வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 30 October 2016

இரத்த பூமி - 12
பரத சமூகம் என்றைக்குமே ஒற்றுமையாய் வாழும்

இருள் கிழித்து வெளி வந்தது சூரியன் புன்னைக் கோட்டையில் மீண்டும் சிலுவைக்கொடி படபடத்து பறந்து கொண்டிருந்தது. அத்துடன் இப்போது மீன் கொடியும் ஏற்றப் பட்டிருந்தது. கோட்டை மைதானத்தில் மக்கள் வெள்ளம் வெளியூர் பரதவ மறவர்கள் கூட்டத்தில் சொந்தங்களை தேடி பிடித்து உளம் மகிழ உரையாடிக்கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகம் உறையூட கோட்டையே மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் குலுங்கியது.

கொற்கை கோ வாழியவே
அடப்பனார் வாழியவே
பட்டங்கட்டிமார் வாழியவே
பாண்டி பரதவர் குலம் வாழியவே
பரதவர் ஒற்றுமை வாழியவே

விண் முட்டும் கோஷங்கள் அதையும் தாண்டி அடப்பனார் அதட்டல் குரலேழுப்பி கோஷத்தை நிறுத்தினார். அடுத்த நொடியே அமைதியானது.

பாண்டியம்பதி மக்களே..!! பொறுங்கள் சொல்வதை கேளுங்கள்..

போர்த்துகீசியர் இல்லாமலே பரதவ குலம் ஒன்றிணைந்து பரதவ தலை நகர் புன்னை காயலை இரப்பாளியின் கொள்ளை கூட்டத்திடமிருந்தும் விதால நாயக்கனின் விஷமத்திலிருந்தும் மீட்டெடுத்திருக்கிறோம். இன்னும் முடியவில்லை நமது இடப்பாடுகள் தூயதந்தை என்னவானார் தெரியவில்லை. கேப்டன் குடும்பம் என்னவாயிற்று, நமது காத்தவராயன், போர்த்துகீசிய வீரர்கள் நிலமை நமக்கு இதுவரை தகவல் ஏதுமில்லை.

முதும் பரதவர் ஒருவர் பொறுக்கமுடியாமல் ஐயா நமது பெண்டு பிள்ளைகளும் எங்கே ஏது ஒன்றுமே தெரியவில்லை ஐயா கொள்ளைக்காரவனுவ கொன்னு போட்டுட்டானுவளா பயம்மாயிருக்கியா ....னு விசும்பினார். அடப்பனார் சொன்னார் பெரியய்யா பயப்படாதியும் கொஞ்சம் பொறுமை கடைபிடியுங்கள்.

இதுவரை நடந்தவை தாங்கள் அறிவீர்கள் ஆனாலும் மக்களுக்கு தெரியாதவை பல உண்டு அவைகளையும் தங்களுக்கு இப்போது தெரியப்படுத்த வேண்டியுள்ளது...

நமது பெண்டு பிள்ளைகளை இளம் தலைவர் கொற்கை கோ அவரது தாயார் அரண்மனையின் பாதாள நிலவறையில் வைத்து பாதுகாத்து உள்ளார்கள், அனைவரும் நலம், இதோ இப்போதே அவர்களை அழைத்து வருவோம். காணியாளா உடனே அவர்களை அழைத்து வா என ஆணையிட்டார்.

மேலும் சொன்னார் இதுவரைக்கும் நாம் நினைத்த மாதிரி முழுமையாக நடக்கவில்லை, ஆனாலும் உடனுக்குடன் முடிவெடுத்து சவால்களை சந்தித்து வெற்றிதான் பெற்று வருகிறோம். விஷவாள் குத்துப்பட்டு உயிருக்கு போராடிய தருணத்தில் இளம் தலைவர் கொற்கை கோ அவர்கள் என்னை அழைத்து அவர் சொன்ன திட்டத்தின்படி காட்டிய விவேகத்து பாதையில் நானும் பாடனும் மற்றவரும் பயணித்து  இரப்பாளியோடு இணக்கமாகி கொள்ளையர்களை கூட்டிக்கொண்டு போய் ஊருக்கு ஊராய் கொன்று புதைத்தோம்.
பரதவர் படையை கூட்டி வந்தோம் சத்தமில்லாமல் சங்காரம் செய்து....பரதவ சரித்திர அவலத்தை சரிசெய்தோம்......

குறிக்கிட்ட பாடன். இது தெரியாமல் ஏதோ அடப்பனும் பாடனும் பரதவரை காட்டி கொடுத்து இரப்பாளியின் பொன்னுக்கு மயங்கியதாக சில புரளிகாரனுவ பேசியிருக்கானுவ அதை பிறகு பேசிக்கலாம்... சரி, ஐயா நீங்க சொல்லுங்க....

