பழைய ஏற்பாடு கூறும் பரதவரின் கடல் வணிகம்
யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ் (MOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது.
மோசசு(ஸ்) கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசசு(ஸ்) அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.
மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசசு(ஸ்). (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).
ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர்களின் சமயத்தலைவரான மோசசு(ஸ்) கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.
![]() |
Solomon and the Queen of Sheba, painting by Giovanni Demin (1789-1859) |
கி.மு. 1000 வாக்கில், இசு(ஸ்)ரேலை ஆண்ட சாலமன் (SOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா (SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம் (HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிசு(ஸ்) (TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர் (OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன (ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).
சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள்.
உதாரணம்:
1.துகிம்- தோகை, மயில்தோகை;
2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள்
3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும் (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51). பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)
ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.