வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 18 December 2016

எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு(ஸ்) நூல் கூறும் பரதவரின் வணிகம்

“காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு, வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். 

இந்தியாவில் (தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என எரித்ரேயக்கடலில் பெரிப்ளசு(ஸ்) என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.சு(ஸ்)காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 ) கிப்பாலசு(ஸ்) (Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்களும் (திராவிடியர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் சு(ஸ்)காப் அவர்கள்.

கென்னடி என்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில் (Journal of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக் கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய - பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில் ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது எனக் கொள்கிறார். 

இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் என்றும் குறிப்பிடுவதாக சு(ஸ்)காப் அவர்கள் தெரிவிக்கிறார்.

இதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து வந்ததை பேசவந்த சு(ஸ்)காப் அவர்கள், ஏழரா (eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின் முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்).

இந்த பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள் பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன என்கிறார். 

ஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும் அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே உண்மை என்கிறார்.

மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228 )

ஆக திரு. சு(ஸ்)காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம்.

திரு.சு(ஸ்)காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு(ஸ்)” என்ற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளசு(ஸ்) அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), சு(ஸ்)காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை.

பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளசு(ஸ்) காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.சு(ஸ்)காப் அவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ளார். பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல் வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம்.

பிளினி, சு(ஸ்)ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் சு(ஸ்)மித், சு(ஸ்)வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. சு(ஸ்)காப் எழுதி உள்ளார்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com