வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 14 October 2016

வலம் வரும் அன்னை--வளம் தரும் அன்னை
இஸ்பானிய நாட்டிலிருந்து:

பாப்பரசர் 5-ஆம் நிக்கோலாஸ், 1455--ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாளன்று "Romanus Pontifex" என்ற பாப்பிறைப் பத்திரத்தின் மூலம் "பதுரவாதோ" என்ற ஞான அதிகாரச் சலுகையை முதன்முதலாக போர்த்துக்கீசிய மன்னன் 5-ஆம் அல்போன்ஸ் என்பவருக்கு அளித்தார்.

பதுரவாதோ சலுகையின்படி போர்த்துக்கீசியர் அவர்கள் ஆட்சி செய்யும் இடங்களில் கத்தோலிக்கத் திருமறையைப் பரப்பி, ஆலயங்கள் அமைத்து, அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். பதுரவாதோ சலுகை மூலம் புதிய நாடுகளில் கிறிஸ்தவ திருமறையைப் பரப்பப் பேராவல் கொண்டிருந்த போர்த்துக்கீசிய மன்னர் 3 ஆம் ஜான், தம் அரசுக்குக் கிழக்கே அமைந்த நாடுகளில் எல்லாம் ஞான அதிகாரக் கடமையை ஆற்றப் பெரிதும் விரும்பினார். 1521-ஆம் ஆண்டில் மேமேலன் என்னும் போர்த்துக்கீசிய மாலுமி ஒருவரால் பிலிப்பைன்ஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அந்தத் தீவுகளில் பெரிதான ஓசோன் தீவிலுள்ள மணிலா நகர் கிறிஸ்தவ வழிபாடுகளில் முன்னோடியாக விளங்கியது.

மணிலாவில் அப்போது தோற்றுவிக்கப்பட்ட புனித அகஸ்தீனியன் சபை கன்னியர்களுக்கு அன்பளிப்பாக தேவ அன்னை சுரூபமொன்றை போர்த்துக்கீசிய மன்னர் 3 ஆம் ஜான் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

மணிலாவில் அன்னை:

இஸ்பானிய நாட்டைச் சார்ந்த புனித அகஸ்தீனியன் சபை கன்னியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் ஒரு கன்னியர் மடம் தோற்றுவித்து இருந்தனர். அங்கு அவர்கள், போர்த்துக்கீசிய மன்னர் அன்பளிப்பாகக் கொடுத்த தேவ அன்னை சுரூபத்தை, "இரக்கத்தின் மாதா" என்று அளவற்ற பக்தியுடன் வணங்கி வந்தனர். 

பொன்முடியில் பன்னிரு விண்மீன்கள் ஒளி வீச, பொற்பாதத்தில் வெண்ணிலவு காட்சி தர, பொன்னாடை புனைந்து செந்தாமரைக் கரத்தில் செந்நிறப் பழம் ஒன்றிருக்க, இடக்கரத்தில் பாலன் இயேசு அமர்ந்திருந்தவாறு அன்னையின் சுரூபம் காட்சியளித்தது. 

மரத்தினால் செய்யப்பட்ட அன்னையின் சுரூபம் இஸ்பானிய நாட்டில் உருவாக்கப்பட்டதாகும்.

புனித சவேரியாரின் பேரவா:

சீனா நாட்டிற்குப் பயணித்த வேளையில், சவேரியார் மணிலாவில் சில காலம் தங்கினார். அங்கு புனித அகுஸ்தீன் சபைக் கன்னியர் மடத்தில் அன்னையின் சுரூபத்தைக் கண்ட அவர், அதன் அழகினால் ஈர்க்கப்பட்டு விம்மிதம் அடைந்தார்.

முத்துக்குளித்துறையின் பரத மக்கள் கிறிஸ்தவத் திருமறையைத் தழுவிய பின்னரும், இந்துப் பெண் தெய்வங்களான மதுரை மீனாக்ஷி, கன்னியாகுமரி பகவதி மீது கொண்டிருந்த பெண் தெய்வப் பற்றிலிருந்து மீட்க, அவர்களுக்கு அன்னையின் அழகு சுரூபத்தைப் பெற்றுக் கொடுக்க சவேரியார் பெரிதும் விரும்பினார். இது பற்றி அவர் அகுஸ்தீன் சபைக் கன்னியர்களிடம் மன்றாடிக் கேட்க, கன்னியர்கள் தர மறுத்துவிட்டனர்.

