வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 26 March 2015

சங்கதி சொல்லும் கல்வெட்டுக்கள் - 1

சங்கதி சொல்லும் கல்வெட்டுக்கள்

           வேம்பாற்றில் 1536 ல் கத்தோலிக்க மறையைத் தழுவிய பரதவ மக்கள் தங்களுக்கென ஆலயம் ஒன்றினை உருவாக்கினர். 1579 ஆம் ஆண்டின் சேசு சபை குறிப்பில் வேம்பாற்றிலுள்ள ஆலயமானது முத்துக்குளித்துறையின் ஆலயங்களில் மிகப் பெரியதும், உரோமாபுரியில் காணப்படும் ஆலயங்களுக்கு நிகரானதுமாக உள்ளது என்ற குறிப்பு காணப்படுகிறது. 

தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு படையெடுப்புகளாலும், காலத்தின்  மாற்றத்தாலும் அவ்வாலயம் சிதைவுற்றது. இதன் பின் அதே இடத்தில் புதிய ஆலயம் ஒன்றினை இரண்டாவதாக நம்மவர்கள் அமைத்தனர் அவ்வாலயமும் சிதைவடைந்ததும் தற்போதுள்ள ஆலயத்தை உருவாக்கி  1915 ல் அபிஷேகமும் நடத்தினர்.

புதிய ஆலயத்தை அமைத்ததும் தங்களின் பழைய ஆலயம் இருந்த பகுதியை மையவாடியாக மாற்றினர். 1963 ல் மையவாடியான ஊருக்கு வெளியே சென்றது 1964 ஆம் ஆண்டு வரை ஊரின் மையப்பகுதியிலே மையவாடி அமைந்திருந்தது. பின் மையவாடி இருந்த  இடத்தில் நம்மவர் திரு. செல்வம் காகு அவர்கள் புனித செபஸ்தியாரின் மணிமண்டபத்தை அமைத்தார். 

தற்போதைய புனித செபஸ்தியார் மணிமண்டபத்தின் பின்புறம் கல்லறைக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு கல்லறைக் கல்வெட்டு என்பதால் இக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நபர் குறித்த செய்திகளே காணப்படுகின்றன. எனினும் அதனையும் கருப்பொருளாகக் கொண்டு வரலாற்றை வெளிப்படுத்தும் முயற்சியே இக்கட்டுரையாகும்.
           அக்கல்வெட்டில் முதலாவதாக மயில் சின்னமும் அதைத் தொடர்ந்து கீழே காணப்படும் வசனங்களும்; பொறிக்கப்பட்டுள்ளன

1602 ம் வருசம் ஐப்பசி மாதம்
2ம் தேதி வேம்பாத்தில் பட்டங்கட்டி
சுவாம் வாசு அடைப்பனார்
மகள் அம்புறொசு க்கூநு  வுடைய
பெண்சாதி மரிய தவாசு வை
அடக்கின குழி வாசல்

கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இக்கல்வெட்டினை நோக்கும் போது இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1602 என்றும் ஐப்பசி மாதம் இரண்டாம் தேதி என்பதை தெளிவாக அறிய முடிகிறது. இக்கல்வெட்டில் மயில் சின்னமும் பட்டங்கட்டி அடைப்பனார் என்ற பட்டப்பெயரும் காணப்படுகிறது. முதலாவதாக மயில் சின்னம் என்பது, குறுநில மன்னர்களாக விளங்கிய பரதவரின் நான்கு சின்னங்களுள் மயிலும் ஒன்றாகும். மேலும் பரதவரின் மன்னராக விளங்கிய ஜாதித் தலைவரின் பயணப் பல்லாக்கிலும் மயில் சின்னம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்பதும், அவரது 21 கொடிகளில் மயில் கொடியும் ஒன்றாக விளங்குகிறது.


