வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 1 October 2016

தமிழரசுகளின் கடல் வல்லமை

தமிழரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாக இருந்தன. இது குறித்து வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” எனத் தனது இந்திய வரலாறு என்கிற நூலில் குறிப்பிடுகிறார்(1). அவர் தனது அசோகர் என்கிற மற்றொரு நூலில் “தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன” எனக் குறிபிடுகிறார்(2). அன்று தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.

பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்கக் கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாக இருந்தன. அவர்களுக்கிடையே கடற்போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, தமிழகக் கடல் வணிகத்துக்குத் தடையாக இருந்த அவர்களின் கடற்கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அடக்கினர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. 

ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதில் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகவும் தெரிகிறது. அதனால் தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழிபெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும் “சாவகம்” எனப்படும் இந்தோனேசியா தீவுகள் அன்றே அவனது கடற்படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார்(3). அதன்மூலம் “கிராம்பு” எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது எனவும், உலகம் முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது எனவும் அறிகிறோம்.

கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால் தான் அவ்வணிகத்தைத் தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்ககாலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது(4). மேலும் நரசய்யா அவர்களின் “கடல் வழி வாணிகம்” என்கிற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்துப் பல விரிவான தகவல்களைத் தருகிறது. கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டையத் தமிழக அரசுகள் கடற்போரிலும், கடல்வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றின் பெயரில் இலங்கையின் வடமேற்கே அமைந்திருந்த தம்பப்பண்ணி எனப்படும் நகரம் கி.மு.500 வாக்கில் புகழ் பெற்றதாக இருந்தது. அதே காலகட்டத்தில் கங்கை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த தாமிரலிபத(Tamaralipta) நகரமும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மெகத்தனிசு இந்த தாமிரலிபத என்கிற நகரம் குறித்து எழுதியுள்ளார். ‘பண்டைய ஒரியாவின் கடல்வணிகப் பெருமை’ என்கிற கட்டுரையை ஒரிசா ரிவியூ என்கிற மாத இதழில் எழுதிய பாலபத்ர காதை அவர்கள், ‘தந்தபுர’ என சமண, புத்த நூல்களில் குறிப்பிடப்படும் பண்டைய கடற்கரைத் துறைமுகம் என்பது பண்டைய பாளூர் துறைமுகமாகும் எனவும், தமிழில் பல்+ஊர்= பாளூர் என்பதன் வடமொழிப்பெயர் தான் ‘தந்தபுர’ என ஆயிற்று எனவும், அதாவது தமிழில் பல் என்பது வடமொழியில் தந்த எனவும் தமிழில் ஊர் என்பது வடமொழியில் புரம் எனவும் ஆகியது எனவும் குறிப்பிட்டுள்ளார்(5). ஒரியா இரிவியு(ORISSA REVIEW) என்கிற அதே மாத இதழில் 2011 நவம்பரில் டாக்டர் பிரபுல்லா சந்திர மொகந்தி (DR.PRAFULLA CHANDRA MOHANTY) அவர்கள் எழுதிய வேறொரு கட்டுரையில் ஒரிசாவில் உள்ள பாளூர் என்கிற பண்டைய துறைமுகத்தின் பெயரானது தந்தபுரா என்ற வடமொழிப் பெயருக்கு இணையான தமிழ் பெயராகும் என பேராசிரியர் எஸ். இலெவி (PROF. S. LEVY) என்பவர் கருதுவதாகச் சொல்லியுள்ளார்(6).

அதுபோன்றே அதே மாத இதழில் டாக்டர் கார்த்திக் சந்திரா இரூட் (DR.KARTIK CHANDRA ROUT) என்பவர் எழுதிய கட்டுரையில் பாளூர் என்பது தமிழர்கள் தந்த பெயர் எனச் சில விமர்சகர்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காரவேலன் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியிடம் இருந்து கைப்பற்றிய கலிங்கத்தின் முக்கியத்துறைமுக நகராக இருந்த பித்துண்டா நகரம் சிறிதுகாலமே காரவேலனுடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்(7). அப்படியானால் மீண்டும் அது தமிழர்களின் பொறுப்பில் வந்துவிட்டது எனப் பொருள் கொள்ளலாம். மேற்கண்ட தரவுகளின் படி, பாளூர் மட்டுமல்ல கலிங்கத்தில் இருந்த பண்டைய முக்கியத் துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம், மாணிக்பட்டினம், கல்கதா பட்டினம், தாமரலிபத (KALINGA PATANAM, MASULI PATANAM, MANIK PATANA, KHALKATA PATANA, TAMARAL IPTA) ஆகிய அனைத்தும் தமிழ்ப் பெயரோடு தொடர்புடையனவாகும். MARITIME TRADE OF ANCIENT KALINGA, MARITIME HERITAGE OF GANJAM ஆகிய இரு ஆங்கிலக் கட்டுரைகளில் சொல்லப்பட்ட பண்டைய கலிங்க நகரங்கள் தான் இந்த 5 நகரங்களும் ஆகும்(8). இந்நகரங்களில் ‘தாமிரலிபத’ தவிர பிற அனைத்துத் துறைமுக நகரங்களும் இறுதியில் ‘பட்டினம்’ என்கிற தமிழ் பெயரைக் கொண்டுள்ளன.

