வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday, 13 September 2024

வடுகப்படையுடன் பரதவர்


வடுகப்படை எதிர்த்த திருநெல்வேலி பரதவர்..!
(மறைக்கப்பட்ட வரலாறு)
 
ஒரு நாட்டின் மன்னரையும், அவரது படையையும் வேற்றரசன் படைக் கொண்டு வந்து வீழ்த்திய பிறகு, தான் வீழ்த்திய மன்னரின் குடிகள் அனைத்தின் மீதும் அவன் அதிகாரம் செலுத்த தொடங்குவான். ஆனால் வீழ்த்தப்பட்ட மன்னரின் குடிகளுள் போர்செய்யவல்ல தாட்டியமும், வீரமும் இருந்த குடி மட்டும் புதியவரின் ஆட்சியை ஏற்க மறுத்து தங்களது நிலப்பரப்பில் தனியரசாக இயங்க தொடங்குவர். ஏனைய குடிகள் அப்புதியவரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவர்.

விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்புகள் இருந்தது. அதனை சரிசெய்வதற்காக விசுவநாத நாயக்கர்(1529-63) என்பவரை மதுரையின் ஆட்சியாளராக கிருஷ்ணதேவராயர் நியமிக்கிறார். விசுவநாத நாயக்கரின் மதுரை அரசை பலப்படுத்தி பிரச்சினைக்குரிய திருநெல்வேலியை கைப்பற்ற "வித்தாலராயர்" என்பவர் தலைமையில் விஜயநகர படைகள் கி.பி. 1544 முதல் திருநெல்வேலியில் படையெடுக்க தொடங்கினர்.

இக்காலத்தில் தெற்கு திருநெல்வேலியை ராமவர்மா என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவர் தம்பி மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரின் ஆட்சியாளராக இருந்தார். கி.பி.1547ல் ராமவர்மா தனது அரசை பாதுகாக்க தனது ராஜ்யத்தின் வட எல்லையான குன்னத்தூரில் ஜனவரி 7 ஆம் தேதி தனது தம்பி மார்த்தாண்ட வர்மாவுடன் முகாமிட்டிருந்தார்.

இதன்பிறகு தனது ராஜ்யத்தின் வடபகுதியை விஜயநகர படைகளிடம் இழந்துபோன ராமவர்மா ஏப்ரல் 17 ஆம் தேதி ஏர்வாடியில் தனது தம்பியுடன் முகாமிட்டிருந்தார். ஜுன் - ஜூலை மாதங்களில் விஜயநகர படைகளும் - ராமவர்மா, மார்த்தாண்டவர்மா கூட்டு படைகளும் தெற்கு திருநெல்வேலியில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் 'பல்டாசார் நூநெஸ்' என்னும் போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் பரதவர்களுடைய பாதுகாப்பு பெற்று அவர்களுடைய கிராமம் ஒன்றில் கோவிலில் தங்கியிருந்தார். விஜயநகர படைத் தளபதி திருநெல்வேலி பரதவர் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக் கொள்ள அவர்கள் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த மேற்கூறிய ஏசுசபை பாதிரியாரை சிறையெடுத்துவர தனது வீரர்களை அங்கு அனுப்பி வைத்தான்.

விஜயநகர வீரர்கள் ஈட்டி, வில், துப்பாக்கிகளுடன் பரதவ கிராமத்துக்குள் புகுந்து கோவிலுக்குள் நுழைந்து நான் மேற்சொன்ன "பல்டாசார் நூநெஸ்" பாதிரியாரை சுற்றி வளைத்து அவரை கைது செய்து தங்கள் படைத் தளபதியிடம் கொண்டு சென்றனர். அவ்வூர் பரதவர்கள் தங்களை பகைத்த விஜயநகர படைத் தளபதி மீது போர் தொடுக்க வளைதடி, போர் வாள் உட்பட போராயுதங்கள் அனைத்தையும் ஏந்தி அணிவகுத்து நின்றனர். பிறகு அருகில் இருந்த பரதவர் கிராமம் ஒன்றுக்கு படைத்துணை வேண்டி தூதனுப்பினர். அங்கிருந்த பரதவர்களோ உடனடியாக கைத்தாளக் கருவி - போர் முரசடித்து அணிவகுத்து அவ்விடத்திற்கு வந்தனர்.