தூத்துக்குடி வந்த திருச்சுரூபம்:

சவேரியார் 1552-ஆம் ஆண்டு டிசம்பர் 2- ஆம் நாளன்று சான்சியன் தீவில் நல்மரணமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவரை ஒரு புனிதர் என்று அவருடைய பிரதாபங்கள் மூலம் கேள்விப் பட்ட அகுஸ்தீன் சபைக் கன்னியர்கள், புனிதரின் வேண்டுகோளை நிறைவு செய்ய விரும்பினர். அவர்கள் அன்னையின் திருச்சுரூபத்தை பரத மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தனர்.

1555- ஆம் ஆண்டு ஜூன் 9--ஆம் நாளன்று, "சந்தலேனா" என்ற கப்பல் மூலம் அன்னையின் அற்புதத் திருச்சுரூபம் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

முத்துக்குளித்துறை மக்கள் அனைவரும் அன்னையின் திருச்சுரூபத்தை கோலாகலத்துடன் வரவேற்க, கோவா மறை மாநிலப் பெரிய குரு மிக்கேல் வாஸ் சுவாமிகள், அன்னையின் திருச்சுரூபத்தை சம்பவுல் ஆலயத்தில், "பரதரின் மாதா" என்னும் நாமத்துடன் ஆடம்பரமாக நிறுவினார்.

அன்னையின் அற்புதச் சுரூப வருகைக்குப் பின்னர் முத்துக்குளித்துறைக்கு வசந்தமே வந்தது போலாயிற்று. பரத மக்களின் முத்துக்குளிப்பு வளம் பெற்றது; அவர்களின் விசுவாசமும் தழைத்தது.

பாண்டியன் தீவில் அன்னை:

மதுரை நாயக்கன், கயத்தாறு குறுநில மன்னன் ஆகியோரின் ஓயாத கொடுமைகளிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்கும் வகையில், 1604-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வைப்பார்--வேம்பார் ஆகிய ஊர்களிலுள்ள பரத கிறிஸ்தவ மக்களும் மற்றும் பாதுகாப்புத் தேடும் பிறமத மக்களும், தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள பாண்டியன் தீவில் குடியேறினர்.

பாண்டியன் தீவில் 1606--ஆம் ஆண்டில் கட்டப்பட்ட "தேவ மாதா ஆலய"த்தில், தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயத்தில் பரத மக்களால் பத்திரப்படுத்தப்பட்ட அன்னையின் திருச்சுரூபத்தை பரத மக்கள் ஆடம்பரமாக நிறுவினர்.

பாண்டியன் தீவில் அமைக்கப்பட்ட இயேசு சபைத் தலைமை இல்லத்தில் பணி புரிந்த சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு தி பாஸ்து என்பவர் அன்னை மரியாள் மீது தனிப்பற்றுதல் வைத்திருந்தார். தினந்தோறும் அன்னையின் அற்புதச் சுரூபத்திற்கு முன் மண்டியிட்டு மன்றாடும் அவருக்கு பனிமய அன்னை பலமுறை காட்சி அளித்ததாக அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய இயேசு சபை அறிஞர் குய்ரோஸ் கூறுகிறார்.

சகோதரர் பேதுரு தி பாஸ்துவுக்கும் பாப்பரசர் "முத்திப் பேறு பட்டம்" வழங்குவதற்குப் பனியமய அன்னை பாண்டியன் தீவில் அவருக்குத் தந்த காட்சிகளே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவந்தாகுளத்தின் ஶ்ரீ:

பாண்டியன் தீவில் குடியேறிய முத்துக்குளித்துறை மக்கள் மீதும் இயேசு சபையினர் மீதும் தவறான எண்ணங்கொண்டு, அவர்களுடன் போர் தொடுத்து, அவர்களை 1610--ஆம் ஆண்டில் கொச்சி ஆயர் ஆந்திரேயாஸ் பலவந்தமாகத் தீவில் இருந்து வெளியேற்றினார்.

1610 ஆம் ஆண்டில் முத்துக்குளித்துறையை விட்டு வெளியேறிய இயேசு சபைக் குருக்கள், 1621--ஆம் ஆண்டில் மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பி வரும்வரை, இயேசு சபை ஆண்டறிக்கைகள் ஏதும் எழுதப்படவில்லை. பாண்டியன்ன் தீவில் நடந்த போருக்குப் பின், அங்குள்ள தேவமாதா ஆலயத்தில் வழிபடப்பட்டு வந்த பனிமய அன்னையின் திருச்சுரூபம் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் ஏதுமில்லை.

