வேம்பார் சித்திரக்கவி சவியேர் இன்னாசி முத்தையா ரொத்ரிகோ
கீழக்கரையை பிதாவின் இருப்பிடமாகவும் வேம்பாரை மாதாவின் பிறப்பிடமாகவும் கொண்ட புலவர்களின் முழுநாமம், “ செ.மு. சவியேர் இன்னாசி முத்தையா ரொத்ரிகோ” என்பதாகும். மக்கள், அவர்களை மரியாதையாக “செ.மு.” என்று அழைப்பர். இவருடைய குடும்பத்திற்கு “அழகு பாண்டித் தேவர்“ என்ற அடைவிருது இன்றும் வழக்கிலுள்ளது.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினராய் (208), அச்சங்கத்திற்கு அழகு சேர்ந்த பெரும்புலவர்களில், இவரும் ஒருவராவார். இராமநாதபுரம் சேதுபதியின் அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கின்றார். சேதுபதி மன்னர் மீது, பல நிகழ்ச்சிகளில் கவிபாடி பரிசில் பல பெற்றுள்ளார். சேதுபதியவர்களிடம் தாமிரப் பட்டயமும், பல கிராமங்களை இனாமாகவும் பெற்றுள்ளதாக, வரலாற்றுப் பரம்பரைச் செய்திகள் இன்றும் பறை சாற்றுகின்றன.
இவர் இலங்கையில் சிலாபம் என்னும் நகரில் வணிகம் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள இவர் தொடக்கக் காலங்களில் இலங்கையிலிருந்து அடிக்கடி இந்தியா வந்து போயிருந்தலும், தம் வாழ்க்கையின் பிற்பாதியில் அதிகமாய் மதுரையிலேயே வாழ்ந்தார். எனினும் அவரை வேம்பாற்றுவாசி யென்றே, ஏனைய வித்வான்கள் அறிவர். புலவர்களின் மனையாள் பனையூர் ஜமீன் வம்ச வாரிசைச் சேர்ந்தவர்.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்து நிர்வாகிகளாகிய சேதுபதி மன்னர், கானாடுகாத்தான் பெருநிலக் கிழார் பெத்தாச்சி செட்டியார், D. சுவாமிக்கண்ணுப் பிள்ளை, சீநிவாச அய்யங்கார், சிவசாமி அய்யர் ஆகிய சான்றோர்களுடன், புலவரிவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
புலவரிவர் பிறந்த வேம்பார் என அழைக்கப்படும் நிம்ப நகரின் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தூய ஆவியானவர் மீதும், அவ்வூர் பாதுகாவலரான புனித செபஸ்தியார் மீதும், மற்றும் புனிதர் பலர் மீதும் பல தேனினுமினிய பாடல்கள் பாடியுள்ளார். கிறிஸ்து பிறப்புப் பவனிப் பாடல்கள், விருத்த வெண்பாக்கள், திருமண கேளிக்கை, கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான இன்னிசைப் பாடல்கள் பலவும் இசைத்துள்ளார்.

புலவரவர்கள் தாம் இயற்றும் சித்திரக்கவிகளின் ஒவ்வொரு வகைக் கவியிலும் முதன் முதலாக தாம் வழிபடும் தெய்வத்திற்கும் புனிதர்களுக்கும் கவி இயற்றிய பின்னரே, ஏனையோர்க்கு அவ்வகைக் கவிகளை இயற்றுவார்கள். ஏறத்தாழ 65 வருடங்கள் வாழ்ந்த பின்னர், புலவரவர்கள் மதுரையில் 1919ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ந் தேதி மரணமானார்கள். தமிழ்ச் சங்க அங்கத்தினர்களும் மற்றும் மதுரைப் பிரமுகர்களும் சித்திரக் கவிஞரை சிறப்புடனே மதுரையில் அடக்கம் செய்தார்கள்.