இரத்த பூமி - பாகம் 10
போர்சுகல் கோட்டையில் வீரபாண்டியர்.

கொச்சின் போர்சுகல் கோட்டையில் மலபார் கேப்டன் மற்றும் பட்டங்கட்டிமார் புடைசூழ பாண்டியனார் விரக்தியில் சொன்னார்.
இந்த நிலத்துக்கும் கடலுக்கும் உரிமையான பரதவர்கள் நாங்கள் எங்கள் பாரம்பரியம் காக்க எங்கள் மரபை காப்பாற்ற காலகாலமாக நாங்கள் கடைபிடித்த ஆசாரங்களை ஆண்டவ சடங்குகளை உதறிவிட்டு உங்களோடு இணைந்தோம்.
ஆனால் இன்று அதுவே எங்களுக்கு பெரும் பகையாகி போனது. எமது பாண்டியனுக்கு சோழ மறவனுக்கு அள்ளி கொடுத்ததை பின்னர் நாயக்கனுக்கும் கொடுத்தோம்.
பரதவரின் பாரம்பரிய கடலை அபகரிக்க பரத்தியரின் பண்பாட்டு மரபை அவமானிக்க நினைத்த மூரை சிதைத்தோம். ஆனால் தலைக்கு நாலு பணம் பேசி நாயக்கனும் எமை அழிக்க நினைத்தான். அவன் கடலை பறித்தான். எமது உரிமையை கெடுத்தான் .
உம்மோடு சேர்ந்து இழந்த கடல் உரிமையை பெற்றுக்கொண்டோம். ஆனால் எம்மையே இழந்து விட்டோமே!! யாருக்காக, எதுக்காக, நாங்கள் மதம் மாறினோமோ.... அந்த இனத்தையே கருவறுக்கின்றார்களே.... காவலுக்கு வந்த உங்களுக்கே.... நாங்கள் காவல் காக்க வேண்டியதாயிற்றே.
உம்மோடு இணைந்து உம்மதத்தை சம்மதமாய் ஏற்று கொண்ட நாள் தொட்டு பரதவ கடலோரம் முழுவதும் எம் பாண்டி பரதவரின் பிணக் குவியல். பெரும்பான்மை பரத சமூகம் நாயர்களால் நாயக்கர்களால் மூர்களால் வெறி பிடித்த சகோதர இந்துக்களால் நித்தம் நித்தம் ஆக்கினைக்கு ஆளாகி அல்லல் படுகிறது. எவன் நண்பன் எவன் பகைவன் எனத் தெரியாதபடி சுற்றிலும் பகைவர்களால் சூறையாடப் பட்டு சின்னஞ்சிறு கூட்டமாக குறுகி போய் விடுமோ பயமாயிருக்கிறது.
முதல் முதலாக எம் மண்ணுக்குள் ஊடுருவி பட்டி மரைக்காயன் குஞ்சாலி மரைக்காயன் கூட்டமாய் வந்து கொன்று குவித்தான். உம்மோடு இணைந்து பரதவ இளைஞர்கள் ஒரே இரவில் அத்தனை பேரையும் பரதவ கடலிலே புதைத்தழித்தார்கள். இப்போது எதிரிகள் மத்தியிலே இந்த பரத சமூகம் கையளிக்கப் பட்டுவிட்டதா.... பரம்பரை வீரம் பாழ்பட்டு போனதா...
குமரி பரதவனை வழிந்து வந்த வடுகன் அடித்து விரட்ட ஆழிபாறையில அடைக்கலம் புகுந்தானே அப்போதும் கேட்பாரில்லை சவேரியார் எமை திரட்டி படுக்காளி படை விரட்டி முடித்தது தங்களுக்கு தெரியாது போல.... சவேரியார் ஐயா இருக்கும் வரை நல்ல பிள்ளையாய் நடந்து கொண்டு ஐயா கப்பலேறி போனது தெரிந்ததும் அங்கே குமரிக்கு மேற்க்கே பரதவ குடிகளை திருவிதாங்கூர் அரசன் அழிக்கிறான்.
அங்கே என் பிள்ளைகள் கோட்டைகுள்ளே 3 நாட்களாக பசியிலே இரப்பாளியின் கோரப்பிடியிலே சிக்கித்தவிக்கின்றனர். ஆறா கண்ணீர் வடிக்கின்றனர். இன்றைக்கு உள்ளே நுழைந்து விட்ட இரப்பாளியின் இறப்பே ஆழியில் தான் முடிவு தெரிந்து விட்ட ஓன்று. ஆனால் பிடித்து செல்லப்பட்ட தூய தந்தை வீர மறவன் காத்தவராயன் கேப்டன் குடும்பத்தவர் கதி.......