                 அவற்றுடன் மட்டுமின்றி இக்கல்வெட்டின் சமகாலத்தை ஒட்டிய கல்வெட்டுகள் தூத்துக்குடி மற்றும் வீரபாண்டியன்பட்டணம் ஆகிய பகுதிகளில் உள்ளன. அக்கல்வெட்டுகளிலும் மட்டுமல்லாது  பரதவ ஜாதித் தலைவரின் பல்லக்கிலும் மயில் சின்னமே காணப்படுகிறது. இவை அனைத்தையும் உற்றுநோக்கும் போது மயில் என்பது பரதவரின் அரச சின்னமாக இருந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது.

           அடுத்ததாக வேம்பாத்தில் என்பது நமதூரைக் குறிக்கும். அக்காலம் முதலே நமதூர் வேம்பாறு என்றே வழங்கி வந்திருக்க வேண்டும் என்பதற்கு தக்க சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது. ஏனெனில் வேம்பாற்றில் என்பதே இங்கு வேம்பாத்தில் எனப் பொறிக்கப்பட்டுள்ளது. வேம்பார் என்றிருந்தால் வேம்பாரில் எனப் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கல்வெட்டின் மூலம் வேம்பாறு என்ற பதமானது அக்காலத்திலே நமதூருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது. எனினும் புனித சவேரியார் தமது கடிதங்களில் நமதூரை பேம்பார் எனக் கையாண்டுள்ளார் என்பதையும் நாம் இங்கு நினைவு கூர்தல் வேண்டும். 

போர்த்துக்கீஸியரின் ஆளுகைக்கு முன்பு பரதவ மக்கள் தங்கள் ஊர் தலைவர்களை பட்டிங்கட்டிகள் என்றே அழைத்து வந்தனர். போர்த்துக்கீஸியரின் ஆளுகைக்குப்பின் போர்த்துக்கீஸியர்கள் புதிய சாதித்தலைமையை உருவாக்கினர். அவற்றை வேம்பாறு முதல் மணப்பாடு வரை வாழ்ந்த பரதவர்கள் ஏற்றுக் கொண்டனர். எனவே தான்  அப்பகுதிகள் எழுகடற்றுறை என்றும், சாதிதலைவனார் ஏழூர்கோமகனார் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் பெரியதாழை முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்த பரதவர்கள் புதிய சாதித்தலைமையை ஏற்க மறுத்து தங்களின் பழைய உள்ளுர் தலைவர்களான பட்டங்கட்டிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.

               இவை மட்டுமின்றி பட்டங்கட்டி என்பது பரதவ சாதித் தலைவரால் அளிக்கப்படும் உயர்ந்த விருதாகும். சிவப்பு நிறத்தில் கோடுகள் வரையப்பட்ட துணியினை ஊரில் நன் மதிப்பு பெற்றவருக்கு தலையில் பரதவ சாதித் தலைவர் அணிவித்து விடுவார். அவர்கள் பட்டங்கட்டிகள் என அழைக்கப்படுவர். சமூக அந்தஸ்தினைப் பெற்றுள்ள ஊர் பெரியவர்கள் பலரும் இப்பட்டத்தைப் பெறுவர். ஆனால் கல்வெட்டில் காணப்படும் பட்டங்கட்டி என்பது போர்த்துகீஸியரால் இராமேஸ்வரம் முதல் வேம்பாறு வரையான கடலோரப் பகுதியை கண்காணிக்கும் உள்நாட்டுத் தலைவராகும்.

               அக்காலத்தில் இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையான கடற்பகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஒன்றை நிர்வாகிப்பவருக்கு பட்டங்கட்டி என்ற விருதை போர்த்துக்கீஸியர் வழங்குவர் அவ்வாறு அப்பகுதிகளில் ஒன்றை நிர்வகித்து வந்தவரே நமதூரின் சுவாம் வாசு அடைப்பனார் ஆவார். இதில் அடைப்பனார் என்பது ஜாதித் தலைவரால் உள்ளுர் நிர்வாகத்தை கவனிக்க அமைக்கப்பட்ட ஊர் தலைவர் ஆவார். இதன் மூலம் இவர் இரண்டு பொறுப்புகளையும் நிர்வாகித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இவை மட்டுமின்றி இக்கல்வெட்டு மூலம் பரதவரில் பட்டங்கட்டி, அடைப்பனார் என்ற பதவிகள் நடைமுறையில் இருந்ததினை இக்கல்வெட்டு உலகிற்கு தெரியப்படுத்துகிறது.

