அதன் தொடர்ச்சியாக 1883 ஆம் ஆண்டு வேம்பார்
பரிசுத்த ஆவி ஆலயத்தின் பங்குத்தந்தை சங். இராயப்பன் சுவாமிகள் தனது பெயர் கொண்ட
புனிதரான இராயப்பர் பெயரால் ஓர் ஆரம்பப் பாடசாலையை (புனித இராயப்பர் ஆரம்ப
பாடசாலை) நிறுவினார். அப்பாடசாலையானது சங். D. சுவாமிநாதர் சுவாமிகள்
பங்குத்தந்தையாக இருக்கும் காலத்தில் 1903 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் லோயர்
பிரெய்மெரி கலப்பு பாடசாலையாகவும், 1905 ஆம் ஆண்டு அப்பர் பிரெய்மெரி கலப்பு
பாடசாலையாகவும் மாற்றப்பட்டது. பின்னர் 1907 ஆம் ஆண்டு ஆண்களுக்கு, பெண்களுக்கு
எனத் தனித்தனியாக இரு பாடசாலைகள் பிரிக்கப்பட்டு, ஆண்கள் பாடசாலையில் ஐந்தாம்
வகுப்பு வரையிலும், பெண்கள் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையிலும் கற்பிக்கப்பட்டது.
ஆண்கள் பாடசாலை புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை எனவும், பெண்கள் பாடசாலை அர்ச்.
மார்கிரீத் மரியன்னை பாடசாலை எனவும் அழைக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே புனித
இராயப்பர் ஆரம்ப பாடசாலை தூத்துக்குடி ரேஞ்சுக்குட்பட்ட ஆரம்பப்பள்ளிகள்
நான்கினுள் முதன்மையானதாகத் திகழ்ந்தது.அந்தகாலகட்டத்தில் வேம்பாற்றில் இருந்த அமலோற்பவ ஜுபிலி கிளப் உறுப்பினர்கள் பள்ளியின் நிர்வாகத்திலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டு விளங்கினர். 1912 ல் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன. அமலோற்பவ ஜுபிலி கிளப்பில் ஏற்பட்ட மனதாங்கல் ஆசிரியர் சங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதே சுழலில் பங்குக்குருவாக இருந்த சங். சுவாமிநாதர் சுவாமிகள் மாற்றப்பட்டு புதிய பங்குகுருவாக நியமிக்கப்பட்ட சங். P.J. மரியதாஸ் சுவாமிகள் 1918 ல் புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டும் பொருட்டு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆசிரியர் சங்கத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்கின. இதனால் திரு. சீனியாப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் இராயப்பர் பாடசாலையிலிருந்து விலகி வாலசமுத்திரபுரத்தில் ஏட்டுப்பள்ளி ஒன்றினை நிறுவி கற்பிக்கத் தொடங்கினார். பள்ளியில் கற்பித்தலில் குளறுபடிகள் உருவானதால் பலர் திருச்சி, பாளையம்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று கற்கத் தொடங்கினர்.





.jpg)








