வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 13 December 2016

அகநானூறு கூறும் பரதவரின் பாரம்பரிய மணமுறை

இன்று வரை கடற்கரை மீனவர் மத்தியில் தன் வீட்டு பெண்ணை ஆடவன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பதற்கு முன்பு அவன் கடல்தொழில் நன்கு தெரிந்தவனா? வாடையிலும் கோடையிலும் தொழில் செய்து குடும்பத்தை காப்பற்றுவானா? என்று அறிந்து கொள்வதற்கு சிறிது காலம் தங்களோடு கடல் தொழில் செய்து அவனது திறமையை அறிந்து கொண்ட பின்னரே தன் வீட்டு பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க ஒத்துகொள்வர். இது நமது ஆதி பரதவர் வழி வந்த பாரம்பரிய மணமுறை என்பதனை இந்த அகநானுற்று பாடலிலே சங்க கால புலவர் அம்மூவனார் எடுத்து இயம்பியுள்ளார் .

செய்யுள் :

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்

பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,

திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி

அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,

நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,

பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,

நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு

இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,

பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,

படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,

தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்

கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்

தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்

கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

அகநானூறு  - 280


பொன்னன்ன செருந்தியொடு பன்மலரும் விரவி முடித்துக் கவினெலாம் திரண்ட கார் குழலாள்; ஆய்ந்த தொடியினை அணிந்த தலைமகள்; அடர்ந்த மணற்பரப்பின் தலைவன் மகள்.

கிடைப்பதற்கு அரிய, பொருளும், அணிகலன்களும் எவ்வளவுதான் அளித்தாலும் அவளை நமக்கு மணம் செய்து தரமாட்டான்; நமது ஊரைத் துறந்து அவனை அடைந்துவிட வேண்டியதுதான்;

அவனை சார்ந்து, பெரிய கடற்கரையின் கண்ணுள்ள அவனது உப்பளத்திற் சென்று ஆங்கு உழைத்தும், அவனது உப்புப் பொதியுடன் திருந்தி வருந்தியும்,

பெரிய அழ்கடலின்கண் அவனுக்காகக் கட்டுமரத்தில் சென்று மீன் வேட்டையாடி உழைத்தும், அவன் வயமாகித் தாழ்ந்தும், பணிந்தும், சூழ்ந்து தொண்டாற்றியும் வரின்,

பரந்த அலைகடலின் சிறந்த முத்தையெலாம் அள்ளிக் கரையில் குவித்துப் பங்கீடு செய்யும் நிறைந்த செல்வன்; சோலை சூழ்ந்த எழில்மிகு துறைக்குத் தலைவனான அவள் தந்தை .

அறநெறியினை உணர்ந்து, மனங்கனிந்து அப்பொழுதாவது தன் மகளை எனக்கு தரமாட்டானா ? தருவன்! இது உறுதி? " என முடிவு செய்கிறான்; அவ்வாறே செய்து இறுதியில் அவளை மனைவியாய்ப் பெற்று மனையறம் புரிந்து மகிழ்ந்து வாழ்கிறான்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com