                               
1568 ல் வேம்பாற்றில் மறைபணியாற்றிய சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகள் வேம்பாற்றில் வாழ்ந்த பட்டங்கட்டியரை முத்துக்குளித்துறையின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என தம் கடிதம் ஒன்றின் மூலம் புனித இஞ்ஞாசியாருக்கு தெரிவிக்கிறார் என்பதையும் நாம் இங்கு நினைவு கூர்தல் மிகவும் பொறுத்தமானது.

               இக்கல்லறைக் கல்வெட்டு வேம்பாறு பட்டங்கட்டி சுவாம் வாசு அடைப்பனாரின் மகளும், அம்புறொசு க்கூநுவுடைய பெண்சாதியுமான மரிய த வாசு என்ற பெண்ணின் கல்லறையின் மேல் அமைந்த கல்வெட்டாகும். இதில் வாசு மற்றும் க்கூநு என்பது பரதவரின் குடும்பப் பெயர்கள் ஆகும்.

               வேம்பாற்றில் அமைக்கப்பட்ட முதல் ஆலயத்தை அமைக்க வேம்பாறு பட்டங்கட்டி சுவாம் வாசு அடைப்பனாரின் உதவியை சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகள் பெற்றிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது. அவ்வாலயமே உரோமையின் ஆலயங்களின் அழகிற்கு சற்றும் குறையாமல் பெரிய ஆலயமாக அமைந்திருந்தது. அத்துடன் அக்காலத்தில் சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகளே வேம்பாறு, தூத்துக்குடி மற்றும் புன்னக்காயல் பகுதிகளின் பங்குத்தந்தையாகப் பணியாற்றினர். எனவே போதிய குருக்கள் இல்லாததால் ஊர்தலைவர்கள் மற்றும் கோவில் பிள்ளைகளின்  பொறுப்பிலே ஆலயம் பராமரிக்கப்பட்டது. முத்துக்குளித்துறைக்கு வந்து சேர்ந்த புனித சவேரியார் இங்குள்ள மக்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். எனவே போதிய குருக்களை அனுப்புமாறு தம் கடிதத்தில் புனித இஞ்ஞாசியாருக்கு தெரிவிப்பதை நாம் நினைவு கூர்தல் அவசியமாகும். 

               இவற்றின் மூலம் கோயிலின் பராமரிப்பு காரியங்களில் ஈடுபடும் பொறுப்பினைப் பெற்ற வேம்பாறு பட்டங்கட்டி சுவாம் வாசு அடைப்பனாரின் மகளை அக்காலத்தில் ஆலய முற்றத்தில் அடக்கம் செய்திருக்கலாம் (தற்போது குருக்களுக்கு அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுவதைப் போல) எனவும், ஆலயம் பழுதடைந்ததும் அக்கற்களைக் கொண்டே புதிய ஆலயம் அமைக்கப்பட்டதால் அக்கல்வெட்டு அதே இடத்திலே நிலை பெற்று தற்போதைய இடத்தில் காணப்படுகிறது எனக் கொளல் வேண்டும்.

