வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 28 December 2016

இரத்த பூமி - 17

மதுரை நாயக்க அரசின் மறுமொழி ஓலை வந்ததும் கீழக்கரையில் மரைக்காயரோடு குழுமியிருந்த பரதவ, மறவ‌ போர்துகீசியர் கூட்டணிக்கு இந்த செய்தி மீண்டும் கோபத்தை உருவாக்கியது. செல்வ செழிப்பு மிக்க மறக்காயர் இதை பொருட்படுத்தாது விட்டாலும் பரவரும் மறவரும் இதை தன்மானமாக கருதி வெகுண்டெழுந்தார்கள்.

நிதிக்காகவே அநீதியாக பரதவரின் பாரம்பரிய கடலை அபகரிக்க நினைக்கும் நாயக்கனுக்கு பணம் கொடுத்து பணிய மறுத்தனர். போர்துகீசியரோ.. ஒண்ட வந்த இடத்தில் சண்டை செய்ய மனமில்லாமல், சமரசம் செய்ய நினைத்தனர்.

குதிரை மறக்காயர் உரிமையோடு பாண்டியம் பதியிடம் சொன்னது “சின்னையா, கடல் நம்முடையது கடுகளவும் பொய்யில்லை..! ஆனால் இன்று நாம் யார்..? நம்ம பாண்டிபரம்பரை பட்டு போய்விட்டது. நீங்கள் கடலோரம் ஒதுங்கி போய்விட்டீர்கள் இன்னொரு கிளை தென்காசி பொதிகையோடு, புறம் தள்ள‌பட்டு விட்டது

போதாக்குறைக்கு உங்களுக்கு உதவ முடியாமல் உங்க சித்தப்பன்மார் , அதான் எல்லாம் வல்ல அல்லாவை கொண்டாடிய‌ எங்க வாப்பாமார் மதத்தாலே மூர்களுக்கு எங்களையும் முடமாக்கி விட்டார்களே ” என விரக்தியில் விசும்ப...

பாண்டியம் பதி சொன்னார், “ ஐயா..! சின்னையா..!

இது காலத்தால் அழிக்க முடியாதது. அன்றே எம்மில் இருந்து வந்த நீங்கள் இறை அல்லாவை ஏற்றுக் கொண்டது போல இன்றோ எங்கேயோ உதித்த இறை இயேசுவையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் சின்னையா இன்று மட்டுமல்ல எந்த காலத்திலும் நம் இரத்த சொந்தம் பரவனுக்கும் மறவனுக்கும் எங்க சின்னையா மரைக்காயனுக்கும் உள்ள சொந்தம் மறக்காது மறந்தாலும் இரத்தம் மணக்காமல் போகாது. வீண் கவலை வேண்டாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள் ” என ஒருமித்த குரலில் பரவரும் மறவரும் மரைகாயர் சகோதரர்களை தேற்றும் படி திட்டவட்டமாக கேட்டனர்.

உடன்பிறந்தோரின் உணர்வுபூர்வமான உரை கேட்ட மரைக்காயர் சொன்னார். “காலத்தின் கட்டாயத்தால் பாரம்பரிய கடல் தாய் அள்ளி தந்த அனைத்து செல்வங்களுமே பாண்டிய பரம்பரை நம் கைகளுக்குள் உள்ளது. இதை பற்றி கவலை வேண்டாம், இதை நானே பார்த்து கொள்கிறேன்.” என்றார்.

மரைக்காயரின் உரிமையான மொழி கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பாண்டியம்பதி. “ஏற்கனவே எமக்காக மரைக்காயர் சகோதரர்கள் பட்ட துன்பங்கள் போதும் அதுமட்டுமல்ல நாயக்க அரசுக்கு கடல் சார்ந்த வரி தெறி ஆனவற்றை மரைக்கயர் செலுத்துவது கடலோடு இனைந்த‌ பரதவர் எமக்கு உறுத்தலானது.பெரும் மனத்துடன் இதை பொறுத்து கொள்வீராக,

பரதவர் சார்ந்த பரதவரின் போர்துகீசிய அரசு இதனை செவ்வனவே செய்து முடிக்கும், இதற்க்காக நீங்கள் கவலை பட வேண்டாம் ”என மறுமொழி பகர்ந்தார் பாண்டியம்பதி. ஆனால் கூட்டமே போர்துக்கிசியரின் பதிலுரைக்காக காத்திருந்த போது போர்துகீசிய கேப்டன் கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோவும், தளபதி கோயல் கோவும் எதுமே பேசாமல் மெளனித்திருந்தனர்.