தூத்துக்குடி மக்களிடையே பரவலாக நிலவி வரும் பாரம்பரியச் செய்தியின்படி பரத மக்கள் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை தூத்துக்குடிக்கு அருகேயுள்ள, "சிவந்தாகுளம்" அல்லது, "சேர்ந்தான் குளம்" என்ற பரதர் குடியேற்றத்துக்குக் கொண்டு சென்றனர்.

மன்னாரில், 'சங்கிலி' என்ற கொடிய மன்னனால் 1544--ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டு வேத சாட்சிகளாக மரித்த 600 பேர்களின் நினைவாக, அன்றைய சாதித்தலைவன், தொன் எரோணிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் சிவந்தா குளத்தில் 'புனித ஸ்நாபக அருளப்பரின்' பெயரால் ஓர் சிற்றாலயம் கட்டியிருந்தார்.

அந்தச் சிற்றாலயத்தில் தான், பனிமய அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டது என்பதே மக்களின் பொதுக்கருத்து. சிவந்தாகுளம் என்ற ஊரானது அன்னையின் சுரூப வருகைக்குப்பின்னர் "ஶ்ரீவந்தாள் குளம்" என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "சேர்ந்தாள் குளம்" என மருவி, தற்போது சிவந்தாகுளம் என்றே அழைக்கப்படுகிறது.

புதுப் பொலிவுடன் தூத்துக்குடியில்:

1621 ஆம் ஆண்டில் பனிமய அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், மீண்டும் பனிமய அன்னையின் திருச்சுரூபம் அங்கே நிறுவப்பட்டு, ஆண்டுதோறும் அன்னையின் திருநாள் ஆகஸ்ட் 5-ஆம் நாளன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

1648--ஆம் ஆண்டின் இயேசு சபை அறிக்கையில் சுவாமி பல்தசார் டி கோஸ்தா, அவ்வாண்டில் கொண்டாடப்பட்ட அன்னையின் திருநாளைப் பற்றி விமரிசையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் புலம் பெயர்ந்த அன்னை:

1658--ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றிய பின்னர், பனிமய அன்னை ஆலயத்தைத் தங்களுடைய கால்வீனிய செபக்கூடமாக மாற்றினர். பனிமய அன்னையின் சுரூபத்தை அவர்களிடமிருந்து பத்திரப்படுத்தும் நோக்கத்துடன், அன்றைய பரதர் சாதித்தலைவர் தொன் சவியர் ஹென்றி தெக்குருஸ் கொரைரா, மீண்டும் சிவந்தாகுளம் எடுத்துச் சென்று, அங்குள்ள புனித ஸ்நாபக அருளப்பர் சிற்றாலயத்தில் நிறுவினார்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர், டச்சுக்காரர்கள் சிவந்தாகுளத்தையும் தங்களுடைய ஆளுகையின் மேற்கு எல்லைக்கு உட்படுத்திக் கொண்டனர். அதனால் பரத மக்கள் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை அழகிய பச்சைப் பல்லக்கில் வைத்து, பாண்டியரின் பூர்வீகத் தலைநகரான, 'கொற்கை'க்குச் சென்று, அங்கு பரத சாதித் தலைவர் தன் பெயரால் கட்டியிருந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.

கொற்கையில் பனிமய அன்னையின் திருச்சுரூபம் ஏழாண்டு காலம் எழுந்தருளி இருந்த போது அனைத்து மக்களும் சாதி, மத வேறுபாடின்றி வணங்கி வந்ததால், பரதர் மாதாவான பனிமய அன்னை, 'கொற்கை மாதா" என அழைக்கப்படலானாள்.

1697--ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கலவரத்தில் முகமதியர்கள் கொற்கையை நெருப்பால் அழித்தபோது, அன்றைய பரத ஜாதித்தலைவர் பனிமய அன்னையின் அற்புதச் சுரூபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கே கொண்டு வந்து, தம் அரண்மனையான, "பாண்டியபதி"யில் வைத்து வணங்கி வந்தார்.

எட்டாண்டுகள் தனி அறையில்:

1699--ஆம் ஆண்டில் தூத்துக்குடியின் பங்குக் குருவாக விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி சுவாமிகள் பொறுப்பேற்றவுடன், பரத ஜாதித் தலைவர் அன்னையின் அற்புதச் சுரூபத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.