இவையனைத்தையும் விட வேம்பாற்றில் நிலவிய சுத்தமான தமிழ் மொழி நடைச் சிறப்பினை அறிய இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. இக்கல்வெட்டில் பிற மொழி கலப்பின்றி  அனைத்து எழுத்துகளும் தமிழ் வரி வடிவத்தையே கொண்டுள்ளன. தமிழின் அச்சுத் தந்கை என அழைக்கப்படும் சங். ஹென்றிக் ஹென்றிக்ஸ் சுவாமிகள் தாம் தமிழ் பயின்றது வேம்பாற்றிலே என்பதை தம் கடிதத்தில் தெளிவுபடுத்துகிறார். இன்றளவும் சுத்தமான தமிழ் பெயர்கள் வேம்பாற்றில் நிலவி வருவதும் மற்றைய கடற்கரை ஊர்களைத் தவிர்த்து வேம்பாற்றில் பேசப்படும் பேச்சு வழக்கும் சிறப்பானது என்பது உள்ளங்கை நெல்லிகனி ஆகும்.

               மொழி சீர்திருத்தமானது வீரமா முனிவரால் அறிமுகம் செய்யப்பட்டது என்ற நோக்கில் காணும் போது 1742-43 ஆகிய இரு வருடங்களில் வேம்பாற்றில் மறைபணி ஆற்றிய வீரமாமுனிவர் இக்கல்வெட்டிலும் சீர்திருத்தங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் என கருத முடிகிறது. ஏனெனில் அக்காலத்தில் மெய் எழுத்தின் மேல் மெய்ப்புள்ளிகள் இடும் பழக்கம் தமிழரிடம் காணப்படவில்லை. ஆனால் இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளின் மேல் மெய்ப்புள்ளிகள் காணப்படுகின்றன.

1537 ல் பரதவர் கத்தோலிக்க மறையைத் தழுவி இருந்தாலும் தற்காலத்தைப் போல் தங்கள் வாழ்க்கையில் முழுமையாக மத அடையாளங்களை இணைத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வாழ்ந்து இக்கல்வெட்டு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இக் கல்வெட்டில் பரதவரின் மயில் சின்னம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் தூத்துக்குடியில்
காணப்படும் கல்வெட்டில் மயில் சின்னமானது போர்த்துக்கீஸியரின் இலச்சினைக்குள் இடம் பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளன இது போர்த்துக்கீஸியரின் குடிமக்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. அவற்றுடன் “கிரியேலேசோனும், ஆவே மரியாவும் வேண்டிக் கொள்ளவும் என்ற வார்த்தைகள் காணப்படுகிறது. அடுத்ததாக வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள கல்வெட்டானது சற்று பிந்தியது. ஆனால் இக்கல்வெட்டில் இருமயில்கள் ஒரு சிலுவையைத் தாங்கிப் பிடித்தவாறு காணப்படுகிறது இதன்மூலம் கிறிஸ்தவம் பரதவருக்குள் உட்புகுத்தப்பட்டுள்ளதை நன்கு அறிய முடிகிறது. ஆனால் நமதூரில் கிறிஸ்தவமும், போர்த்துக்கீஸியரின் ஆளுகையும் நன்கு காணப்படிணும் இக்கல்வெட்டு நமதூர் பரதவர் தம் தனித்தன்மையுடன் வாழ்ந்தனர் என்பதைப் பறைசாற்றுகிறது.

           போர்த்துக்கீஸியர் மட்டுமே தங்கள் கல்லறைகளின் மேல் கல்வெட்டினைப் பொறிக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். அவர்களைப் பின்பற்றி பரதவரே தமிழகத்தில் முதன் முதலில் தமது கல்லறையின் மேல் கல்வெட்டைப் பொறித்தனர். சங்ககாலம் முதல் தமிழரிடம் கல்லறை கல்வெட்டு பொறிக்கும் வழக்கம் இருந்ததில்லை. மன்னரின் கல்லறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவ்வாறு நோக்கும் போது தமிழகத்தில் காணப்படும் மிகப்பழமையான கல்லறைக் கல்வெட்டு நமதூரிலே காணப்படுகிறது எனக் கொள்ள வேண்டும்.

தகவல்: திரு. தம்பி ஐயா பர்னாந்து 

- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com