பரதவரின் வானியல்
அறிவியல் சார்ந்த நிலையிலேயே பண்டைத் தமிழர் தம் வாழ்க்கை நெறிமுறைகளையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், மொழியையும் தோற்றி, சீர்படுத்தி, நிலைப்படுத்திப் போற்றி வந்துள்ளனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
எடுத்துக்காட்டாக, பண்டைத் தமிழர் விண்ணியல் (வானவியல்) பற்றி அறிந்து தெளிந்திருந்தனர் என்பதைத் தமிழில் வழங்கும் விண்ணியல் சார்ந்த சில பெயர்களைக்கொண்டே மெய்ப்பிக்கலாம்! அவற்றுள் ஓரிரு சொற்களைக் காண்போம்.
இருள் - இரவு, கருமை; இருளின் கருமையால் எப்பொருளையும் பார்க்க இயலாது. என்ன பொருளென்று அறிய முடியாத பொருள் மயக்கத்தைத் தரும். அந்த இருளையும், மயக்கத்தையும் குறிக்கும் சொல் "மால்'.
வானத்தில் உள்ள முகிலும் அத்தன்மையதே. ஆதலால், "மால்' என்னும் சொல் முகிலையும் குறிக்கும் வகையில் தமிழர் ஆக்கிக்கொண்டனர். அச்சொல்லே வளர்ச்சியுற்று, மால் - மான் - மானம் என்றாகிப் பின் "வானம்' ஆனது. மானம் உலக வழக்கு; வானம் இலக்கிய வழக்கு.
வானம் - கரு முகில்; "ஒல்லாது வானம் பெயல்' (குறள்: 559). கருமுகில் மழையைப் பெய்வதால், அதுவே "மழை'க்கும் பெயரானது. வானம் - மழை; "வானம் வாய்க்க மண்வளம் பெருகுக' இவை சார்ந்த இடத்திற்கு "வானம்' பெயரானது. (மணிமேகலை: 19:149)
வானத்தில் உள்ள நாள்மீன்களையும், கோள்மீன்களையும் பலப்பல ஆண்டுகளாய் உற்று நோக்கியும், நுண்ணறிவால் உண்மை அறிந்தும், தெளிந்தும் வாழ்ந்த தமிழ்ப் புல அறிஞர்கள் ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாள்களையும், பன்னிரண்டு ஓரை (இராசி) களின் பெயரால் பன்னிரு மாதங்களையும் உலகின் பிற நாட்டாரும் மொழியாரும் வைப்பதற்கு முன்னே வைத்து வானவியல் அறிவைப் புலப்படுத்தியுள்ளனர்
சோதிடம் என்பதற்கும், முந்தையது வானவியல் இது பற்றித் பரவர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது.

“வளி தொழில்”என்பது பரதவரின் கடல் மேலாண்மையைக் குறிப்பது. வளி என்றால் காற்று. எனவே தான் தை மாதத்தின் தொடக்கத்தில் காற்றில் ஏற்படும் மாறுபாடு அவர்களின் மரக்கலங்களை கடலில் கீழை நாடுகளை நோக்கி இயக்க வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே தை பிறந்தால் வளி பிறக்கும் என்பது கடலோடிகளுக்கு உரிய சொற்றொடராகத் திகழ்கிறது......