வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 20 October 2017

ஆழ்கடல் தேடல்
ஆழ்கடலில் மூழ்கி மூச்சடக்கி நம்மூர் கடற்பகுதிகளில் எடுக்கப்பட்ட முத்துகளை, உலகமே முன் வந்து வியாபாரம் செய்து கொண்டன. ஏன்...? நம்மவர்கள் பிள்ளைகளுக்கும், ஊர்களுக்கும் கூட ‘முத்து’ என பெயரிட்டு அழகு கண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மணப்பாடு வரைக்கும் ஏறத்தாழ 160 கிமீ தூரமுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 770 சதுர மைல் பரப்பில் இருந்த 600 படுகைகளில் இருந்து முத்துச்சிப்பிகளை நம்மவர்கள் சேகரித்திருக்கினறனர். கடற்கரையிலிருந்து 11 முதல் 16 கிமீ தூரத்தில் 20 மீட்டர் ஆழ்கடற்பகுதிகளில்தான் இந்த சிப்பிகள் சேகரிக்கப்பட்டன.

சிப்பிகள் ஒட்டி வளரும் ‘பார்’ எனும் இந்த பாறைகள் கொண்ட படுகைப்பகுதிகளை ‘தேவிபார்’, ‘தொள்ளாயிரம் பார்’, ‘ஆறுமுகம் பார்’, ‘பெர்னான்ட்ஸ் பார்’ இப்படி பெயரிட்டு வைத்திருந்தனர். கடலலை ஆவேசமற்ற நவம்பர் முதல் மே மாதம் வரையுள்ள காலம் முத்துக்குளிப்பிற்கு உகந்த பொழுதாகும். தினம் 800 ஆட்கள் மூலம் குறைந்தது 2 லட்சம் முத்துச்சிப்பிகள் சேகரிப்பு நடந்தது. முத்துக்குளித்து எடுத்து வரும் சிப்பிகளில் மூன்றில் இரு பகுதி அரசுக்கு சேர்ந்தது.

இந்த வருவாய் அரசு நிர்வாக செலவுகளுடன், ராமேஸ்வரம், திருப்புல்லாணி உள்ளிட்ட ஆலய நிர்வாக செலவுகளுக்கும் அளிக்கப்பட்டதை நாயக்கர், சேதுபதி மன்னர்களின் செப்பேடுகள் காட்டுகின்றன. வரலாற்றில் பெரிப்ளஸ் (கிபி 80), தாலமி (கிபி 130) போன்றோர், மன்னார் வளைகுடா பகுதியில் கிறித்துவ ஆண்டின் தொடக்க காலத்தில் நடந்த முத்து குளித்தலின் உலகளாவிய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் கடற்கரையில் கிபி 6ம் நூற்றாண்டில் நடந்த முத்து குளித்தலின் மேன்மையை, எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இண்டிகோ பிளஸ்டாஸ் தன் குறிப்புகளில் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். கிபி 9 - 11ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய வணிகர்கள் கீழக்கரையில் நடத்தி வந்த முத்து விற்பனை, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த காலங்களில் முத்துக்குளிப்பில் தூத்துக்குடி முன்னிலையில் நின்றது. ஆனால் சிப்பியில் வளம், போதிய அளவு வருமானம் இல்லாத நிலையில், ஒரு காலத்தில் உலகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்த தமிழகத்தின் முத்துக்குளிப்பு தொழில் நசிந்து போய், கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த முத்துக்குளிப்பு நம்மை விட்டு கழன்று காணாமல் போய் விட்டது. 1708ல் 4 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரத்து 637 முத்துச்சிப்பிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில், 1959ல் இந்த எண்ணிக்கை பன்மடங்கு சரிந்து 1 கோடியே 64 லட்சத்து 28ஆயிரத்து 298 முத்துச்சிப்பிகளே சேகரிக்கப்பட்டதை இந்த இரு காலத்து ஆவணங்கள் காட்டுகின்றன.

இயற்கையாக மூழ்கி முத்தெடுத்தது போய், அறிவியல் முறையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் தரை தொட்டு சேகரித்த சிப்பிகளில் செயற்கை முறையில் முத்து உற்பத்திக்கிற தொழில் நுட்பம் இக்காலத்தில் வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் நம்மூரில் நடந்த ‘முத்துக்குளித்தல்’ ஒரு வரலாற்று நிகழ்வாக நம் சம காலத்திலேயே மாறிப் போயிருப்பது வியப்பிற்குரிய உண்மை!

உறவின் வலிமையை உலகுக்கு உணர்த்தியது

மதுரை வரலாற்று ஆய்வாளர் தா.தேவராஜ் அதிசயராஜ் கூறும்போது, ‘‘அக்காலத்து முத்துக்குளித்தல் இன்று அழிந்திருக்கிறது. முத்துக்குளித்தல் நடந்த ‘பொற்கை’ ஊர்ப்பெயரிலேயே, பாண்டிய மன்னரை ‘பொற்கை வேந்தன்’ என்றனர். சங்க இலக்கியத்தில், எந்தக் கடையில் எவ்வகை முத்து விற்கிறது என்பதைக் காட்ட அந்த கடை முன்பு, அதற்குரிய கொடி பறந்ததை சங்க இலக்கியம் காட்டுகிறது. சந்தையில் கொட்டி விற்கும் முத்துச்சிப்பிகளை வாங்கி வந்து, உடைத்தால் முத்தும் கிடைக்கலாம். ஏமாறலாம் என்ற ‘அதிர்ஷ்ட நிலையும்’ அக்காலத்தில் இருந்தது.

தொடர் ஆட்சி அதிகாரத்தில் முத்துகளை மக்களிடம் விலை குறைத்து வாங்கியதாலும் இத்தொழில் நசிந்தது. மனைவியின் சகோதரன் பாதுகாப்பிற்கு மேலிருந்து கயிற்றைப் பிடிக்க, சகோதரியின் கணவரே மூழ்கி முத்தெடுக்கும் நிலை ‘உறவு வலிமையை’ காட்டியது. மரணமா? வாழ்வா? போராட்டத்தில் நடந்த இத்தொழிலை அக்குடும்பத்தினரே தொடராததும், நுட்பங்களை அடுத்த தலைமுறைக்குத் தராததும் இத்தொழில் அழிவிற்கு காரணமானது. இன்று அசல், நகல் அறியும் அறிவுணர்வின்றி, உயிரைப் பணயம் வைத்து எடுக்கிற முத்துக்குரிய விலையை விட, செயற்கை முத்துகள் மலிவாய் கிடைப்பதும் முத்து குளித்தலை முடக்கி விட்டன. பழமைப் பண்பாடு காத்திட, வளர்ச்சிக்கென கடலில் மீன்பிடி தடைகாலம் இருப்பதுபோலவே, முத்து குளித்தலுக்கென ஒரு கடற்பகுதியை விட்டு வைக்கும் சட்டம் போடலாம்,’’ என்றார்.

நன்றி: www.dinakaran.com
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com