வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 25 March 2015

வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - (1)
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்



                         “சந்த செபஸ்தியாரின் உபகாரத்தால் நிம்பநகரோர் பெற்ற சகாயங்களை எழுத முற்பட்டால் அதனை என்றும் எழுதி முடிக்க இயலாது எனினும் எடுத்துக் கொண்ட கருத்துக்கிணங்கி அவர்மீது வேம்பாற்றுவாசிகள் கொண்டுள்ள தொடர்ச்சியான பக்தியை விளக்கி, சில காரணங்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.” இக்கட்டுரை 1952 ஆண்டில் வெளியான பொன்முடி சூட்டுவிழா மலர் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.


Our Lady of Snows
1536 ஆம் ஆண்டு கத்தோலிக்க மறையை தழுவிய வேம்பாற்றுவாசிகள் பரிசுத்த ஆவிக்கென தமது பங்கு ஆலயத்தை அர்ப்பணித்திருந்தாலும் தமிழ் மரபிற்கேற்ப பரதர் மாதாவாம் திவ்ய தஸ்நேவிஸ் ஆண்டவளை தமது முழு முதல் பாதுகாவலியாக, குல தெய்வமாகக் கொண்டும், நமது ஆலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் செங்கோல் அன்னையை தங்களைக் காக்கும் அன்னையாகவும், சந்த செபஸ்தியாரை வேம்பாற்றின் பாதுகாவலராக, காவல் தெய்வமாகக் கொண்டனர், சந்த செபஸ்தியாரின் மேல் கொண்ட பக்தி ஆரம்ப முதலே இருந்த போதிலும் 18 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வேம்பாற்றில் பரவிய கொள்ளை நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அடிக்கடி தங்களுக்கு ஏற்பட்ட வடுக மற்றும் மறவ நாட்டுப் படையெடுப்புகளில் தங்களை வழிநடத்த உரோமையின் சேனைத் தளபதியான செபஸ்தியாரின் பாதம் பற்றினர்.

அன்று தொடங்கி இன்று வரை சந்த செபஸ்தியாரின் மேல் ஆழ்ந்த பக்தியும், பற்றுறுதியும் கொண்டு அவரை “ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன்” என மனமுருக அழைத்து மகிழ்கின்றனர். வேம்பாற்றின் கவிஞர்கள் பலரும் அன்று தொடங்கி இன்று வரை அவரின் பேரில் தேனினுமினிய பல்வேறு பாடல்களையும், செபங்களையும், விருத்தப்பாக்களையும் இயற்றி, அவரைப் போற்றி வருகின்றனர்.

1923 ஆம் ஆண்டு உருவான முத்துக்குளித்துறை மறைமாவட்டம் சந்த செபஸ்தியாரின் பேரில் பக்தி முயற்சிகள் மேலும் பெருக வழி வகை செய்தது. 1934 முதல் 1939 ஆம் ஆண்டு வரை சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள் வேம்பாற்றில் பங்குத் தந்தையாக இருந்த போது நிம்பவாசிகளின் பக்தியை மேலும் வலுசேர்க்கும் விதமாக மிக. வந். திபூர்சியுஸ் ரோச் ஆண்டகையிடம் பரிந்து பேசி சந்த செபஸ்தியாரின் கால் மூட்டு எலும்புத்துண்டின் சிறு பகுதியை உரோமையிலிருந்து அருளிக்கமாக கொண்டு வந்து சேர்த்தார். அருளிக்கம் (Relic) மூலம் புனிதரின் அருகிருப்பு வேம்பாற்றில் உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் சந்த செபஸ்தியாரின் திருவிழா நவநாட்களில் புனிதரின் அருளிக்கத்திற்கு சிறப்பான வழிபாடும், மரியாதையும் நிம்பவாசிகள் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 அன்று இரவு புனிதரின் அருளிக்கமானது அனைத்து மக்களுக்கும் முத்தி செய்ய அளிக்கப்படுகிறது என்பது வேறெந்த ஊர்களிலும் இல்லாத நடைமுறை சிறப்பாகும்.

Relic of St. Sebastian
இவ்வாறு வேம்பாற்றுவாசிகளால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட சந்த செபஸ்தியாரின் அருளிக்கமானது 2006 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று களவு போனது. அப்போது வேம்பாற்றுவாசிகளின் பக்தி பெரும் கலக்கமாக உருவாகியது. இறுதி வரை அருளிக்கமானது நிம்பநகரோருக்குக் கிடைக்காமல் போனது. எனினும் இறைவனின் அருளாலும், வேம்பாற்றுவாசிகளின் வேண்டுதலாலும், அதுசமயம் பங்குத்தந்தையாக இருந்த சங். ரஞ்சித்குமார் அவர்களின் உதவியாலும், மிக. வந். யுவான் அம்புராய்ஸ் ஆண்டகையின் பரிந்துரையினாலும் உரோமையிலிருந்து சந்த செபஸ்தியாரின் திருத்தலைமுடியின் சில பகுதி மீண்டும் அருளிக்கமாக 2007 ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று வேம்பாற்றுவாசிகளுக்குக் கிடைத்ததன் மூலம் புனிதரின் அருகிருப்பு மீண்டும் நிம்பவாசிகளுக்குக் கிடைத்துள்ளது.


இந்நிலையில் 1951-52 ஆண்டுகளில் வேம்பாற்றுப் பகுதியில் காலரா என்ற கொடிய நோய் பரவிய போது இப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கும் கடும் உடல்நலக்குறைவும், இறப்பும், பெரும் பாதிப்பும் ஏற்பட்டது. நிம்பவாசிகள் சந்த செபஸ்தியாரை வேண்டிக் கொண்டதன் பேரில் முழுமையாக பாதுகாக்கப்பட்டனர். எவ்வித சேதங்களையும் நிம்பவாசிகள் சிறிதளவிலும் பெறவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இந்த நிகழ்வு சந்த செபஸ்தியார் வேம்பாற்றுவாசிகள் மேல் கொண்டுள்ள அரவணைப்பிற்கு தக்க சான்றாக இன்றளவும் திகழ்கிறது.இது குறித்து அந்த காலகட்டத்தில் வேம்பாற்றில் வாழ்ந்த ரங்காசாரியின் மனைவி ரெங்கம்மாள் என்பவர் சிவந்த நிறமுடைய ஆஜனுபான தோற்றமுடைய ஒருவர் கையில் வில் ஏந்தியவராய் கோவிலை சுற்றியவாறு தெருக்களை நோக்கி அம்புகளை எய்து, பாதுகாத்துக் கொண்டிருப்பதை இரவில் தரிசனம் மூலம் கண்டதாக சாட்சியம் அளித்துள்ளார். ....................................


- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com