகள் ஒரு குழுவாக இயங்கி இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இலங்கையில் திஸ்ஸமகாராமாவில் கிடைத்த
தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு.

இலங்கை பற்றி செய்தி ஆகையால் இது இலங்கையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் கண்டு பிடிப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அகழ்வாராய்ச்சி நிபுணர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி அவர்கள், ஐராவதம் மகாதேவன் அவர்களுடைய கூற்றுகளை மறுக்க முடியாதபோதும் அந்த வாசகத்தை “குழுமத்தின் எழுத்துருவில் அமைந்த உடன்படிக்கை – அதாவது written agreement of the assembly” என்று கொள்வதில் இடர்ப்பாடு இருப்பதாயும் அதனை வேறு விதமாகவும் கொள்ள இடமுண்டு என்று கூறியிருக்கிறார். திரளி என்ற சொல்லுக்கு, திரள், திரணை, திரளி மீன் என்ற பொருள்களும், முறி என்ற சொல்லுக்கு துண்டு. கூட்டு, பகுதி என்ற பொருள்களும் உண்டென்று சுட்டிக்காட்டுவதோடு சாதாரணமான ஒரு வீட்டுப் பாவனை மட்பாண்டத்திலே குழுமத்தின் ஒப்பந்தம் என்ற வாசகம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேற்கண்ட இந்தக் கலவோடு ஒரு அளவுப் பாத்திரமோ, அல்லது சோற்றுத் திரணை வைக்கும் பாத்திரத்திரமோ அல்லது தட்டையான சிட்டியோ போன்ற ஒரு ஏதனத்தின் உடைந்த துண்டாக இருக்கலாம் என்றும் இது சாதாரண மக்களிடையே பாவனையில் இருந்த ஒரு எதனத்தின் பகுதியாக இருக்கலாம் என்றும் எனவே தென் இலங்கையில் தமிழர்கள் அக்காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

நாட்டு வழக்காகத் தமிழிலே ஒரு பழமொழி உண்டு. “ஆமையோடு முயல் முட்டை இடுமா?” என்பதுதான் அந்தப் பழமொழி. மேற்கண்ட இரு அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் அப்பொருள் விளக்கத்தில் பெரும் ஆமைகள் போன்றவர்கள். நானோ ஒரு குட்டி முயல். எனக்குத் தெரியாத ஒரு விடயத்தைப் பற்றி எழுதப்போவது ஆமைகளோடு முயல் முட்டை இடப்போவது போலத்தான் இருக்கும். இருந்தாலும் இப்பெரியார்களின் ஆராய்ச்சி விளக்கங்களைப் படித்தபோது இவர்கள் எத்துணை சிரத்தையோடும், கவனத்தோடும் இந்த ஆராச்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர்களுடைய பணியானது எவ்வளவு நுட்பமானதும், பொறுமையானதும், பெறுமதியானதும் என்று எனக்குத் தோன்றியது. மேலே குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. இவற்றைப் படிக்காதவர்கள் வசதியாயின் ஒருமுறை படித்தால் அவற்றின் பெறுமதி புலனாகும்.


கட்டுரைகளைப் படித்தபின் என் கற்பனைக் குதிரை பாயத் தொடங்கியது. அது காட்டுக் குதிரைப் பாய்ச்சல்தான் இருப்பினும் அதையும் கூறிவிடுகிறேனே. மீன், இறைச்சி, முதலிய மச்ச மாமிசத் தயாரிப்புகள் பழுதுபடாமல் நெடுநாட்கள் இருப்பதற்குப் பழங்காலத்தில் தேனிலும், புளியிலும் மட்பாண்டங்களில் இட்டுவைப்பது வழக்கம். அந்த வகையிலே பலவகைப் பட்ட மீன்களின் துண்டுகளை வௌ;வேறாக வெட்டி வௌ;வேறு மட்பாண்டங்களில் இட்டு அவற்றை அடையாளப் படுத்துவதற்காக அந்த ஏதனங்களின் அப்போது நடை முறையில் இருந்த தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதிவைத்திருக்கலாம். இது வியாபார முறையில் செய்ப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது தனிப்பட்ட வீட்டுப் பாவனைக்குச் செய்யப்பட்தாகவும் இருக்கலாம். தற்காலத்தில் நாம் மிளகாய்த்தூள, சரக்குத்தூள் என்று ஏதனங்களில் எழுதிவைத்தல் போல இருக்கலாம். மீன் வகைகளைத் வறட்டல் தீயல்களாக வைத்து வௌ;வேறு ஏதனங்களில் இட்டு அடையாயப் படுத்தியிருக்கலாம். “திரளி முறி”, “கொய் முறி” “சுறா முறி” என்று பலவகை இருக்கலாம். அவ்வகைப்பட்ட ஏதனங்கள் ஒன்றின் உடைந்த துண்டுதான் இந்தத் “திரளி முறி” என்ற வாசகத்தைக் கொண்ட கலவோடாக இருக்கலாம் என்று என் காட்டுக்குதிரைக் கற்பனை பாய்ந்தது. இது கற்பனைதான் உண்மை ஆராய்ச்சி விளக்கம் அல்ல. அதை நிபுணர்கள் தந்திருக்கிறார்கள். படித்துப் பயன் பெறவேண்டியது நமது கடமை.

தொகுப்பு- நா.மகேசன்
புகைப்படம்- முத்தமிழ் வேந்தன்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com