வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 5
வேம்பாறும் அதன் பாதுகாவலரும்
கடந்த
காலத்தில் சந்த செபஸ்தியார் சிற்றாலயம் இருந்த பகுதியில் “சன் செபஸ்டியன் ஹால்” (St. Sebastian’s Hall) என்ற கட்டிடம் “வேம்பாற்று அமலோற்பவ ஜுபிலி கிளப்’
இளைஞர்களின் வாசகசாலையாகவும் (Library) வெகு காலம் திகழ்ந்துள்ளது
என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இவை அனைத்தையும் ஓருமித்து முழுமையாக கவனிக்கும்
போது வேம்பாற்றில் சந்த செபஸ்தியாருக்கென சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டு
வழிபாடுகள் நடைபெற்றதையும், அது சிதைவுற்றதையும் பின் அதன் மீள்உருவாக்கமாகவே சந்த
செபஸ்தியார் திருத்தலம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது.
சந்த
பேதுரு பள்ளி நிம்ப நகரை விட்டகன்றதும் சந்த செபஸ்தியாரின் பேரில் புதிய பள்ளியை
“புனித செபஸ்தியார் உயர்தர ஆரம்பப் பாடசாலை” (St. Sebastian’s Higher Elementary School) என அமைக்கத் தூண்டிய உந்துதல் இத்தூயவரின்
மேல்நிம்பவாசிகள் கொண்ட ஆழ்ந்த பற்றுதலின் வெளிப்பாடாகும். இடைக்காலத்தில்
வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயத்தில் செயல்பட்ட “சந்த செபஸ்தியார் வாலிபர்சபை” (Society of San Sebastian) சந்த செபஸ்தியாரின்
மகிமைக்காகவும், அவர் பேரில்பக்தி முயற்சியை வளர்த்தெடுக்கும் பொருட்டு
சிறப்பாக செயல்பட்டது. தற்போது இதனை மீள்உருவாக்கம் செய்து (Soldiers of San Sebastian) என்ற பெயரில் உலகளாவிய
அளவில் வேம்பாற்றுவாசிகளை உறுப்பினராகக் கொண்டு செயல்பட அணியமாகி வருகிறது.

கத்தோலிக்க திருமறையைத் தழுவுவதற்கு முன்னர் நிம்பவாசிகள் தங்கள் ஊரின் தென்மேற்கு எல்லையில், சேது பாதையில் ஐய்யனாருக்கு கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். ஐய்யனார் வழிபாட்டின் தொடர்ச்சியே இங்கு ஐயா என்ற சொல்லின் மூலமாக இருப்பதை அறியமுடிக்கிறது. ஏனெனில் காவல் தெய்வம், குதிரை வீரன், தீய சக்திகளை அழித்தல், தொற்று நோய் அகற்றுதல் ஆகியவற்றுக்காக மக்கள் இவ்விருவரிடமும் மன்றாடும் வழக்கம் தற்போது வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து