அது மட்டுமல்ல நான் கோட்டையை விட்டு கிளம்பியதும் தனது உடல் நிலை சரியாகாத போதிலும் பாதாள நிலவறையிலிருந்து வெளி வந்து நெட்டையனைக் கொன்று இரப்பாளிக்கு மரண பயத்தை காட்டியதும் இளம் தலைவர்தான். ஆக பாண்டியம்பதியும் பட்டங்கட்டிமாரும் கொச்சின் சென்றுள்ள நிலையில் போர்துகீசியரும் இல்லாமல் பரத குலத்தை கூட்டி பாரம்பரியமிக்க தன்மானத்தை காத்த வெற்றிதனை நேற்றிரவு முன்னின்று பெற்று தந்தவரும் இளம் தலைவர்தான்.

அடப்பானார் சொல்ல சொல்ல பரதவர் கூட்டம் கொற்கை கோ வாழ்க என ஆர்ப்பரித்தது. எங்கிருந்தோ வந்த முத்தம்மை கொற்கை கோவை ஆரத்தழுவி, அழுது புலம்ப கொற்கையும் கண் கலங்கினார். அடப்பனார் பேசும்படி சைகைகாட்ட, கண்களை துடத்தபடி கொற்கை கோ பேசினார்.....

பாண்டிய பரதவர்களே

எங்கய்யா பாண்டியம்பதியின் பிள்ளைகளே

என் மக்களே........ நான் உங்களை மீண்டும் காண்பேனா..! என்று நினைக்க வில்லை. உங்களை பகைவரின் கைகளுக்கு இரையாக்கி விட்டு இறக்கிறேனே...... என நினைத்த பொது தான் விதியானது முத்தம்மை ஆத்தா உருவத்தில் வந்து என்னை காப்பாத்தியது, சட்டைக்குள்ளே கைவிட்டு எடுத்து மக்களுக்கு காட்டியபடி ஆத்தாவின் இந்த பாம்படம்தான் என்னை காப்பாத்தியது,

ஆத்தா உன் ஆசிர்வாதத்தால கோட்டையை பிடிச்சாச்சு.... இந்தா பிடி!! உன் பாம்படம், திரும்பவும் உன் காதை தைச்சி மாட்டிகோ..என கொற்கை பாம்படத்தை முத்தம்மையின் கைகளில் திணிக்க.... இல்லையில்லை அந்த ஈன இரப்பாளியை கொன்று அவன் இரத்தத்தை என் காதுல தடவின பிறகு தான், என மறுத்த முத்தம்மை.

அவனை எங்கெய்யா கொன்று போட்டியளா... எனக்கு அந்த வாய்ப்பை தரலையேனு விசனப்பட......

தற்போதைக்கு பொறு ஆத்தா பொறு 
அதுவரை கவனமா இதை வைச்சிறு.......னு 
முத்தம்மையின் கையில் திணித்தபடி ,தொடர்ந்தார்.........

மக்களே சோதனைக்கு மேல் சோதனை நமக்கு குமரிதுறைமுதல் வேதாளை வரை நமது சொந்தங்கள் திரண்டு வந்து மீண்டும் கோட்டையை கைப்பற்றி விட்டோம்.

ஆனால்......... ஆனால்.......... இதெல்லம் எதற்காக... ஏன் கொற்கையை விட்டொழித்து ...பாண்டியரசு மதுரை போன பின்பு மதுரை பாண்டி அரசில் குழப்பம் வரும் போதெல்லாம் இன்றைக்கு எப்படி உடனடியாக இணைந்து பகைவரை வென்று கோட்டையை காத்தோமோ அது போலவே அன்றைகும் கடலோரத்து பரதகுல மறவர்கள் இங்கிருந்து போய்தான் சரி செய்தோம் ...

பாண்டிய பரம்பரையின் தொன்மை கடலோரங்களில் தான் பாதுகாப்பாய் இருந்தது. பாண்டிய அரசு வாரிசுகள் இங்கே தான் வளர்ந்து வந்தன அரசுரிமை காலத்தில் தான்மதுரைக்கே சென்றனர். அரசியல் ரீதியான பகை கொண்ட சோழ அரசு தமிழ் சொந்தமென எண்ணாமல் பாண்டி பரதவ குலத்தை கூர்கூறாக பிளவு படுத்தியது அது அறியாமல் நாமே, உடன்பட்டோம்.

சோழன் தான் முதலில் நமது கடல் வழி தடம் தொடர்ந்து குதிரை கொண்டு வந்த இந்த அரபு கொள்ளையர்களை நமக்கு பதிலாக இங்கே அமர்த்தி வளர வைத்தான், நமது சொந்தங்களை துலுக்கனோடு இணைய வைத்தான். நாயக்கன், அதற்கு மேலே நமது கோவில்களை நம்மால் உருவாக்கப்பட்ட இறைபீடங்களை பறித்தான். நமது முதல் மரியாதைகளை சிதைத்தான், அவனும் பாண்டிய வம்சத்தின் ஆணி வேர் நாமென கண்டு நம்மை அழிக்கவே துடித்தான்.

