வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 6
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்

2006 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரவிய சிக்குன்குனியா எனும்
விஷக்காய்ச்சல் வேம்பாற்றிலும் கடுமையாகப் பரவியது. ஆரம்பத்தில் இக்காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட நிம்பவாசிகள் புனிதரை இரந்து வேண்டிக் கொண்டதன் பேரில் விரைவில்
குணம் பெற்றனர். பின்னாட்களில் இக்காய்ச்சல் வேம்பாற்றுவாசிகளை மீண்டும்
பாதிக்கவில்லை என்பதையும் குறிப்பிடுவது சாலச் சிறந்தது.
சந்த
செபஸ்தியாரின் மேல் பெரும் பக்தியும், பற்றுறுதியும்,
மரியாதையும்; கொண்ட வேம்பாற்றுவாசிகள் தவறிழைக்கும் ஒருவரிடமிருந்து உண்மையைப் பெற
சந்த செபஸ்தியாரின் முன்னிலையில் வாக்குமூலம் பெறும் வழக்கமும், உறுதி (சத்தியம்) பெறும் வழக்கமும், பெரும் தவறிழைக்கும் ஒருவரிடமிருந்து உண்மையைப் பெற சந்த செபஸ்தியாரை
கட்டி அணைத்து உறுதி (சத்தியம்) பெறும் வழக்கமும் வேம்பாற்றில் அன்றிலிருந்து
வழக்கிலுள்ளது.
ஆண்டின் முதல்
மாதமாம் ஜனவரியில் 11 ஆம் தேதி முதல் 21 தேதி வரை கொண்டாடப்படும் சந்த செபஸ்தியாரின் பெருவிழாவில் முதல் 9 நாட்களும் அவருக்கென கவின்மிகு சிம்மாசனம் அமைக்கபட்டிருக்கும். 19 ஆம் தேதியன்று இரவு சப்பரபவனி நடைபெற்ற பின் சந்த செபஸ்தியாரின்
முகத்தோற்றம் கண்டே அந்த ஆண்டு தங்களுக்கு எவ்வாறு அமையும் என்பதை நிம்பநகரோர்
அறிந்து கொள்வர். அவ்வாறே 20 ஆம் தேதியன்று காலையிலும் சப்பரப்பவனி
நடைபெறும். அதன் பின்னே சந்த செபஸ்தியாரின் மகோற்சவ பெருவிழா நடைபெறும்.
.jpg)
வேம்பாறு
பரிசுத்த ஆவி ஆலயத்தில் கொண்டாடப்படும் மூன்று பெரும் விழாக்களில் பரிசுத்த ஆவி
திருவிழாவும், அந்தோணியார் திருவிழாவும் பங்கு
அளவிலானத் திருவிழாக்களாகவும், செபஸ்தியார் திருவிழா ஊர் திருவிழாவாக,
வெகு விமரிசையாக உலகெங்கும் வாழும்
நிம்பநகரோரால்; நன்றியின் வெளிப்பாடாக கொண்டாடப்படுகிறது.
இன்றளவிலும் தூத்துக்குடி மறைமாவட்டத்தைப் பொறுத்த வரையில் வேம்பாறு என்றாலே
செபஸ்தியார் தான் என்று அறியப்படுகிறது. குறிப்பாக பிற மதத்தவர், பிற இனத்தவர்கள் வேம்பாறு பரிசுத்த ஆவி
ஆலயத்தை செபஸ்தியார் ஆலயம் என்றே இன்றளவிலும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு
வேம்பாறும் அதன் பாதுகாவலராம் சந்த செபஸ்தியாரும் இரண்டுறக் கலந்துள்ளார்கள் என்பது உள்ளங்கனி நெல்லிக்கனியாகும்.
இறுதியாக
மேற்கண்ட அனைத்தையும் உற்றுநோக்குகையில் வேம்பாற்றின் பாதுகாவலராம் சந்த
செபஸ்தியாரின் மேல் வேம்பாற்றுவாசிகள் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியும், பற்றுதலும் ஊழி, ஊழி காலமாக எக்காலத்திலும்
நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
“உந்தனருள்
தந்திடவே மைந்தரும்மைப் போற்றி செய்தோம்.”
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து