கணியம்
'கணியம்'. இது மீனவர்களின் தொழிலோடு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தை.
மீன் பிடி வலைகளிலே பல வகை .....
குறிப்பிட்ட இடத்தில் இந்த வலைகளை தண்ணீருக்குள் அமுக்கி விட்டு, அடையாளத்திற்கான மிதவைகள் மட்டும் வெளியே தெரியும் வகையில் வலையை விட்டு விட்டு மீனவர்கள் கரை வந்து விடுவார்கள். மீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து வலையை போட்ட இடத்தில் சென்று எடுத்து வர வேண்டும். ஆழ் கடலில், கிட்ட தட்ட நிலம் மறைந்து, மலை உச்சிகளும், சில உயரமான கோபுரங்களும், தேவாலய உச்சிகளுமே மட்டும் தெரிகிற பரந்து விரிந்த தண்ணீர் பரப்பில் குறிப்பாக தாங்கள் விட்டுச் சென்ற வலையின் இருப்பிடத்தை கணித்து கொள்வதற்கு, மீனவர்கள் கோவில் கோபுரங்களையும், மலை முகடுகளையும் ஒரு சேர்த்து ஒரு கணக்கை மனதுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். இதனை அவர்கள் 'கணியம்' என்றழைக்கிறார்கள்.
1. செவ்வக வடிவிலான, நீண்ட வலையை வீசி ஓரு மணி நேரத்தில் அவற்றை உடனே எடுத்து மீன்களை கண்ணிகளிலிருந்து உருவி எடுப்பது ஒரு வகை. இவற்றில் கண்ணிகளில் சிக்கி கொண்ட மீன்களே நம் கைக்கு வருகின்றன. கண்ணிகளில் மாட்டிக் கொண்ட மீன்கள் தண்ணீரிலிருந்தாலும் கூட சிறிது நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே முடிந்த அளவு விரைவாக அவை அழுகு முன் கரை சேர்ப்பது அவசியம்.
2. மிக சிறிய கண்ணிகளை கொண்டு, நம்மூர் மூதாட்டிகள் வைத்திருக்கும் 'சுருக்கு' போன்று வடிவமைக்கப் பட்ட இவ்வகை பை போன்ற வலையை குமரி மாவட்ட மீனவர்கள் 'மடி' என்று அழைக்கிறார்கள். குறைந்தது 40 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட மெகா பைக்குள் கூட்டமாக வரும் தன்மை கொண்ட மீன் வகையை லாவகமாக ஒரு சேர உள்ளே தள்ளி ,கண்ணிமைக்கும் நேரத்தில் சுருக்கை பூட்டிக் கொண்டு மொத்தமாக மீன்களை அள்ளிக் கொள்ளும் முறை இது.
3. சந்தையில் மிக விலையுயர்ந்த கல் இரால் (lopstar) போன்ற உயிரினங்கள் பாறை பகுதிகளில் கிடைக்கின்றன. இருந்தாலும் இவை மீன்களை போன்று பெரும் எண்ணிக்கையில் வருவதில்லை. இதன் சிறப்பு இவை வலைகளில் மாட்டிக் கொண்டாலும் இறப்பதில்லை. கரைக்கு வந்த பின்பும் நீண்ட நேரம் உயிரோடிருக்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றை கரை சேர்ப்பதில் அவசரம் காட்ட தேவையில்லை. எனவே இவற்றை பிடிப்பதற்கு ஏறத்தாழ முதல் வகை வலையையே பயன்படுதினாலும் அவற்றை உடனே எடுத்து வருவதில்லை.

- ஜோ மில்டன்