வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 4
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்
ஆதி முதலே
பரிசுத்த ஆவியானவருக்கு தங்கள் பங்கு ஆலயத்தை அர்ப்பணித்திருந்த வேம்பாற்றுவாசிகள்
சந்த செபஸ்தியாரின் பேரில் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக அவருக்கென சிற்றாலயம்
ஒன்றினை நமதூரில் அமைத்து அவரை போற்றினர்.
அதனுடன் அக்கால
மரபிற்கேற்ப புதுமைக்கிணறு ஒன்றினை அவரின் பெயரில் ‘சந்த செபஸ்தியார்
புதுமைக்கிணறு’ என்று அவ்வாலயத்தின் அருகிலேயே அமைத்திருந்தனர்.
இப்புதுமைக்கிணற்றின் மூலம் ஏராளமான புதுமைகளும் நடந்தேறின. தொடர்ந்து வந்த
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணங்களால் அவ்வாலயம்
சிதைந்தும் போனது. கிணறும் தூர்ந்தது. அதன் பின்னரே சந்த செபஸ்தியாரின் சொரூபம்
தற்போதைய பங்கு ஆலயத்திற்கு கொண்டு செல்லப்;பட்டிருக்க வேண்டும் என அறிய முடிகிறது.
இதற்கிடையே சமீப
காலம் வரை நமது கன்னியர் இல்லம் செல்லும் பாதையில் காணப்பட்ட குருசடி “அர்ச
செபஸ்தியார் குருசடி” என்றே பெயரிலே தான் அழைக்கப்பட்டது என்பதை இங்கு உரைத்தல்
சாலச் சிறந்தது. இக்குருசடிதான் முந்தைய செபஸ்தியார் ஆலயத்தின் பகுதியாகவோ அல்லது
பண்டைய முறைமைப்படி ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டும் குருசடியாக இருந்திருக்க
வேண்டும் என்பதை உணர முடிகிறது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் இன்றளவும்
அப்பகுதிக்கு அருகில் காணப்படும் தெருவினை “சந்த செபஸ்தியார் தெரு” என்றே
அழைக்கப்படுவதும் இங்கு கூறுவது மிகவும்
சிறந்தது.
சந்த
செபஸ்தியாருக்கு சிற்றாலயம் இருந்ததை மேலும் உறுதி செய்யும் விதமாக வேம்பாற்றினைச்
சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நம்மவர் திரு. தம்பி ஐயா பர்னாந்து அவர்கள் வேம்பாறு
குறித்து எழுதிய “வேம்பின் வாசனை" எனும் நூற்குறிப்பில் 1926 ஆம் ஆண்டு அர்ச். மார்கரீத் மரியம்மாள் கன்னியர் மடம்
உருவாக்கப்படும் முன் அவ்விடத்தில் சந்த செபஸ்தியாருக்கு சிற்றாலயம் இருந்ததாகவும்,
வேம்பாற்றுக் கடலோடிகளால் அவ்வாலயத்தில் விழா
எடுக்கப்பட்டதாகவும், அவ்வாலயத்தில் கிடைத்த
ஓலைச்சுவடியிலிருந்துதான் ‘மங்களம் மங்களம்’ எனும் நவநாள் செபம் எடுக்கப்பட்டு
அச்சேற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கூடுதல் தகவலாக
இடைகாலத்தில் நம்மவர் திரு. வெலிச்சேர் கர்வாலி அவர்கள் தமக்குச் சொந்தமான
நிலத்தில் சந்த செபஸ்தியாருக்கு சிற்றாலயம் அமைத்து வழிபட்டதையும், கன்னியர் மடம் அமைக்க அப்பகுதியை கொடுத்ததாகவும் அறிய முடிகிறது.
இதன் காரணமாக சந்த செபஸ்தியார் திருவிழாவிற்கு அடுத்து வரும் மூன்றாம் நாளில்
அவரது குடும்பத்தினருக்காக ஊர் சார்பாக சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படுவதும்
நடைமுறையிலுள்ளது. இவற்றை மேலும் உற்றுநோக்கும் போது தற்போது நமது பள்ளியின்
விடுதி மாணவர்கள் குளிக்கப் பயன்படுத்தும் கிணறானது பழைய ஆலயத்தின் சிதைந்து போன
செபஸ்தியார் கிணறு தான் என்பதை உறுதியாகக் கூற முடிகிறது.
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து