முத்தரிப்புத்துறை புகழ்பாடல்

எங்கள் முத்தரிப்பு நாடு
முத்தேன் தமிழ் திரு நாடு
திருக்கன்னி ஆலய அருட்பணி வேலையை
சிரம் தாங்கும் திரு நாடு
இது தேன் தமிழ் திரு நாடு
எங்கள் அலை கடல் அருகினிலே
அல்லி அரசாண்ட அரண்மனை இருப்பது காண்
அல்லி அருச்சுணன் திருமணமும் – இங்கு
நடந்தது சரித்திர எட்டில் உண்டு
குயிணன் கோட்டையும் கோபுரமும் – எங்கள்
ஊருக்கு அழகைக் கொடுத்ததம்மா – எங்கள்
மனதினில் மகிழ்வைத் தருவதம்மா
ஈரினம் என்பார் பேச்சினிலே – இங்கு
ஓரினம் என்போமெம் மூச்சினிலே
அன்பே நெஞ்சினில் அகங்கொள்ளும் – என்றும்
வஞ்சமே கொள்ளதெம் நெஞ்சகமே
ஆயிரம் இன்னல்கள் நேர்ந்தாலும் – அதை
ஆராய்ந்து தீர்ப்பதில் தீரர்களே – எங்கள்
முத்தரிப்புத்துறை முதியோர்களே
நீலத்திரை கடல் ஆழியிலே – சென்று
ஜெகம் புகழ் முத்தெடுத் தகமகிழ்வோம்
முத்தத்தில் தவழும் குழந்தைகள் வாயிலும்
முத்துச் சிப்பிகள் இருக்குதம்மா – அதை
தாய்மார் அகற்றி மார்போடணைத்து
வாய் முத்தம் கொடுப்பது வழக்கமம்மா – எங்கள்
முத்தரிப்புத் தாய் முத்தமம்மா
மாந்தை முசலி மாதோட்டம – எல்லாம்
செழிப்புறச் செய்யுமெம் அருவி நதி
வயல் நிலம் நிரப்பி கயலினம் திரட்டி
கழிமுகம் கொள்ளுதல் எங்கள் துறை
ஆணினம் சென்று மீனினம் பிடிக்க
அரும் துணை புரிவதும் எங்கள் நதி
பெரும் துணை புரிவதும் எங்கள் நதி
சிற்றிடை கலத்தில் நீர் தத்தழிக்க – எங்கள்
கன்னியர் புன்னகை சிரிபொலிக்க
ஆடிடும் அரம்பையர் போல் நடந்து – இங்கு
அழகுற வருவோர் மெய் மறந்து
சிற்றிளம் சிங்கங்கள் பொதுசேவை புரிந்து
பொலிவுற வாழ்ந்திடும் எம்நாடு
புகழ் பெற்று ஓங்கிய பூ நாடு
மருதமும் நெய்தலும் மருவி நின்றே – இங்கு
நெல்லோடு நெத்தொலி குளிர்காயும்
வையகம் போற்றும் எம் மகாராணி தன்
முடிதன்னில் மின்னுதல் எங்கள் முத்தாம்
திருச்சபை அல்லால் எதிர்சபை எதையும்
எதிர்கொள்ளத் திருநாடு – எங்கள்
செங்கோல் தாய்நாடு
முத்து சிப்பியன்
லூ. அலோசியஸ் பறுனாந்து