பொதுவாகத் தமிழில் நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம் என்கிற பெயரைப் பெறும். தமிழில் பட்டினம் என்றால் நெய்தல் நில ஊர் என்பது போக, பட்டினர் என்பது நெய்தல் நிலத்தில் வசிக்கும் மீனவரையும், பட்டினச்சேரி என்பது நெய்தல் நில மீனவர் வசிக்கும் ஊர் அல்லது அவர்களது தெருவையும், பட்டினவாசி என்றால் நகர மக்களையும் குறிக்கும். ஆகப் பட்டினம் என்பது மூலத்தில் ஒரு தமிழ் பெயராகும். ஆகவே கலிங்கத்தில் உள்ள பட்டினம் என்கிற பெயர்கொண்ட பண்டைய பெயர்கள அனைத்தும் தமிழோடும், தமிழர்களோடும் தொடர்புடையன எனலாம். அதுபோன்றே தாமிரலிபத(Tamaralipta) என்பது இலங்கையின் தம்பப்பண்ணி போன்று தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் அமைந்த பெயராகத் தோன்றுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லியதும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகளாகும்.

வரலாற்றுப்பெரும்புலவர் மாமூலனார் தனது பாடல் ஒன்றில் ‘தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த’ என்கிறார்(9). அதாவது தமிழ் மூவேந்தர்கள் மூவரும் இணைந்து மொழிபெயர்தேயம் எனப்படும் இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தின் சில பகுதிகள் ஆகிய பிரதேசங்களை பாதுகாத்து வந்தனர் என்கிறார். அதன்மூலம் தமிழ் அரசுகளிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். மேலும் இத்தக்காணப்பகுதியில் இருந்த வணிகப்பாதைகளை, அதன் கிழக்கு, மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களை தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் என்பதையும் இப்பாடல் வெளிப்படுத்துகிறது எனலாம்.

மேற்கண்ட தரவுகள் தமிழர்களின் கடலாதிக்கத்தையும், கி.மு. 550 முதல் கி.பி. 200 வரையான 750 வருடங்களாக தமிழக வணிகம் இடைவிடாது உலகளாவிய அளவில் நடைபெற்று வந்ததையும் உறுதிப்படுத்துகிறது எனலாம். பண்டைய வணிகம் குறித்துக் குறிப்பிடப்படும் வணிகப் பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தியாகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்துவெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்குத் தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன. தமிழர்களின் கடலாதிக்கம் இதற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

தமிழர்களின் கடலாதிக்கம்-இலக்கியத்தரவு:

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்ணிக்குயத்தியார் என்கிற பெண்பாற் புலவர் சோழன் முதல் கரிகாலன், சேரன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் தோற்கடித்தான். அப்போரில் தோற்றதாலும், போரில் முதுகில் விழுப்புண் பெற்றதாலும் சேரலாதன் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வை, ‘இப்பாடலில் தோற்ற சேரலாதன் உன்னை விட நல்லவனும் புகழ் பெற்றவனும் ஆவான்’ என வெற்றிபெற்ற கரிகாலனிடமே நேரடியாகப் பாடியவர் இவர். இவர் ஒரு குயத்தி வகுப்பை சேர்ந்த பெண்பாற் புலவர். அதே சமயம் நேர்மையும், தைரியமும், புலமையும் உடையவர். அவர்,

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”(10)

எனப் பாடலைத் தொடங்குகிறார். “பெருங்கடலில் காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வதன் மூலம் பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவனே” எனச் சோழ மரபின் கடலாதிக்கப் பெருமையைப் பாடுகிறார். அதன்மூலம் சோழர்கள் மிக நீண்ட காலமாகவே கடலோடிகளாக இருந்தவர்கள் என்பதையும், சோழ மண்டலத்தை ஒட்டிய கடல்பரப்பையும், இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்கள் என்பதையும் நாம் அறிய முடிகிறது. பெருங்கடலில் வீசும் காற்றின் தொழில் நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி, பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவன் இந்தச் சோழன். இப்பாடலின் மூலம் பருவக்காற்று குறித்தும், கடல் நீரோட்டம் குறித்தும் அறிந்து கடலில் பெரும் மரக்கலங்களை செலுத்திய மரபில் வந்தவர்கள் சோழர்கள் என்பதைப் புலவர் தெரிவிக்கிறார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறோக்கத்து நப்பசலையார் என்கிற இன்னொரு பெண்பாற்புலவர், மலையமான் குறித்தத் தனது பாடலில் சேரர்களின் கடலாதிக்கம் குறித்து

“சினமிகு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய

அவ்வழிப் பிறகலம் செல்கலாது அனையேம்” என்கிறார்(11).

