அறிவோடு கூடிய கடல் தொழில்
எந்தவொரு திரைப்படத்திலும் நம்மவர்களின் கடற்புறத்து வாழ்க்கையையும், நம் கடற்தொழிலையும் சரியாக சொன்னதே கிடையாது. எந்த படத்தை எடுத்தாலும் ஏதோ ஆற்றில் மீன் பிடிப்பதை போல ஒரு மணி வலையை எடுத்துக் கொண்டு அதை வீசி மீன் பிடிப்பதை தான் காட்டுகிறார்கள்.

எந்த ஒரு நிறுவனத்தை எடுத்தாலும் அவர்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையை சரியான கால அவகாசம் எடுத்து அதற்கென தனி அட்டவணை தயார் செய்து அதன்படி, திட்டமிட்டு முடிப்பார்கள்.
ஆனால் முன்கூட்டிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் ஆபத்துகளை எதிர்கொள்ளும் போதே திட்டங்களை உடனுக்குடன் வகுத்து செய்யப்படும் தொழில் எம் கடற்தொழில்.
1. முழுக்கவனம்
கட்டுமரத்தை கடலில் செலுத்தும் போதும் சரி, கரையில் செலுத்தும் போதும் சரி... கடலில் இருக்கும் போது நம் முழுக்கவனமும் நம் கட்டுமரத்தையும் நம்மையும் காப்பாற்றும் வண்ணமே இருக்க வேண்டும்...
உதாரணமாக நள்ளிரவில் கடலுக்கு செல்லும் போது, அலைகள் எழும்பி வருவது அந்தளவுக்கு தெரியாது. அப்படி தெரியாமல் வரும் அலைகளை கவனிக்காமல் சென்றால் மரம் உருட்டி பெரும் சீரழிவை சந்திக்க நேரிடும்..
இந்த நேரத்தில் யாரைப் போய் உதவிக்கு அழைப்பது? எப்படி அழைப்பது? ஆண்டவர் புண்ணியத்தில் கடலுக்கு வரும் மற்ற மரக்காரர்களின் கண்ணில் அகப்பட்டால் மட்டுமே, அவர்களிடம் இருந்து ஓரளவு உதவியைப் பெற முடியும். இல்லையென்றால், அனைத்து சீரழிவையும் தனித்திருந்தே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதோகதிதான்...
இதில் அனுபவமும் கை கொடுக்கும். ஏனெனில் அனுபவசாலிகளுக்கு, எந்த நேரத்தில் எந்த இடத்தில் அலைகள் கிளம்பும் என்று தெரியும். சிலர் அலைகள் கிளம்பாத இடத்தை நோக்கிச் செல்வர். சிலர் ஆழியை எதிர்த்து செல்வர். எது எப்படி இருந்தாலும் முழுக்கவனம் தேவை.. ஏனெனில் எங்கள் படகில் இருக்கும் உபகரணங்களும் உடைமைகளும் பல லட்சங்களை தாண்டும்.
2. திட்டமிடல்
வலை வீசும் (எலக்கும்) இடத்திற்கு (கடலுக்கு) வந்தவுடன் மேலாமறி, கரைமறி பார்த்தவுடன் வலை வீச ஆரம்பிப்பர்.
நாம் வீசும் வலைக்கு எந்த வலையும் குறுக்கிடாதவாறு கண்ணும் கருத்துமாக வலை வீசும் கடலை சீராக பார்த்த உடனே கொடுக்கு பாேயா(முதல் போயா) கடலில் எறியப்படும்.
எச்ச வலையை பொறுத்தவரை முன்பெல்லாம் 50 போயா எச்சவலை தான் அனைவரும் சராசரியாக எடுத்து செல்வர். ஆனால் தற்போதைய மீன்பாட்டின் காரணமாக அது 80 போயா 100 போயா என அதிகரித்துள்ளது.
முதல் போயாவை கடலில் எறியும் போதே 100 வது போயாவுக்கு வரும் இடையூறுகளை சிந்திக்க தொடங்கிவிடுவான் பாரம்பரிய கடலோடி.
100 போயா வலை என்பது சராசரியாக 3 கி.மீ வரை செல்ல கூடியது. வலையை வீசிக் கொண்டு செல்லும் போது திடீரென வேறு வலைகள் குறுக்கிட்டால் பட்டென யோசித்து நீவாட்டுக்கும் காற்றுக்கும் ஏற்றவாறு எந்த வலைக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் தன் வலையை மாற்றியமைப்பான். உதாரணமாக நேர்திசையில் வலை வீசிக் கொண்டு செல்லும் போது குறுக்கிடும் வலையை பார்த்தவுடன் உடனே கரைய அல்லது வெலங்க என திசை மாற்றி வலை வீசுவான்.
இந்த திட்டமிடல் என்பது, ஏதோ குருட்டாம்போக்கில் சொல்வதோ அல்லது 3 நாள் கடலுக்கு சென்றவன் 4 வது நாள் சொல்லுவதோ அல்ல. கடலில் ஊறி, கடலை கரைத்துக் குடித்தவனால்தான் மிகச்சரியாக திட்டமிட முடியும்.
குறுக்கிடும் வலையை பார்த்தவுடனே அவனது மூளை நீவாட்டையும், காற்றையும் கணித்து,
அந்த வலை எந்த திசை நோக்கி வீசப்பட்டுள்ளது?
அதன் முதல் போயா எங்கு உள்ளது?
அதன் கடைசிப் போயா எங்கு இருக்கும்?
நமது வலையை எந்த திசையில் போட்டால் அந்த வலை பக்கம் போகாது?
அப்படியே போனாலும் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும்?
அப்படியே விளைவுகள் ஏற்பட்டாலும் அதை நம்மால் சமாளிக்க முடியுமா?