அப்படித்தான் கடலையும் பறித்தான், அதை விடுங்கள். ஆனால் நாம், நமது எதிர்காலம் கருதி இந்த நிஜ வாரிசு களை காக்க புதிதாக பரதேசத்தவரின் பரம பிதாவை கடவுளாக ஏற்றுக் கொண்டோம். ஏன் நமது தனிதன்மைக்காக மட்டுமே பாண்டிய சமுகம், பர்னாண்டோ சமுகமாக, மாறி நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று இதை செய்து பரதேசத்தவரின் உதவி பெற்று நாம் நம்மை காத்து கொள்ளாது விட்டால். நாளை, பிற்கால சந்ததியில் பாண்டியன் பரவன் என்கின்ற வார்த்தைகளை கல்வெட்டில் தான் காண முடியும்.

இதோ புன்னையிலே புழுதி கிளம்பியதும் வடகோடியிலும் தென் கோடியிலும் வாழும் பரதவரின் கண்களிலே நீர்முட்ட நெஞ்சினிலே சுவாசமூட்ட புயலாய் எரிமலையாய் கிளர்ந்து வரும் ஆழி பேரலையாய் படை திரட்டி பாய்ந்து வந்து பரதவரின் மானம் காத்த பரதகுடி மறவர்களே..!
உங்கள் பாதங்களுக்கு என் நன்றி ஐயா

இதுதான் நமக்கு வேணும்... நமது காலகாலத்துக்கும் இதுவே தொடர வேண்டும்...இந்த பரத சமூகம் என்றைக்குமே ஒற்றுமையாய் வாழும் இல்லையேல் ஒன்றுபட்டே சாகும்.கொற்கை கோ உணர்ச்சி வசப்படுவதை உணர்ந்த அடப்பனார், தோள்களை தட்டி ஆசுவாசப்படுத்த.......

பாருங்கள் மக்களே, என் தந்தையின் வயதையொத்த, இந்த மாமனிதரை சின்னஞ்சிறியவன் நான் இந்த தாக்குதலுக்கு தலைமையேற்றதும் என் ஆணைகளை ஏற்று கொண்டதும். அவரது அனுபவத்திற்குறிய வயது கூடஇல்லாத நான் அவரது அறிவுரையை ஏற்று விவாதித்து திட்டமிட்டதும் தான் இப்போதைய தற்காலிக வெற்றி..

மூத்தோரை மதிப்போம், தலைமைக்கு பணிவோம், இதுதான் நாளைய பரதவரின் வெற்றியின் சூட்சமமாக இருக்க வேண்டும். இனி பணயமாக பிடித்து செல்லப்பட்டவர்களை மீட்பதுதான் அடுத்தவேலை. அதற்கான நமது பிணையம் இதோ என கை தூக்கி சுட்டிக் காட்ட....

கோட்டை மதிற் சுவர் மீதினிலே கை விலங்கோடு பலியிட தயாரான நிலையில் இரப்பாளியின் கொள்ளைக் கூட்டம் உயிர் பயத்தில் உறைந்து போய் மண்டியிட்டிருந்தனர். இரப்பாளியை காணவில்லை.... என்ன ஆனான் தெரியவில்லை. இரப்பாளியை இரவோடு இரவாக கண்டதுண்டமாக வெட்டி நாயக்கனுக்கு அனுப்பிவிட்டதாக மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்

அப்போது பரதவ குமரிகளும் குழந்தைகளும் நிலவறையில் இருந்து அழைத்து வரப்பட சொந்தங்கள் ஒன்றோடொன்று, அணைத்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். அடப்பனாரிடம் கொற்கை கோ ஏதோ சொல்ல அடப்பனார் பெண்கள் அனைவரும் ஆயுதகிடங்குக்கு செல்லுங்கள், நாளை மறுநாளுக்குள் உங்கள் வீடுகள் சரி செய்யப்பட்டு விடும்.

காணியாளா உன் தோழர்களோடு முதலில் கிழக்கத்திமாரையும் வடக்கத்திமாரையும் கூட்டிட்டு போய் பாண்டியம் பதி அரண்மனையில் தயார் செய்துள்ள உணவளித்து உபசரியுங்கள். அப்புறம் ஊர்காரங்களுக்கு பரிமாறுங்கள். பரதவ துறைகளின் பட்டியலின் படி ஊருக்கு இரு பிரதிநிதிகள் வாருங்கள் போர்த்துக்கல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என்றபடி அடப்பானார் முன்செல்ல கொற்கை கோவும் ஏனையோரும் பின்தொடர அனைவரும் அலுவலக கதவு திறந்து உள்ளே நுழைந்தனர்.

உள்ளே முட்டங்காலிட்டபடி திருச்சிலுவை முன்பு மனமுருக பிராத்தித்துக் கொண்டிருந்தான் இரப்பாளி............

.

...........................கடல் புரத்தான்................................
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com