வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 15 April 2015

நிம்பநகர் என்னும் வேம்பார் - எண்சீர்
நிம்பநகர் என்னும் வேம்பார் - (எண்சீர்)


புனிதரான சவேரியாரின் பாதம் பட்ட
புனிதரிவர் புதுமைகளைக் கண்டு கொண்ட
அணிதவழும் நிம்பநகர் என்னும் வேம்பார்
அலைகடல் சூழ் அரும்பதியில் அங்குமிங்கும்
அணிஅணியாய் வேப்பமரம் சூழ்ந்து நிற்க
அன்றோருங்கால் மீனவராம் பரவர் மக்கள்
கனிகொடுக்கும்  திராட்சைபோல படர்ந்து நின்று
கடல்வளங்கள் தேடிவந்து வாழ்வு கொண்டார்!

கல்விக்கண் திறந்தபின்னர் கடலைத் தாண்டி
காசுபணம் சேர்ப்பதற்காய் இலங்கை சென்றார்
அல்பகலாய் உழைத்ததனால் செல்வம் பெற்று
அவரவரின் குடும்பவாழ்வு சிறக்க செய்தார்
கல்மனைகள் கல்விதரும் பாட சாலை
கச்சிதமாய் நிறுவியவர் பெருமை பெற்றார்
தொல்தமிழின் இனிமையினை நுகர்ந்து தங்கள்
திறமையினால் புலமைபெற்று அறிஞர் ஆனார்!

பரிசுத்த ஆவியாரின் கோயில் கட்ட
பொன்மனத்துச் செம்மலான அய்யாத் தம்பி
அருளுடைய தமேலான்பார் அள்ளித் தந்தார்
அவருடைய தொண்ணூறு ஆய்ரம் ரூபாய்
பரிசுத்த ஆவியாரின் கோயில் காண
பெருமனத்தால் ஊராரும் உழைப்பு நல்க
அருமையான ஆலயமே எழுந்த தாமே
அன்புடைய தமேலுக்கு நன்றி என்றார்!

காலத்தின் கோலத்தால் கல்விக் கூடம்
கரைகடந்து அகன்றுபோக அல்ல லூற்றார்
ஞாலத்தில் கல்வியன்றி வாழ லாமோ?
நியாயத்தைக் கண்டறிந்த ஞானி யான
நிம்ப நகரோர் ஒன்றி ணைந்து
தம்முடைய செல்வாக்கை உபயோ கித்து
மேலிடத்தின் உத்தரவால் செபஸ்தியார் பள்ளி
மேன்மையுடன் வேம்பாரில் நிறுவ லானார்!

பரிசுத்த ஆவியாரின் கோயில் செய்து
புனிதரான செபஸ்தியாரின் பாது கொண்டு
திருச்சபையின் விசுவாச வாழ்வு தாங்கி
திருச்சபையின் துறவறத்தில் தொண்டு செய்ய
அருமந்த பிள்ளைகளை அர்ப்ப ணித்தார்
ஆனந்த வாழ்வியலை அடைந்து நின்றார்
மறுக்கவொண்ணா புனிதவாழ்வில் ஊன்றி நின்று
முறையாக வழிபாடு நடத்தி வந்தார்!

பட்டங்கள் பதவிகளைப் பெற்று வந்து
பகட்டறிவும் பரவலாகப் பெற்று நின்று
சொற்றரிய கவிஞராக கலைஞ ராக
தொழில்நுட்ப வல்லராக புகழும் பெற்றார்
உற்றவிதம் வாணிபத்தில் ஈடு பட்டு
ஒப்பற்ற செல்வத்தை திரட்டி அன்று
அட்டியின்றி ஆதரவு அற்ற வர்க்கு
அகங்குளிர தானதர்மம் நல்கி வந்தார்!

தம்மிடையே ஆழமான உறவு செப்பி
தம்நலனைக் கருதாது உறவோர் வாழ
தம்மியல்புக் கேற்றபடி உதவி செய்து
தம்மிடையே சமாதனம் நிலைக்கச் செய்தார்
வெம்புதுயர் நோய்பிணியால் வாடு வோரில்
வியத்தகுநல் நேசபாசம் காட்டி அன்று
அப்புவியில் சுகநலமாய் அவர்கள் வாழ
அக்கறையாய் சேவைபல செய்து காத்தார்!                

கருத்து வேற்றுமையாய் இருந்த போதிலும்
கண்ணியமாய் பிறருடனே கலந்து பேசி
அருமையாக காரியத்தை இவனே செய்வான்
என்பதாக ஆய்ந்தறிந்து அவன்கண் அஃதை
முறையாக ஒப்படைத்து மதித்து வந்தார்
முழுபலனும் அடைந்துநின்று மகிழ்வு கொண்டார் 
பெரியோரின் வார்த்தையினை சங்கை செய்தார்
பெறற்கரிய வெற்றியினைப் பெற்று வந்தார்!

இலங்கைதேயம் அரசியலின் சுதந்த ரத்தை
இறுதியாக தொளாயிரத்து நாற்பத் தெட்டில்
நிலஉலகில் பெற்றபின்னர் சட்ட திட்டம்
நறுக்கெனவே செய்ததாலே நலிவு கொண்டார்
தலமிருந்த மக்களெல்லாம் மோசம் போனார்
தம்குடும்பம் வாழ்வதற்கு வழியே யில்லை
இலங்கைதேய ஊதியங்கள் இங்கு வாரா
இங்குள்ளோர் வாழவேண்டி இலங்கை சென்றார்!

இவ்விதமாய் நாடுமாறிச் சென்ற தாலே
இவ்வூரில் சனத்திரளும் அற்றுப் போக
அவ்விதமாய் பணபலமும் குன்றிப் போக
அரைகுறையாம் எண்ணிக்கை கொண்ட மக்கள்
செவ்வையான வாழ்வுவாழ இருக்கண் ணுற்றர்
சேமமுற வாழ்வதற்கு வழிஆய்ந் தாரே
எவ்விதமும் இந்தியாவில் பிழைப்புக் காண
இளைஞரையே பெற்றோரும் தூண்ட லானார்!

இளைஞருமே இந்தியாவில் வேலை தேடி
இங்குமங்கும் அலுவலிலே சேர்ந்து கொண்டார்
மழைபொழிந்து பசுங்கதிர் மணிகள் பெற்று
மாவழகாய் தோன்றுகின்ற தன்மை நீங்கி
களையிழந்து காட்சிதரும் கழனி போன்று
கவினுறவே காலமெல்லாம் ஓங்கி நின்ற
பழம்பதியாம் நிம்பநகர் பவிழ்சு மங்கி
பாருலகில் தோன்றியது கொடிய தாமே!


        -    மதுரங்கிளி மகிபன் விக்டோரியா
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com