மெளனத்தின் அர்த்தத்தை உணர்ந்த மறவ தலைவர் பதற்ற‌த்தோடு “கேப்டனும் தளபதியும் பேசாதிருப்பது வேதனை தருகிறது. தாங்கள் செய்ய வேண்டியதை சொல்ல வேண்டியததை சொல்லுங்கள்” என அவசரபட்டு அவசரபடுத்தினார். மெளனம் கலைத்த கார்வெல்கோ கூறியது, “மன்னிக்க வேண்டும், இதற்கான முடிவை எங்களால் உடனடியாக எடுக்க முடியாது, காரணமும் கூற முடியாது.

எங்களிடையே பரதவர்களின் செல்வங்கள் அனைத்தும் வரியாக தெரியாக மதத்திற்கான கொடையாக ஒப்படைக்க பட்டாலும் அதற்கான வழிமுறைகள் கொச்சின் போர்துகீசிய தலைமை கோட்டையில் இருந்தும் லிஸ்பன் மாநகரத்து மாமன்னனின் ஆனையின்படியே செயல்படுத்த முடியும் ” என திக்கி திணறி பதில் கூற,

வீராவேசமான வீரபாண்டியனார், “நாயக்க அரசு வாளெடுத்து எம் தலைகளை கொய்த போதும் யாமறியா விஞ்ஞான விபரீத‌ துப்பாக்கி வெடிகுண்டுகளால் எம் இனத்தை சிதைத்த போதும் கடலையும் விடாது, கடற்புரத்தையும் பகைவர் தொடாது காத்தோம். காப்பதற்காகவே உம்மை தொடர்ந்தோம் உம் மதத்தையும் ஏற்று மறுப‌டியும் கடலை மீட்டெடுத்தோம்

செய் நன்றிகாக இன்று வரை செந்நீரை சிந்தி வருகிறோம் ஆனாலும் தங்களின் மேலாண்மை மிக்க அதிகாரம் இந்த பாமர‌ பரதவனின் மானம் காக்க‌ வழிமுறை விதிமுறை கூறும் போது வெட்கித்து போகிறோம்” என கூறியபடி... கண நேரத்தில் முடிவெடுத்த வீரபாண்டியனார், புரஞ்சேரனாரை அழைத்து மட மடவென்று மடல் ஓலை ஒன்றை வரைந்து, கொற்கை கோவிடம் அளிக்க அவசரகதியாய் அனுப்பி வைத்தார்.

ஓரிரு நாட்களிலே பரதவ கடலோரம் எங்கும் பணம் திரட்டப்பட்டு அது தன்மானத்துடன் மரைக்காயர் மூலம் நாயக்க அரசுக்கு செலுத்தபட்டது. குறிப்பிட்ட நாளென்று முத்து நகர் கல் மண்டபத்திலே சிறைபிடிக்கபட்ட பிணையாளர்களை மீட்டெடுப்பதற்கான பரத மறவ போர்துக்கீசிய கூட்டமைப்பு ஒன்று கூடியது. பாண்டியம்பதி பட்டங்கட்டிமார், மறவ படையோடு, போர்த்துக்கீசியரும் காத்திருக்க பெரும்படையோடு வந்த விதாலன் அனைவரையும் ஒப்படைத்ததோடு போர்த்துக்கீசியர் இருக்க பரதவத் தலைவனைக் கட்டி தழுவிக்கொண்டான்.

பரதவத் தலைவனின் காதுகளிலே "நாம் இங்கே பிறந்த அண்ணன் தம்பிகள் பரங்கியரை மட்டும் நம்பாதே பாண்டியரே. உன்னை தனிமையில் சந்திக்கிறேன்" என்று பாசாங்காய் பாசத்தை பறிமாறினான். ஆனால் கர்மவீரன் காத்தவராயன் கைதிகளின் வரிசையில் இல்லாததைக் கண்ட பாண்டியனார் பதட்டமானார். "என் பிள்ளை காத்தவராயன் எங்கே ?" என அடக்க முடியாமல் அலறியபோது பினைக்கைதிகளின் வரிசையில் நின்ற‌ தூயத்தந்தை ஓலமிட்டு அழுதார்.

