வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 3 September 2016

கலம் - கப்பல் - வணிகம்
தமிழ்நாட்டுக் கடலோடிகள் பற்றி இலக்கியங்கள் மிகுதியும் பேசுகின்றன. அவர்தம் கடல் வாழ்க்கை, மணல் வாழ்க்கை காட்டுவதற்கே நெய்தல் பிறந்தது. மணலும் மணல் சார்ந்த இடமும் என நானிலங்களுள் ஒன்றாகக் கடலோடிகளின் வாழ்விடம் தொல்காப்பியத்தில் சுட்டப்படுகிறது. தமிழிலக்கியங்களின் நெய்தற் பாடல்களை எல்லாம் தொகுத்து ஆராயின், தமிழர்களின் கடல் சார்ந்த வாழ்க்கை கையகப்படும். 

மீன்பிடிக்கவும் சரக்கேற்றவும் நெடுந்தொலைவு வணிகத்திற்குமாய்க் கலங்கள் பலவகையினவாய்த் தமிழர்களிடம் இருந்தன. காற்றும் மழையும் இடியும் கடல் அலைகளும் அலைக்கழித்த போதும் தமிழர்களின் கலங்கள் தளராப் பயணங்கள் மேற்கொண்டு பொருள்வளமும் புகழ்வளமும் கண்டன. தோணி, திமில், அம்பி, ஓடம், நாவாய், வங்கம் என இலக்கியங்கள் சுட்டும் பதிbனட்டு வகையான கடற் கலங்களுள் தோணியும் திமிலும் பெருவழக்காய்ப் பாடல்களில் பதிவாகியுள்ளன.

கணக்காயர் தத்தனின் குறுந்தொகைப் பாடலொன்று கொடுந்திமில் காட்டுகிறது. வளைவான அமைப்புடைய இப்படகில் ஏறி, மீன்வேட்டைக்குச் செல்லும் பரதவர் எறியுளி கொண்டு சுறாமீன் பிடிக்கும் பக்குவம், பாடலடிகளில் பளிச்சிடுகிறது. பல்வகை மீன்களை வேட்டையாடிய களிப்பில் கரை நேக்கி வரும் தம் தமையன்மார் படகினை ‘என் ஐயர் திமில்’ என்று அடையாளப்படுத்துகிறார், ஐயூர் முடவனாரின் தலைவி. திமிலையும் தோணியையும் ஒன்றாகப் பார்க்கும் நற்றிணைப் பாடல், மீன்களைப் பற்றிய சுவையான செய்தியைத் தருவதுடன், மீன்பிடித் தொழிலையும் படம்பிடிக்கிறது. 

இறால் மீன்களின் மெல்லிய தலை, இலுப்பைப் பூப்போல் இருந்ததாம். பரதவர் மீன்பிடி படகில் ஏறிச் சென்று, வலை வீசி இந்த இறால் மீன்களையும் இன்னபிற மீன்களையும் பிடித்ததுடன், ஈர்வாள் போன்ற வாயை உடைய சுறாமீன்களையும் பற்றினர். மீன்பிடி நிலை முற்றியதும் திரும்பும் வழியில் தாம் பற்றிய மீன்களைப் பக்குவமாய்த் துண்டுகளாக்கித் திமிலில் நிறைத்தனர். அதனால், கரை சேர்ந்ததும் வெள்ளிய மணற்பரப்பில் அவற்றைப் பரப்பிடல் எளிதானது. இந்தப் படகுகளைக் கடற்கரையில் வைத்துப் பழுது பார்த்தமைக்கும் இலக்கியங்கள் சான்றாக உள்ளன.

‘அம்பி’ எனும் கலம் யானையைப் போல், எருமையைப் போல் பெரியதாக இருந்ததாம். இடி போல் முழங்கிய கடலில் பெரிய வலைகளை இட்டு மீன்பிடிக்கப் பரதவர் அம்பியைச் செலுத்தினராம். பலப்பல ஆண்டுகள் கடற்பயணம் மேற்கொண்டு முதிர்ந்து பயனற்ற நிலையில் இருந்த இத்தகு மரக்கலங்களைக் கடற்கரையில் வளர்ந்திருந்த புன்னை மரங்களில் கயிற்றால் பிணித்திருந்த காட்சி நற்றிணையில் படமாகியுள்ளது. இந்த அம்பிகளின் முகப்புகள் குதிரை, யானை, சிங்கம் போன்று பல்வகைத்தாய் வடிவமைக்கப்பட்டிருந்தமை சிலப்பதிகாரத்தால் புலப்படுகிறது. 