டச்சுக்காரர்களால் அன்னையின் சுரூபத்திற்கு மீண்டும் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சிய சுவாமி மான்சி, சுரூபத்தைத் தம் இல்லத்தில் உள்ள தம் அறையிலேயே வைத்து மிகுந்த பக்திச் சிறப்போடு வணங்கி வந்தார்.

1707--ஆம் ஆண்டு ஏப்ரல் 4--ஆம் நாளன்று சுவாமி விஜிலியுஸ் மான்சியின் அறையினுள் விழுந்த இடியிலிருந்து அவரையும் அவருடைய ஊழியர்களையும் அற்புதமாகக் காப்பாற்றியது, அன்னையின் திருச்சுரூபப் புதுமையே!

புதிய ஆலயத்தில் அன்னை:

அன்னையின் புதுமையை உலகெங்கும் பறைசாற்ற கடமைப்பட்டவராக சுவாமி மான்சி, 1713--ஆம் ஆண்டில் பனிமய அன்னைக்கு அழகுமிகு ஆலயமொன்றைக் கற்களால் கட்டியெழுப்பினார்.

புதிய ஆலயத்தின் பீடப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அழகுமிக்க சிலைமாடத்தில் பனிமய அன்னையின் அற்புதத் திருச்சுரூபம் அலங்காரமாய் நிறுவப் பட்டது.

வலம் வரும் அன்னை:

புதிய ஆலயத்தில் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை ஆடம்பரமாகவும் சாஸ்வதமாகவும் நிறுவியதன் நினைவாக, 1720 ஆம் ஆண்டில் பரத குல சாதித் தலைவர் தொன் கபிரியேல் ஆரோக்கிய தெக்குருஸ் கோமஸ், அன்னைக்கு ஓர் அழகிய சிறு தேரினை உருவாக்கினார். இதுவே பனிமய அன்னை தூத்துக்குடி வீதிகளில் வலம் வந்த முதல் தேர்.

பரத மக்கள் முத்துச் சிலாபங்களில் செழிப்படைந்திருந்த ஆண்டுகளில் மட்டுமே இந்த அழகிய சிறு தேரினை நகர்வலம் வரச்செய்து, அன்னையை மகிமைப்படுத்தி நன்றி தெரிவித்துள்ளனர்.

பனிமய அன்னையின் திருச்சுரூபம் தூத்துக்குடி நகரை வந்தடைந்த 250 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்திலும், டச்சுக்காரர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிய அன்னைக்குத் தோத்திரமாகவும், முத்துச் சிலாபங்களில் தமக்குக் கிடைத்த அபரிமிதமான இலாபத்தைக் கொண்டு அன்றைய பரத குல சாதித்தலைவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ், பனிமய அன்னைக்கு ஒரு சித்திரத் தேரைச் செய்வித்தார்.

1806--ஆம் ஆண்டு பிப்ரவரி 2--ஆம் நாளன்று மாதாவின் சுத்திகரத் திருநாளில் முதன்முதலாக வலம் வந்த அன்னையின் பொற்றேர், அதன் பின்னர் பனிமய அன்னையின் திருநாளான ஆகஸ்ட் 5--ஆம் நாளன்று, சீர் பரவர் திரு மந்திர நகராம் தூத்துக்குடி நகரில் பன்னிரு முறை, (1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982 மற்றும் 2000) ஆண்டுகளில் வலம் வந்துள்ளது.

பனிமய அன்னை ஆலயம் கட்டப்பட்ட நானூறாவது ஆண்டின் நிறைவு நினைவாக, பாப்பரசர், 2-ஆம் அருள் சின்னப்பர், 1982--ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாளன்று, தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயத்தைப் "பேராலயம்" என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார்.

பேராலய நிலையின் இருபத்தைந்து ஆண்டின் நினைவாக, 2007--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாளன்று பதின்மூன்றாம் முறையாக பொற்றேரில் வலம் வரவிருக்கிறார்கள், புதுமைக்கரசியான பரதர் மாதாவென்னும் திவ்விய சந்த மரிய தஸ்நேவிஸ் அன்னை!

கடந்த 450 ஆண்டுகளுக்குள் பல முறை புலம் பெயர்ந்து வலம் வந்து தன்னுடைய பிள்ளைகள் அனைவர்க்கும் வரம்பிலா வளம் தந்த பரிசுத்த பனிமய அன்னை, நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் வலம் வர வேண்டும்! வளம் பல தர வேண்டும்!

தி.சொர்ணராஜன் விக்டோரியா
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com