மேற்குக்கடலில் சேரன் தனது பெருங்கப்பல்களை செலுத்தும்பொழுது வேறு யாரும் அவனது ஆணையை மீறி மேற்குக் கடலில் கப்பல்களைச் செலுத்த இயலாது. அதுபோன்று கபிலன் பாடிய பிறகு பிறர் யாரும் மலையமானை அந்த அளவு உயர்த்திப் பாட முடியாது என்கிறார் புலவர். அதாவது, சங்ககாலப் பெரும்புலவன் கபிலன், அறிவில் சிறந்தவன், பெரும்புகழ் பெற்றவன், அவன் இனி யாரும் பாடமுடியாதபடி மலையமானைப் புகழ்ந்து உயர்த்திப் பாடியுள்ளான் என் கிறார் புலவர். இப்பாடல், மேற்குக்கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதை வெளிப்படுத்துகிறது. சேரர்களது அனுமதி இன்றி யாரும் மேற்குக்கடலில் கப்பல்களை செலுத்த முடியாது என்பதும், மேற்குக் கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதும் இப்பாடலின் அடிக் கருத்தாக உள்ளது எனலாம். மேற்கண்ட இரு பெண்பாற் சங்ககாலப் புலவர்களின் பாடல்களும் சேரர்கள் மேற்குக்கடலிலும், சோழர்கள் கிழக்குக் கடலிலும் கடலாதிக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும், பருவக் காற்றையும், கடல் நீரோட்டத்தையும் பற்றிய தொழிநுட்பத்தை அறிந்து பெருங்கப்பல்களை கடலில் செலுத்தும் திறனைத் தமிழர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

சங்க இலக்கியத்தரவுகளும், வெளி நாட்டினரின் குறிப்புகளும், நவீன எழுத்தாளர்களின் நூல்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், தொல்லியல் சான்றுகளும், இன்னபிறத் தரவுகளும் தமிழர்கள் கிமு. 6ஆம் நூற்றாண்டு முதலே உலகின் பல நாடுகளுக்கும் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்தனர் என்பதை, அவ்வணிகத்தைப் பாதுகாக்கத் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தன என்பதை, தமிழகம் கி.மு. 550 முதல் கி.பி.200 வரை இடைவிடாத உலகளாவிய வணிகத்தை மேற்கொண்டிருந்தது என்பதை, இவ்வுலக வணிகத்தால் தமிழகம் பெரும் செல்வத்தைப் பெற்றது என்பதை உறுதி செய்கிறது எனலாம். பண்டையச் சங்ககாலத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழிநுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும் வேளாண்மையிலும் உயர்நிலையில் இருந்ததன் காரணமாக உலகளாவிய வணிகத்தில் 750 வருடங்களாக இடைவிடாது, தமிழகம் உயர்ந்து நின்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது எனலாம்.

பார்வை:

1.கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டையத் தமிழ் சமூகம், முன்னுரை.

2.அசோகர், வின்சென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவமுருகேசன் பக் :79

3, 4. கா.அப்பாதுரை, தென்னாட்டுப் போர்க்களங்கள், பக்: 43 – 48.

5.Maritime Heritage of Orissa – Orissa Review , July- 2009, Balabhadhra Ghadai, Principal M.K. College Khiching Mayurbhanj P. 62-64); www.orissa.gov.in/e-magazine/Orissareview/2009/July/…
MARITIME TRADE OF ANCIENT KALINGA –DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW, NOV-2011, PAGE: 41; odisha.gov.in/e-magazine/Orissareview/2011/Nov/engpdf/39…
7. MARITIME HERITAGE OF GANJAM- DR.KARTIK CHANDRA ROUT, ORISSA REVIEW, NOV-2013, PAGE: 42, 43; gov.in/e-magazine/Orissareview/2013/nov/…/41-45.pdf

8.MARITIME TRADE OF ANCIENT KALINGA, DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW odisha.gov.in/emagazine/Orissareview/2011/Nov/engpdf/39… & MARITIME HERITAGE OF GANJAM, www.orissa.gov.in/e-magazine/Orissareview/2009/July/…

9.அகநானூற்றுப்பாடல்: 31, வரி: 14, 15.
புறநானூற்றுப்பாடல்: 66.
புறநானூற்றுப்பாடல்: 126 வரி: 14-16.
 – ஈரோடு கணியன் பாலன் 
நன்றி: www.velveechu.com
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com