ஒன்றும் புரியாத வீரபாண்டியனார் "எம்குலம் காக்கும் புண்ணிய சாமியே..! புலிமறவன் காத்தவராயன் எங்கபோனான் சாமி" என தூயதந்தையை நோக்கி கேட்க ... தூய தந்தை பதிலுரைக்காது இன்னும் இன்னும் தேம்பி அழ‌‌...

இறுக்கமான மனதுடனே நாயக்கப்படை நா திறக்காது மெளனித்திருந்தது. அந்த மெளனமே மீண்டும் மீண்டும் பாண்டியருக்கு அச்சத்தையும் மட்டிலடங்கா சோகத்தையும் அதன் உள்ளூரான கோபத்தையும் கனலாய் உருவாக்கி வெடித்தது. "காத்தவராயனின் உடல் நிலை காரணமாக உரிய மருத்துவ சிகிச்சையில் உள்ளார், பரதவ தலைவரே நேரில் க‌ண்டு விசாரிக்கலாம்".

பதட்டமே இல்லாமல் பவித்திரமாய் விதாலன் பதில் பகர்ந்த்தான். ஆனால் பினையாளியாக இருந்து பரதவரின் போராட்டதாலும் பணத்தாலும் மீட்டெடுக்கப்பட்டு வந்த கேப்டன் கொட்டின் கோ போர்த்துகீசிய பாக்ஷையிலே “நம்பாதே ஏதோ சதி இருக்கிறது காத்தவராயன் இருக்கிறானா..? என்பதே சந்தேகமாய் இருக்கிறது ” என்று சொல்ல‌.

அதிர்ச்சியை தாங்கமுடியாத தலைவன் ஆக்ரோக்ஷமாய் கூச்சலிட்டார். போர் தர்மம் தெரியாதவர்களிடம் போரிட்டு என்ன இலாபம்? உயிரின் உன்னதம் அறியாத உன்மத்தனிடம் உண்மையை எதிர்பார்பதால் என்ன பலன்?...

"விதாலா..! பரதவரின் வீரம் வீணாகிப் போனதோ? பாண்டிய வம்சம் பாழாகி போனதோ? மண்ணாசை கொண்ட மன்னர்கள் மாந்தர்களை வதைத்தாலும் கடலரசர் எம்மை கடுகளவும் கரைக்கமுடியாது. காத்தவராயனின் உயிர் என்பது ஓராயிரம் பரதவரின் வீரமாகும். மறந்துவிடாதே பரதகுலம் என்றுமே மன்னிக்காது."

அதற்க்கு படைசூழ் விதாலன் "பாண்டியரே! அதிகமாக பேசாதீர். இந்த நாடு எமக்கு சொந்தம் விஜயனகர் பேரரசு இதன் வளங்களும் நாயக்கர் எமக்கு சொந்தம். மாதத்திற்கு நான்குமுறை எமக்கான‌ கொடையை செலுத்திய நீங்கள் தப்பிப்பதற்காக் காலங்காலமாக கொண்டாடிய தெய்வங்களை விட்டுக்கொடுத்தவர் நீங்கள்.

உங்கள் பாரம்பரிய மரபை உதறி தள்ளி உதவாக்கரைகளுக்கு உதவியவர்கள் நீங்கள். உங்களுக்கு வீரத்தையும் விவேகத்தையும் பேசுவதற்க்கு தகுதியிருக்கிறதா?" ஆக்ரோக்ஷக் கூச்சலிட்ட பாண்டியர் உடன்படிக்கைக்கான‌ உடன்பாட்டு கூட்டம் என்பதையும் மறந்து ஆணவத்தோடு விதாலனை நோக்கி பாய்ந்தார். அவருக்கு முன்பே விதாலனை நோக்கி பாய்ந்த மறவர்களை சபையினரே கெட்டிபிடித்து வெளியேற்றினர்.

நாயக்கரிடமிருந்து உயிர்பிழைக்க நினைத்த போர்த்துக்கீசியர்கள் பரதவதலைவனின் ஆவேசத்தை உணர்ந்தாலும் சுற்றி சூழ் பகைவரிடமிருந்து தப்பிப்பதற்காக பேசாது மௌனமாயிருந்தன‌ர். போர்த்துகீசிய தலைவர்களும் மறவகுல தலைவர்களும் நிலைமை தடுமாறுவதை உணர்ந்தப்படி பரதவரின் சார்பாக மேற்க்கத்தியான் புரஞ்சேரானாரை காத்தவராயனை காண அனுப்பி வைத்தனர்.


..............................

…. கடல் புரத்தான் ….

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com