வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 20 October 2016

வேளா (வாள்சுறா) (Saw Fish)

சுறா போன்ற தோற்றத்தில், சுறாவின் உடல்வாகுடன் இருந்தாலும் வேளா, திருக்கை இன மீன்களுக்கு மிக நெருக்கமான மீன். திருக்கையைப் போல வேளாவும் கடலடியில் வாழும் மீன். ரம்பம் போன்ற, இருபக்கமும் கூரிய முள்கள் கொண்ட கொம்பு, வேளா மீனின் முக்கிய அடையாளம்.

இந்த முள்நிறைந்த கொம்பினால் மீன்கூட்டங்களை வேளா திரைய்க்கும். காயமடைந்து நீந்த முடியாமல் தத்தளிக்கும் மீன்களைப் பிடித்து உணவாக்கும். சிலவேளைகளில் கூரிய கொம்பு முள்களில் குத்துண்டு சிக்கிக் கொள்ளும் மீன்களை கடல்பாறைகளில் தேய்த்து அவற்றை நீக்கி இது உணவாக்கிக் கொள்ளும்.

வேளாவின் கொம்பு, கடலடி சகதியைக் கிளறி அங்கு மறைந்திருக்கும் கடல் உயிரினங்களை வேட்டையாடவும் உதவுகிறது. பிரிஸ்டிடே (Pristidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த வேளா மீன், 6 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. வேளாவின் நிறம் பழுப்பு சாம்பல். இதன் இருபெரிய முதுகுத் தூவிகள் தலையோடு இணைந்திருக்கும். தடித்த வாலை, உடலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

உடலின் மேற்புறம் கண்களும், அடிப்புறம் வாயும் அதன் கீழே இரு வேறு பகுதிளாக சுவாசிக்க உதவும் செவுள் துளைகளும் வேளாவுக்கு அமைந்திருக்கும்.திறந்த வெப்பக் கடல் மீனாக இருந்தாலும் வேளாவால் நல்லதண்ணீரிலும் வாழ முடியும். ஆப்பிரிக்க ஆறுகள் சிலவற்றிலும், நிகரகுவா நாட்டு ஏரியிலும் கூட வேளா மீன் காணப்படுகிறது.

வேளா கோபக்கார முரட்டு மீனாக இருந்தாலும் மனிதர்களை இது தாக்கியதாக பெரிய அளவில் பதிவுகள் எதுவுமில்லை. வலையில் சிக்கும் வேளா மீனைப் பிடிக்க வலைஞர்கள் அதன் கொம்பு முனையை மெதுவாகத் தொட்டு தடவி விடுவார்கள். இதனால் மெய்மறந்த நிலைக்குச் செல்லும் வேளாவை கயிறுகளால் பிணைத்து கைக்கொள்வார்கள். வேளாவின் முட்டைகள் உண்ணத்தகுந்தவை. யானையின் விட்டை அளவுக்கு பெரிய பொன்மஞ்சள் நிற வேளா முட்டைகள் கூழினால் நிறைந்தவை. இவற்றை மாவில் கரைத்து ஆப்பம் சுடும் பழக்கம் கடற்கரை ஊர்களில் உண்டு. வேளா முட்டை ஆப்பம், ஊர்முழுவதையும் மணமணக்க வைக்கும் ஆற்றல் உடையது.


- மோகன ரூபன்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com