என்று பல கோணங்களில் ஆராயப்பட்டு சரியான கணிப்பு படி வலையானது மேற்கொண்டு வீசப்படும்.
இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால், இத்தகைய ஆராய்ச்சிகளும், கணிப்புகளும் சில வினாடிகளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
சரியான திட்டமிடல் தான் வலைகளுக்கு சரியான பாதுகாப்பு...
3) உறங்காது அசைபோடுதல்
நாம் நல்ல தெளிவாக நம் வலையை வீசியிருந்தாலும் நமக்கு அடுத்ததாக வீசுபவர்கள் எந்த கோணத்தில் யோசித்து எப்படி வலை வீசுவார்கள் என்று தெரியாது.
நமது வலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நாம்தான் அவ்வப்போது குரல் கொடுத்து எச்சரிக்க வேண்டும்.
பொதுவாக நமது இடங்களில் விசைப்படகுகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. கரைக்கடல் என்றும் பாராமல், மண், பாறை என்றும் நினைக்காமல் அப்படியே மடி வைத்து அனைத்தையும் இடித்துத் தள்ளி சேதப்படுத்தி விடுவார்கள்.
இதற்கு விழிப்போடு இருந்து குரல் கொடுத்தால் மட்டும் போதாது.
நமது வலை விசைப்படகு மடியால் அடிபடும் என்று சந்தேகித்த உடனே அவன் பக்கம் சென்று பார்த்து உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு எந்நேரமும் விழிப்போடு இருந்தால் தான் நாம் வீசிய வலையை நம்மால் திரும்ப மீட்கமுடியும்.
4) செயலாக்கம்
செயலாக்கம் என்பது வீசிய வலைகளை வாங்குவது.
அன்றைய நாள் தொழிலை நிர்ணயிக்கும் பகுதி.
கடலுக்கு ஆட்கள் குறைவாக சென்றிருந்தால் காற்று, நீவாடு வலுவாக இருக்கும் சமயங்களில் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஐந்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு பேர் இருந்தாலும் வீசிய வலையை வாங்காமல் வந்ததாக சரித்திரம் கிடையாது.
ஏனென்றால் "உயிரை விட மானம் பெரிதென வாழ்பவர்கள்"..
வீசிய வலையை வாங்க வக்கற்றவன் என்று உலகம் பழிபோடக் கூடாதல்லவா???
எந்த வலையாக இருந்தாலும் நான்கு பேர் சென்றால் கொஞ்சம் அம்சமாக இருக்கும்.
திட்டமிடாமல் வீசப்பட்ட வலைகள் ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ளும் பகுதி இதுதான்.
சில நீவாட்டுக்கு வலைகள் நன்றாக முறுக்கி கொண்டு வரும்.
சில நீவாட்டுக்கு நமது வலை மற்ற வலையுடன் சேர்ந்து முறுக்கி கொண்டு வரும்.
சில நீவாட்டுக்கு நாம் சரியான கடலில் வலை வீசியிருந்தாலும், வலைகளை பாறைகள் உள்ள கடலுக்கு கொண்டு போய் கிழித்து நாசமாக்கி விடும்.
கடலின் மிக ஆழமான பகுதியில் நீவாடு நன்றாக வலுத்தால், ஒன்றாக போடப்பட்ட வலையை இரு துண்டுகளாக வாங்க கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.
மொத்தத்தில் கடல் தொழிலை பொறுத்தவரை, நிர்ணயித்த வருமானம் என்று எதையும் சொல்ல முடியாது.
5) ஒழுங்குபடுத்துதல்
சேதப்படுத்தப்பட்ட வலைகளை சீரமைத்து நல்ல நிலைக்கு கொண்டு வருதல்.
கடலில் நீவாடு, நண்டு மற்றும் பேத்தா போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வலைகளை சரிசெய்து மறுநாள் கடலுக்கு கொண்டு செல்ல தயார்படுத்த வேண்டும்.
இதிலும் மூளையை பயன்படுத்த வேண்டும். கிழிந்த பீத்தலை ( பொத்தல், ஓட்டை) பார்த்து எந்த வகையில் கட்டினால் அதை சீக்கிரம் முடிக்க முடியும் என்றும் ஆராய வேண்டும்.
பீத்தலை மொத்தமாக வெட்டி புது மால்(வலை) வைக்கலாமா?
புது மால் வைப்பதற்குள் இதை கட்டி விடலாமா?
எந்தக் கண்ணியில் இருந்து வெட்ட ஆரம்பிப்பது?
என எதற்கெடுத்தாலும் மூளையை குடைந்து, சிந்தித்து தான் செயல்படுத்த வேண்டும். சும்மா ஏனோதானோ என்று வெட்ட ஆரம்பித்தால் 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலை 4 மணி நேரம் எடுக்கும்.
இப்படியாக 30 மணி நேர வேலையை 24 மணி நேரத்திற்குள் முடித்து, அதற்குள் ஓய்வும் உறக்கமும் எடுத்து தொடர்ந்து தொழில் செய்கிறோம்.
கடற்தொழிலுக்கு வலிமையான உடலமைப்பும், நெஞ்சில் உரமும், நல்ல பலமும் இருந்தால் போதாது. கூடவே யோசிக்கும் அறிவும் சிந்திக்கும் திறனும் நிறையவே வேண்டும்.
கடலில் வலுவாேடு இருந்தால் மட்டும் போதாது. அதைப் பற்றிய அறிவோடு இருக்க வேண்டும். அதில் நல்ல தெளிவாடு இருக்க வேண்டும். இவை அனைத்தின் மொத்த புரிதல் தான் எங்கள் தொழிலோடு இருக்கும்.
நாங்கள் வலுவானவர்கள் மட்டுமல்ல....
அறிவானவர்களும் கூட....