வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 29 March 2015

வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 3

வேம்பாறும் அதன் பாதுகாவலரும்


வாய்மொழிச்சான்றுகளில் சில 

சான்று :
1. வேம்பாற்றுவாசிகள் கடல் தொழிலில் ஈடுபடும் போது கடலில் மிதந்து கரை நோக்கி வந்த ஒரு பெட்டியை தாங்கள் எடுக்க முயலும் போது அருகில் கடல் தொழில் செய்த அண்டையிலுள்ள வேறு ஊரினரும் எடுக்க முயல பெட்டிகரை சேராமல் கடலுக்குள் சென்றது. இரு ஊராரும் விலக பெட்டி கரை நோக்கிவர என மும்முறை நிகழ்ந்தது. இறுதியில்
வேம்பாற்றுவாசிகள் பெட்டியைக் கைப்பற்றித் திறக்க பெட்டியினுள் சந்த செபஸ்தியாரின் சொரூபம் காணக்கிடைத்தது. சொரூபத்தினை பவனியாகக் கொண்டு வந்து ஆலயத்தில் வைத்துப் பூஜித்தனர். அன்று இரவே சொரூபமானது காணாமல் போனது. மேற்படி ஊரினர் சொரூபத்தைத் திருடி தங்களின் ஆலயத்தில் வைத்திருந்தனர். சொரூபம் அவ்வூருக்குச் சென்றது முதலே அவ்வூரில் பலவித வியாதிகளும். வருத்தங்களும் தோன்றின. இதனிடையே சொரூபம் இருக்குமிடம் அறிந்து அங்கு சென்று கேட்க, அவர்களும் உரிமை கொண்டாடி தர மறுக்க, என பிரச்சனை அதிகமாக, வேம்பாற்றின் பங்குசுவாமிகளின் தலையீட்டால் சொரூபத்தை மீட்டுக் கொணர்ந்ததாகவும், பின்அவ்வூரில் பிணிகள் அகன்றதாகவும் தகவல் கூறப்படுகிறது.

2. வேம்பாற்றுவாசிகள் கடல் தொழிலில் ஈடுபடும் போது கடலில் மிதந்து கரை நோக்கி வந்த ஒரு பெட்டியை தாங்கள் எடுக்க முயலும் போது பெட்டி கரை சேராமல் கடலுக்குள் சென்றது. பெட்டி கரை நோக்கி வர, விலக என மும்முறை நிகழ்ந்து இறுதியில் கரை சேர பெட்டியை திறக்க முயல, அம்முயற்சி பலனளிக்கவில்லை. வேம்பாற்றின் பங்கு சுவாமிகள் செபம் செய்த பின் எளிதில் திறக்க சந்த செபஸ்தியாரின் லாவன்ய சொரூபம் பெட்டியினுள் இருந்தது. சொரூபத்தினை கடற்கரையிலிருந்து ஊர் முழுதும் பவனியாகக் கொண்டு வந்து ஆலயத்தில் வைத்து பூஜித்தனர். அந்நேரத்தில் வேம்பாறு பகுதியில் நிலவிய கடும் கொள்ளை நோய்கள் சந்த செபஸ்தியாரின் வருகையால் அகன்றதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.


புனிதரின் சொரூபம் கடல் வழியாகவே வேம்பாற்றிக்கு வந்து சேர்ந்தது என்பது நிம்பநகரோரின் ஒருமித்த கருத்தாகும். இத்தகவல்களுக்கு எந்த விதமான வரலாற்றுச் சான்றுமில்லையெனினும் இதனை மறுப்பதற்கில்லை. எனினும் காலம் தான் இவ்வுண்மையை கண்டறிய வேண்டும்.
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com