வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 26 October 2017

போர்ச்சுகீசியர்களின் இந்தியா வழிகாட்டி கருவி
மூழ்கிய கப்பல்களில் தேடும் பணியில் ஈடுபடும் டேவிட் மியார்ன்ஸ் என்ற வீரர், உலகின் மிகப் பழமையான வழிகாட்டும் கருவியை கண்டுபிடித்துள்ளார். தற்போதுள்ள கப்பல்களில் நவீன வழிகாட்டும் கருவிகள் உள்ளன. இதன் மூலம் எங்கு இருக்கிறோம், ஒரு இடத்துக்கு செல்ல எந்த திசை நோக்கி செல்ல வேண்டும் என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பழங்காலத்தில் கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்ட மாலுமிகளுக்கு கோணமானி என்ற அளவுகோல்தான் நேவிகேஷன் கருவியாக இருந்துள்ளது. இதன் மூலம் வானத்தில் உள்ள சூரியன் அல்லது நட்சத்திரம், மற்றும் தொடுவானத்தை வைத்து கோண அளவு கணக்கிடப்பட்டு கடலில் கப்பல் நிற்கும் அட்சரேகை தீர்மானிக்கப்பட்டது. 

இந்த கோணமானியை உருவாக்கியவர்கள் போர்ச்சுகீசியர்கள். கடந்த 1480ம் ஆண்டு இது பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மியான்ஸ் என்பவர் ‘ப்ளூ வாட்டர் ரெக்கவரீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது கடலில் மூழ்கிய கப்பல்களை கண்டுபிடித்து அதில் உள்ள பொருட்களை மீட்கும் பணியில் ஈடுபடுகிறது. ஓமன் கடற்கரை அருகே கப்பல் ஒன்று மூழ்கி கிடப்பதை ப்ளூ வாட்டர் ரெக்கவரீஸ் நிறுவனம் கடந்த 1998ம் ஆண்டு கண்டு பிடித்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் இந்த கப்பலில் உள்ள பொருட்களை மீட்கும் பணி, ஓமன் கலாச்சார துறையுடன் இணைந்து 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குறித்து டேவிட் மியான்ஸ் கூறியதாவது: ஓமன் அருகே மூழ்கி கிடக்கும் இந்த கப்பல் ‘எஸ்மெரால்டா’ என்ற கப்பலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது கடந்த 1502-1503ம் ஆண்டில் போர்ச்சுகீசியரான வாஸ்கோடாகாமா இந்தியாவுக்கு 2வது முறையாக பயணம் மேற்கொண்ட போது வந்த கப்பல்களில் ஒன்று. 

கடலில் மூழ்கி இந்த கப்பலுக்குள் சென்று ஆய்வு செய்தபோது ஒரு வெண்கள தகடு போன்ற கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்தபோது, இது முக்கியமான கருவியாக இருக்கலாம் என நினைத்தேன். இதை 3டி ஸ்கேனிக் தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் வில்லியம் ஆராய்ந்ததில், இது சூரியனை அடிப்படையாக கொண்ட கோணமானி என்பதை உறுதி செய்தார். இதற்கு முன் 1533ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கோணமானி ஒரு கப்பலில் இருந்து மீட்கப்பட்டது. அதுதான் உலகின் மிகப் பழமையான கோணமானியாக இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்ட்ட கோணமானி 1496ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதில் போர்ச்சுக்கல் மன்னர் முதலாம் மேனுவல் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஓமன் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது என்றார்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com