வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 25 October 2017

புறநானூறில் பரதவர்

புறநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்


புறநானூறு

புறம் + நானூறு = புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம்.


24. பாண்டியன் தலையலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பத்துப்பாட்டிற் காணப்படும் மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனார், இப் பாட்டிலும் அக் காஞ்சியே பொருளாகப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகின்றார். இதன்கண் "நல்ல ஊர்களை இடமாகக் கொண்டு சிறந்த எவ்வி யென்பானுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்று கொண்ட நெடுஞ்செழிய, நின் நாண்மீன் நிலைபெறுக; நின் பகைவர் நாண்மீன் பட்டொழிக; வாள் வீரர் வாழ்த்தப், பரிசிலர் புகழ் பாட, மகளிரொடு மகிழ்ந்து இனிதொழுகிவாயாக; அங்ஙனம் ஒழுக வல்லோரையே வாழ்ந்தோர் என்பர்; இவ்வுலகத்தே தோன்றுப் புழ் தோற்றுவியாது உயிர் வாழ்ந்து விளிந்தவர் பலராயினும் அவர் வாழந்தோர் எனப்படார்" என்று நாளும் போர் கருதி யுழலும் அவன் நெஞ்சினைத் தெருட்டி இன்ப வாழ்வில் ஈடுபடச் செய்கின்றார். அருளும் பொறையு மேவுமுள்ளத்தனாவ னென்பது கருத்து.


நெல்லரியு மிருந்தொழுவர்

செஞ்ஞாயிற்று வெயின்முனையின்

தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து

திண்டிமில் வன் #பரதவர்

வெப்புடைய மட்டுண்டு 5

தண்குரவைச் சீர்தூங்குந்து

தூவற் கலித்த தேம்பாய் புன்னை

மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்

எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து

வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10

முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்

இரும்பனையின் குரும்பைநீரும்

பூங்கரும்பின் றீஞ்சாறும்

ஓங்குமணற் குவவுத்தாழைத்

தீநீரொ டுடன்விரா அய் 15

முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும்

தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய

ஓம்பா வீகை மாவே ளெவ்வி

புனலம் புதவின் மிழலையொடு கழனிக்

கயலார் நாரை போர்விற் சேக்கும் 20

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்

குப்பை நெல்லின் முத்தூறு தந்த 

கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய

நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது

படாஅச் செலீஇயர்நின் பகைவர் மீனே 25

நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு

நின்று மூத்த யாக்கை யன்னநின்

ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த

வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த

இரவன் மாக்க ளீகை நுவல 30

ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய

தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்

தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது

வல்லுநர் வழ்ந்தோ ரென்ப தொல்லிசை

மலர்தலை யுலகத்துத் தோன்றிப் 35

பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே. (24)



திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. அவனை மாங்குடி கிழார் பாடியது.

