புராணத்தில் வலம்புரிச் சங்கு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார்.

இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.
தருமருடைய சங்கு அனந்த விஜயம்,
அர்ஜுனனுடைய தேவதத்தம்,
பீமனுடையது மகாசங்கம்,
நகுலனுடையது சுகோஷம்,
சகாதேவனுடையது மணி புஷ்பகம்.
கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி பெருமாளுக்கு-மணி சங்கும்,
ரெங்கநாதருக்கு-துவரி சங்கும்,
அனந்த பத்மநாப சுவாமிக்கு-பாருத சங்கும்,
பார்த்தசாரதி பெருமாளுக்கு- வைபவ சங்கும்,
சுதர்ஸன ஆழ்வாருக்கு-பார் சங்கும்,
சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும்,
கலிய பெருமாளுக்கு- வெண் சங்கும்,
ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு-பூமா சங்கும் உள்ளன.
வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத்தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை
சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்
என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது.
முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து- நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.
Source: Penmai