இப்படி பரதவர்கள் பெரும்படையாக வந்து விஜயநகர படைமுகாமை தாக்கினர். விஜயநகர தளபதியோ பாசறையில் அமைந்துள்ள தனது வீட்டினுள் சென்று ஒழிந்து கொண்டான். பரதவர்கள் அவன் வீட்டை முற்றுகையிட்டனர். விஜயநகர தளபதி இதன்பிறகு எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள ஒரு கோவிலுக்குள் சென்று தாழ்பாள் இட்டுக் கொண்டான்.

இதே சமயம் அவ்வூர் பரதவ பெண்கள் விஜயநகர பாசறைக்குள் புகுந்து அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த பாதிரியாரை விடுதலை செய்தனர். இருப்பினும் தங்களை பகைத்த விஜயநகர தளபதி இருக்குமிடம் அறிந்து அவனை வெட்டி கொலை செய்ய கோவிலுக்கு விரைந்தனர் பரதவர்கள். பாதிரியார் இதனை அறிந்து விஜயநகர தளபதியை கொலை செய்யாமல் திரும்பி வருமாறு பரதவர்களை இரண்டு மூன்று முறை கேட்டு கொண்டதின் பேரில் அன்று விஜயநகர தளபதி பரதவர்களின் வாளுக்கு தப்பினான்.

இதன்பிறகு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று விஜயநகர பேரரசுடன் நடந்த அமைதி உடன்படிக்கையின்படி தனது திருநெல்வேலி பகுதியை ராம வர்மா இழந்தார். இவர் தம்பி மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்யத்தின் அரணாக இருந்த மேற்கு தொடர்ச்சி மலையையும் அதன்மீது அமைக்கப்பட்டிருந்த கோட்டையையும் விஜயநகரத்திடம் இழந்தார்.

திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக விஜயநகர வடுகர்களிடம் வீழத் தொடங்கியது. "மனுவேல் டி மொரையஸ்" என்னும் போர்சுகீசியர் கி.பி. 1549ல் ஜனவரி 3 ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தில் பரதவர் நிலப்பரப்பை பரதவர் ராஜ்யம் என்றே குறிப்பிடுவதன் மூலம் விஜயநகர படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான திருநெல்வேலியில் பரதவர்கள் தனியரசாக இயங்க தொடங்கினர் என்பதனை நாம் ஆதாரபூர்வமாக அறிய முடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிழக்கில் பிரம்மதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில்... .

"கி.பி. 1550ல் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பேரரசர் சதாசிவராயர் ஆட்சியில் இராமப்ப நாயக்கர் என்பவர் கைலாசமுடைய மெய்யனார் கோவிலுக்கு ஒரு கிராமத்தையும், அதன் வருவாயும் வித்தால ராயரின் சேவைக்காக வழங்கினார். அந்த கிராம வருவாயின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேற்கூறிய கோட்டையின் பராமரிப்புக்கு செலவிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 1551ல் விஜயநகர வடுகர்கள் திருநெல்வேலியை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்த நிலையில் பரதவர்கள் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ள அதே வருடம் கடைசி மாதத்தில் பரதவர் கிராமம் ஒன்றுக்குள் புகுந்து அவர்கள் பாதுகாப்பு பெற்று அங்கு தங்கியிருந்த ''பவுலோ டி வாலே'' என்னும் இத்தாலி தேச ஏசுசபை பாதிரியாரை சுற்றி வளைத்து கைது செய்து நான் மேற்கூறிய அவர்களது கோட்டைக்கு கொண்டு சென்று அங்கு சிறை வைத்தனர்.

சரியாக ஒரு மாதம் கழித்து பரதவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ள அக்கோட்டையை தாக்கினர். பரதவர்கள் வந்து அக்கோட்டையை தாக்கியதில் விஜயநகர வடுகர்கள் நாளா பக்கமும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இதன்பிறகு விஜயநகர கோட்டையை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பரதவர்கள் அக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாதிரியாரை விடுதலை செய்தனர்.

०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

போருக்கான காரணங்கள்:-

பரதவர் Vs விஜயநகர வடுகர் யுத்தம் திருநெல்வேலியில் நடக்க காரணம் பற்றி தெரிந்து கொள்ள முதலில் அத்திருநெல்வேலியில் கி.பி. 1544ல் விஜயநகர சேனைகள் அங்கு படையெடுத்து வரும் முன் பரதவர்களின் அதிகார நிலை குறித்து தெரிந்து கொள்ளல் அவசியம்.

கி.பி. 1542ல் திருநெல்வேலி வந்திருந்த ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சேவியர் தனது குறிப்பில்...