கவலை வேண்டாம் டீ குரூஸ் எங்கள் கேப்டனை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.....
ஆம் பரதவர்களை மட்டும் தான் பலி வாங்குவார்கள்...மறந்து விட்டீர்களா கேப்டன் போன வருடம் (1552)கூட அருள் தந்தை பவோலோ டி வாலே வை சிறை பிடித்து கொண்டு போய் நாயக்க படை துன்புறுத்தியபோது எம் குல மறவர்கள் தான் சாவுக்கும் அஞ்சாமல் நாயக்க படை முகாமுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி தந்தையை தூக்கிக்கொண்டு வந்தது. நாயக்கனை அடக்குங்கள் இல்லை அந்த நாய்க்கு எச்சில் துண்டுகளை போடுங்கள்...
பாண்டியரே பிரித்து பேச வேண்டாம் நாம் போர்த்துகல் மக்கள், இறை யேசுவின் குழந்தைகள், உங்களது காவலாளி நாங்கள், இறுதி வரை உடன் வரும் சகோதரர்கள்... பாண்டியனாரே பொறுமை காப்பீராக இனி வரும் காலத்தில் இந்தியா முழுமைக்கும் நமது சிலுவை கொடி பறக்கும் அதனால் பரதவ புகழ் சிறக்கும்...
சிலுவை கொடி பறக்க இன்னும் பரதவர் எத்தனை பேர் இறக்க. பரதவ தலைவனின் விவேகமான உரை கேட்ட போர்த்து கீசியர் இன்னும் காலம் தாழ்த்தினால் இவர்கள் நம்மீது நம்பிக்கை இழக்கநேரிடும் என்பதனால் கில் பர்னாண்டஸ் டி கார்வெல்கோ கேப்டன் ...... தலைமையில் உடனே படை கூட்ட ஆயத்தமானார்கள்.
இவ்விதமாக கொச்சின் கோட்டையிலே பாண்டியனார் படை திரட்டியிருக்க... இங்கே கொற்கை கோ வந்ததும் புது வேகம் வந்துவிட்டது... பரத்திகளுக்கோ பெத்த பிள்ளையை காட்டிலும் மூத்த பிள்ளையாம் கொற்கை வந்ததும் இரப்பாளியின் சங்காரத்தை காணும் சந்தோசம் பிறந்தது. காணியாளன் முதலில் கேட்டான் ஐயா கூட போனீரோ ஐய .. விட்டுட்டு போன இடத்தை நான் விட்டுட்டு போவேனோ.. இல்லை, என் உயிரும் போகுமோ..!
முத்தம்மையின் பாம்படம் முத்தாரம்மனாய் என்ன காத்தாலும் பரத்திமாரின் வைத்தியமே நித்தியமாய் காத்தது. அது சரி அவர்கள் எங்கே முத்துகளை கொட்டி வைக்கும் பாண்டியம் பதி நிலபறையில் பரதவ முத்துகளி வைத்திருக்கிறேன். நல்முத்து ஒன்று பிறந்திருக்கிறது காத்தவராயன் பெயர் சொல்ல எங்கே ராயன் எனக் கேட்க..... விக்கித்து போன காணியாளன் சொன்னான். தூயதந்தை உயிர்காக்க நம் பரதகுடி வழி உரிமை காக்க அடுத்தாரை காக்க இராயன் கைதியானான்.
நாயக்கனால் கடத்தபட்டான் என காத்தவராயன் கடத்தபட்டானா... என் உயிரை காத்த ராயன் என் பெயரை காத்த ராயன் என் நிழல் எனக்காக... எங்கே இரப்பாளி என கேட்க ..... இதோ உன் மாளிகையின் மாடி நிலா முற்றத்திலே பீதியிலே பிதற்றி நடக்கிறான் பார்.
நேற்றே முடித்திருப்பேன் கதையை பரத்திகளின் வீரம் பற்றி விசனம் பேசியவனை என் ஆத்தா முத்தம்மையின் கை கொண்டே மூச்சடக்கி தீருவேன் என சபதம் கொண்டான்...
(தொடரும்)
கடற்புரத்தான்