உரை: நெல் அரியும் இருந்தொழுவர் - நெல்லை யரியும் பெரிய உழவர்; செஞ்ஞாயிற்று வெயில் முனையின் - செஞ் ஞாயிற்றினது வெயிலை வெறுப்பின்; தெண் கடல் திரை மிசைப் பாயுந்து - தெளிந்த கடற்றிரையின்மேலே பாயும்; திண் திமில்வன் பரதவர் - திண்ணிய திமிலையுடைய வலிய நுளையர்; வெப்புடைய மட்டுண்டு - வெம்மையையுடைய மதுவையுண்டு; தண்குரவைச் சீர் தூங்குந்து - மெல்லிய குரவைக் கூத்திற்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடும்; தூவற் கலித்த தேம்பாய் புன்னை-கடற்றுவலையாலே தழைத்த தேன் பரந்த புன்னையினது; மெல்லிணர் கண்ணி மிலைந்த மைந்தர் - மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர்; எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து - விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும்; வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் - வண்டு மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்து; முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் - கடல்முள்ளிப் பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையையணிந்த மகளிர்; இரும் பனையின் குரும்பை நீரும் - பெரிய பனையினது நுங்கின் நீரும்; பூங்கரும்பின் தீஞ்சாறும் - பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும்; ஓங்கு மணல் குவவுத் தாழை தீ நீரோடு - உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே; உடன் விராஅய் - கூடக் கலந்து; முந்நீர் உண்டு - இம் மூன்று நீரையுமுண்டு; முந்நீர்ப் பாயும் - மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும்; தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய- பரிக்க வொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்லவூர்கள் பொருந்திய; ஓம்பா ஈகை மாவேள் எவ்வி - பொருளைப் பாது காவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது; புனலம் புதவின் மிழலையொடு - நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றத்துடனே; கழனிக் கயலார் நாரை - வயலிடத்துக் கயலை மேயும் நாரை; போர்விற் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்; பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் - பொன்னணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது; குப்பை நெல்லின் முத்தூறு தந்த - திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட; கொற்ற நீள் குடைக் கொடித்தேர்ச் செழிய - வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியாற் பொலிந்த தேரினையுமுடைய செழிய; நின்று நிலை இயர் நின் நாண் மீன் - நின்று நிலைப்பதாக நினது நாளாகிய மீன்; நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீன் - நில்லாது பட்டுப் போவதாக நின் பகைவருடைய நாளாகிய மீன்; நின்னொடு தொன்று மூத்த உயிரினும் - நின்னொடு பழையதாய் முதிர்ந்த உயிரினும்; உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன - உயிருடனே நின்று முதிர்ந்த உடம்பு போன்ற; நின் ஆடு குடிமூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் - நினது வெற்றிக் குடியொடு மூத்த சீரிய குடியின்கட் சிறந்த வாட்போராலே வாழ்வோர்; தாள் வலம் வாழ்த்த - நினது முயற்சி வலியை வாழ்த்த; இரவல் மாக்கள் ஈகை நுவல - இரக்கும் பரிசிலர் நின் வண்மையைச் சொல்ல; ஒண்டொடி மகளிர் - ஒள்ளிய வளையையுடைய மகளிர்; பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மடுப்ப - பொற் கலத்தின்கண் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை யுண்டு; மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; ஆங்கு இனிது ஒழுகு மதி - அப்படி இனிதாக நடப்பாயாக; பெரும-; அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப - அவ்வொழுக்கம் வல்லவரை வாழ்ந்தோரென்று சொல்லுவர் அறிவுடையோர்; மலர்தலை யுலகத்துத் தோன்றி - பரந்த இடத்தையுடைய உலகத்தின்கண்ணே பிறந்து; தொல்லிசை செலச் செல்லாது - பழைய புகழ்தான் பரக்க வொழுகாது; நின்று விளிந்தோர் பலர் - நின்று மாய்ந்தோர் பலர், அவர் வாழ்ந்தோரெனப்படார் ஆதலான் எ-று.

மேல் எண்ணப்பட்ட பெயரெச்ச மூன்றும் மிழலை யென்னும் பெயர் கொண்டன; அவை உம் உந்தாய் நின்றன, முந்நீர்ப் பாயும் நல்லூர் என்க. உயிரினும் சிறந்த யாக்கை யன்ன வாளின் வாழ்கரெனக் கூட்டி, உயிர்க்கு யாக்கை போலவும், யாக்கைக் குயிர்போலவும் இன்றியமையாது இரண்டுமாயிருக்கின்ற வாளின் வாழ்நர் என்க. நின் குடியொடு மூத்த, நின் யாக்கை யன்ன, விழுத்திணைக்கண் உளராய, நின்னுயிரினுஞ் சிறந்த வாளின் வாழ்நரெனக் கூட்டினுமமையும்.

செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன்படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார் ஆதலால், பெரும, வாழ்த்த நுவல, மடுப்ப, மகிழ்சிறந்து இனிதொழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோரென்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

தாங்கா விளையு ளென்பதூஉம் பாடம். ஆங்கது, ஒருசொல். ஆங்கசை நிலையுமாம் இனி, தொல்லிசையையுடைய உலகத்துத் தோன்றி மேற்சொல்லப்பட்ட நன்மைகள் தமக்குப் பரக்க வொழுகாது நின்று விளிந்தோர் பலர் என வுரைப்பாருமுளர். இது நிலையாமை கூறி, இனிதொழு கென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சி.