"பரதவ கிராமங்கள் தனி அரசாங்கத்தை கொண்டிருக்கிறது, அங்கு மன்னர்களின் தலையீட்டின்றி முழு அதிகாரமிக்கவர்ளாக பரதகுல தலைவர்களே இருக்கின்றனர்" என்று குறிப்பிடுகிறார்.

ஏசுசபை பாதிரியார்கள் உலகில் எங்கு சென்றாலும் அந்த அந்த நிலப்பகுதியின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பு பெற்றே அவர்கள் தங்கியிருப்பது வழக்கம். திருநெல்வேலி வந்திருந்த ஏசுசபை பாதிரிமார்கள் பரதவர்களை அவர்களின் நிலப்பகுதியின் ஆட்சியாளராக கருதி அவர்கள் பாதுகாப்பில் தங்கியிருந்தது அத்திருநெல்வேலியில் புதிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த விஜயநகர வடுகர்களுக்கு பிடிக்கவில்லை.

திருநெல்வேலி பரதவர் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ளவே விஜயநகர வடுகர்கள் பரதவர் கிராமங்களுக்குள் புகுந்து பரதவர் பாதுகாப்பில் தங்கியிருந்த ஏசுசபை பாதிரியார்களை சிறையெடுத்தனர். இதே விஜயநகர வடுகர்கள் ஏசுசபை பாதிரியார்களுக்கு தங்களது ஆட்சிபகுதியில் பாதுகாப்பு கொடுத்து தங்கியிருக்க செய்த சான்றுகள் எனலாம்.

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் எனில் ராணி மங்கம்மாள், தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், குமாரவாடி நாயக்கர், எட்டையபுரம் நாயக்கர் ஆகியோரை சொல்லலாம். தென்பாண்டி பரதவரை போலவே வடபாண்டியில் அவர்கள் நிலப்பகுதியில் அதிகாரமிக்கவர்களாக இருந்த கள்ளர்களின் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த ஏசுசபை பாதிரிமார்களையும் விஜயநகர வடுகர்களின் பிரதிநிதிகள் சிறையெடுத்துள்ளனர். அதற்கு கள்ளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக...

விஜயநகர பிரதிநிதிகளில் கடைசியானவரான திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஆளுநராக திருச்சிராப்பள்ளியில் குப்பை ஆண்டி என்பவன் இருந்தான். இந்த குப்பை ஆண்டியின் மணியக்காரன் ஒருமுறை கள்ளர்கள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ள வலிமையான படையுடன் காந்தளூர் என்னும் கள்ளர் கிராமத்துக்குள் புகுந்து கள்ளர்களின் பாதுகாப்பில் அங்கு தங்கியிருந்த ஏசுசபை பாதிரியாரை சிறையெடுத்தான். சினந்தெழுந்த கள்ளர்கள் ஒன்றினைந்து தங்களை பகைத்த "குப்பை ஆண்டி" மீது போர் தொடுத்தனர்.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

கி.பி. 1546 முதல் கி.பி. 1552 வரை பரதவர்கள் திருநெல்வேலியில் விஜயநகர வடுகர்களுடன் போரிட்டது பற்றிய ஆதாரம்:

St Francis Xavier His life, His Times Vol III by Jesuit George Schurhammer Pg 332,333,518 and 525
Oriente Conquista Vol l by Portuguese Jesuit Fransisco de Sousa Pg 285
French Jesuit Leon Besse, la mission du Madure. Pg 381-2

1.ராணி மங்கம்மாள், 2.தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், 3.குமாரவாடி நாயக்கர், 4.எட்டையபுரம் நாயக்கர் ஆகியோரின் பாதுகாப்பில் ஏசுசபை பாதிரிமார்கள் தங்கியிருந்த ஆதாரம்:

1.Bertrand, la Mission du Madure Vol III Pg 60-76.
2.Travels of Jesuits in to Various Parts of the World by John Lockman. Pg 460-68.
3.French Jesuit Father Leon Besse, la Mission du Madure. Pg 127-34
4.Bishop Robert Caldwell, History of Tinneveli. Pg 236-7

கள்ளர்களின் பாதுகாப்பில் ஏசுசபை பாதிரியார் தங்கியிருந்ததையும், பிறகு வடுகர்களால் சிறையெடுக்கப்பட்டதையும், கள்ளர் அவர்கள் மீது போர் தொடுத்ததையும் பற்றிய ஆதாரம்:

A General History of Pudukkottai State by S. Radhakrishna Aiyer Pg. 107





















- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com