வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 25 March 2015

அப்பச்சி - ஓர் சமூக நினைவு


அக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.  இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம்  பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’ என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும்  விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’ என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு  இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம்  ஜமீன்தார் ஒருவர் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு  உடன்படவில்லை.

ஜமீன்தாரின் சிறையெடுப்பிலிருந்து காப்பாற்றும் வழிமுறையாக தென்திசையில்  சற்றுத் தொலைவிலுள்ள வேம்பாறு என்ற கடற்கரைச் சிற்றூருக்குத் தன் மகளை அவர்   அனுப்பிவிட்டார். அங்கு வாழ்ந்து வந்த பரதவர் சாதியினரின் தலைவரான அவரது நண்பர் வீட்டில் அடைக்கலமாக அப்பெண் ஒன்றிரண்டு உறவினர்களுடன்  தங்கியிருந்தாள். பெண்ணை அழைத்துப்போக வந்த ஜமீன் ஆட்களிடம் பெண் எங்கோ  ஓடிப்போய்விட்ட தாக கூறிவிட்டார்கள். அங்கு பெண்ணைத் தேடிக் கிடைக்காமல்,  விடாது தேடி, வேம்பாறு பரதவர் தலைவர் வீட்டில் அப்பெண் இருப்பதை அறிந்து  அவளைச் சிறையெடுக்கப் புறப்பட்டு வந்தனர்.

இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க  வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக  ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு  முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம்  செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து   திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள  முடியும்.

இந்த இடத்தில் சமூக நினைவு குறித்து பீட்டர் பார்க்  (2003-44) என்பவர் கூறும் செய்தியை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். சமூக குழுக்களால் நினைவு கட்டமைக்கப்படுகிறது. அக்குழுவைச் சார்ந்த தனி  மனிதர்கள் நினைவுகளை நினைவில் கொள்ளுகிறார்கள். ஆனால் அச்சமூகக் குழுக்கள் எது நினைவில் கொள்ளத்தக்கது, எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்பதைத்  தீர்மானிக்கின்றன. தாங்கள் நேரடியாக அனுபவித்தறியாத ஒன்றை அவர்கள் நினைவில்   கொள்ளுகிறார்கள். எனவே ஒரு குழுவினர், கடந்த கால நிகழ்வுகளைக் கூட்டாக  மறுகட்டமைப்பு செய்வதே நினைவு என்று கூறலாம். இக்கூற்றின் அடிப்படையில்  இந்த சமூக நினைவினை ஆராய்வோம்.

இந்த சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல்  வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன்   வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர்  செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு   மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’  என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.

ஒரு சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த நிலவுடமைக் கொடுமைகளைப் பெரும்பாலும்  மரபுவழி வரலாற்றாவணங்கள் பதிவு செய்வதில்லை. ஆனால் மக்களின் சமூக நினைவுகள்   அவற்றைப் பதிவு செய்து பாதுகாத்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு சமூகமும்  ஒவ்வொரு வகையில் இதைப் பாதுகாத்து வருகின்றது.

 ஆப்ப  நாட்டு மறவர்கள் ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லின் வாயிலாகவும், ஜமீன்தாரின்   பாலியல் வன்முறையிலிருந்து தம் மூதாதையர்கள் தப்பியதை நினைவில்  கொள்ளுகின்றனர்.

பெண்ணின் மானத்தைக் காப்பாற்றியவர்களைத் தந்தை என்று போற்றும் வழக்கம்  இருந்துள்ளமைக்கு செப்பேட்டுச் சான்று ஒன்று உள்ளது. 1873ஆம் ஆண்டைச்  சேர்ந்த இச்செப்பேடு கூறும் செய்தியின் சுருக்கம் வருமாறு: “கோம்பையில்  வாழும் இடங்கையைச் சேர்ந்த ஐந்து ஜாதி ஆசாரிமார்கள் மற்றும்  குடும்பன்மார்களின் பெண்களை வலங்கையார் சிறைபிடிக்க முனைந்தபோது பக்கிரிவா சேர்வை ராவுத்தர் என்பவர் அவர்களைத் தடுத்துப் பெண்களின் மானத்தைக்  காப்பாற்றினார்.

இதற்கு நன்றிக் கடனாக அவருக்கு மானங்காத்த தகப்பன் என்ற சிறப்புப் பெயர்  கொடுத்துச் சுருளி ஆற்றுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இவர்கள்  அனைவரும் தங்கள் தலைவரான ஸ்ரீநவநீத கிருஷ்ண மேஸ்திரி ஆசாரி உத்தரவுப்படி  தங்கள் கல்யாணங்கள் ஒவ்வொன்றுக்கும் 5 பணம் வீதமும் நவதான்யங்கள், அரிசி  அஞ்சுபடியும் கொடுக்க இச்செப்புப்பட்டையம் எழுதித் தந்துள்ளனர்.” (ஸ்ரீதர்,   2005 – 209) வலங்கையார் கூட்டமாக வந்த செய்தியை ‘வலங்கையார் குமுசல்  கூடிப் பெண் சிரை(றை) பிடிக்க வந்ததில்’ என்று செப்பேடு குறிப்பிடுகிறது.  பெண்களைக் கவர்ந்து செல்வதை ‘சிறை பிடித்தல்’ என்று குறிப்பிடும் பழக்கம்  இருந்தமைக்கு இச்செப்பேட்டு வரியும் சான்றாகிறது.

நன்றி

THEVAR THALAM
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com