விளக்கம் : தொழுவர் கடல் திரைமிசைப் பாயும் மிழலை, பரதவர் குரவைச் சீர்தூங்கும் மிழலை, மைந்தர் தலைக்கை தரூவும் மிழலை என்ற விடத்து, பாயும், தூங்கும், தரூஉம் என நின்ற மூன்று பெயரெச்சங்களிலும், ஈற்றுஉம், உந்தாய், பாயுந்து, தூங்குந்து, தரூஉந்து என வந்தன. "உம் முந்தாகும் இடனு மாருண்டே" (தொல். இடை 44) என்பர். சீர் - தாளம். சீர் தூங்குதலாவது தாளத்திற்கேற்ப ஒத்தறுத் தாடுதல். கடற்கானலிடத்தப் புன்னையின் வேர் நிலத்துக்குள் ஆழச் சென்று காற்றால் அலைப்புண்டு வீழ்ந்தொழியாமற் காக்க, இலைகள் காற்றிற் பறக்கும் நீர்த் துவலைகளை யேற்றுத் தழைப்பிக்கும் என்ற கருத்தால், "துவற் கலித்த புன்னை" என்றாராக; அதற்குக் "கடற்றுவலையாலே தழைத்த புன்னை" யென உரை கூறப்பட்டது.

துவலை, சிறுநுண் நீர்த்துளி, ஊர்களில் உறைவார்க்கு அவ்வூர் வருவாய் நிரம்பாதென்னுமாறு மிக நிறைந்த மக்களையுடைய ஊர் என்பதைத் "தாங்கா உறையுள் ஊர்" என்றார். தாங்கா விளையுளையுடையவூர் என்ற பொருளமைய, "தாங்கா விளையுள்" என்று பாடமோதுதலுண்டு. சில பொருள்கள் பெறுதற்கரியன் எனக் கருதி இரப்போர்க்கு ஈயாதொழிதலின்றி, அரியனவற்றையும் ஈயும் வண்மையுடையன எவ்வி என்பதை, "ஓம்பா ஈகை எல்லி" என்றாராதலால், ஓம்பாமைக்குப் பொருளைப் பாதுகாவாமை என்றுரைத்தார். 

வாய்த் தலைகளில், நீர் வேண்டுமளவிற் செல்லவும் வேண்டா விடத்து நிறுத்தவும் வேண்டிக் கதவுகள் அமைத் திருத்தல் தோன்ற, "புனலம் புதவின் மிழலை" என்றார். புதவு - கதவு. சேக்குதல், தங்குதல். ஈண்டு உறங்குதல் என்னும் பொருளதாயிற்று. ஒருவரை வாழ்த்துவோர் அவர் பிறந்த நாளை வாழ்த்துதலும் மரபு. அதுபற்றியே, "நின் நாண் மீன் நின்று நிலைஇயர்" என்றார். உயிர்க்கு வளர்தலும் தேய்தலும் இல்லையாயினும், உயி ரில்வழி அதுநின்ற உடற்கு வளர்ச்சி கிடையாதாகையால், "உயிரொடு நின்று மூத்த யாக்கை" யென்றார். 

ஆடு குடி: ஆடு - வென்றி. மகிழ்சிறத்தற் கேது உண்டாதலால், மடுப்ப மகளிர் அதனையுண்டு என்பதைப் பெய்துரைத் தார். இனி தொழுகுமதி என்கின்றாராதலால், அதற்கு, நின்று விளிந் தோர் வாழ்ந்தோ ரெனப்படாராதலான் என்பதை ஏதுவாகக் கூறினார். தொல்லிசையை உலகத்துக்கேற்றி மலர்தலை யுலகத்துத் தோன்றிச் செலச் செல்லாது எனக் கொண்டு, "தொல்லிசையை.... பலர்" என்று கூறுதலு முண்டென்று உரைத்தார்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com