அம்பியை மணிமேகலையும் குறிப்பிடுகிறது. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் அம்பியுடன், வங்கம், மரக்கலம் எனும் கடற்கலங்களும் இடம்பெற்றுள்ளன. மணிமேகலையில் ஆளப்பட்டுள்ள ‘மரக்கலம்’ எனுஞ் சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வராமை குறிப்பிடத்தக்கது. ஆனால், வங்கம், மணிமேகலையில் பரவலாய் இடம்பெற்றுள்ள போதும் சங்க இலக்கியங்களிலும் கண்காட்டுகிறது. நற்றிணை மருங்கூர்ப்பட்டினத்துக்கு வந்த வங்கம் சுட்ட, அகநானூறு அந்த வங்கத்தின் பயணம் காட்டுகிறது. 

புலால் மணம் வீசும் அலைகளை உடைய பெருங்கடலில் இரவு பகல் கருதாது பயணம் போகும் வங்கம், உலகமே எழுந்து வந்தது போன்ற வடிவில் இருந்ததாம். கலங்கரை விளக்கத்தின் ஒளியில், காற்றின் போக்கில், மீகான் அவ்வங்கத்தைச் செலுத்தினாராம். பாய்மரக் கப்பலெனக் கொள்ளத்தக்க இவ்வங்கம் கங்கையில் உலவியதை நற்றிணை பதிவு செய்துள்ளது.

இலக்கியங்கள் பலபடப் பேசும் கடற்கலங்கள் அகழாய்வுகளில் மட்பாண்டச் சில்லுகளில் பதிவுகளாய்க் கிடைத்துள்ளன. அழகன்குளத்தில் கிடைத்த பானையோட்டில், பாய்மரக் கலமொன்றின் பதிவு கிடைத்துள்ளது. காமய கவுண்டன்பட்டி, கீழ்வாலை முதலிய இடங்களில் காணப்படும் பாறை ஓவியங்களில் நீர்ச்செலவுக் கலம் இடம்பெற்றுள்ளது. கீழ்வாலையில் படகில், நால்வர் செல்வது போலக் காட்டப்பட்டுள்ளது. 

படகின் வெளித்தோற்றம் தெளிவாக அமைந்திருப்பதுடன், இந்த ஓவியத்தில் படகு ஓட்டும் தண்டும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள பழங்காசுகள் பலவற்றில் நீர்க்கலங்கள் காட்டப்பட்டுள்ளன. பல்லவர் காசுகளில் இரு பாய்மரம் உடைய கலமும் ஒரு பாய்மரம் கொண்ட கலமும் உள்ளன. மற்றொரு காசு, கடல் அலைகளின் மேல் பயணிக்கும் பாய்மரக் கப்பலைக் காட்டுகிறது. இக்கப்பல் இரண்டு கொடிமரங்கள் கொண்டுள்ளமை சிறப்பாகும். இதே போல் இன்னொரு காசும் கிடைத்துள்ளது.

தமிழரசர்கள் கடற்போர்கள் நிகழ்த்தியமைக்கும் கடற்செலவின் வழித் தொலைவிலுள்ள கீழ்த்திசை நாடுகளை வென்றமைக்கும் கல்வெட்டுகள் சான்றாகின்றன. பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மர், தம்முடைய நண்பரும் இலங்கை அரச வழியினருமான மானவன்மன், அரசுரிமை பெறுவதற்காக இலங்கைப் படையெடுப்பை நிகழ்த்தியதாகச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. 

மதுரையும் ஈழமும் கொண்ட முதற்பராந்தகர் காலம் முதல், சோழப் பேரரசர்கள் பலராய்க் கடற்போர்களில் ஈடுபட்டமை வரலாற்று உண்மை. முதலாம் இராஜராஜரின் ஒப்பற்ற மெய்க்கீர்த்தி அவரது ஈழப் படையெடுப்பையும் இன்று நிக்கோபார் என்று அழைக்கப்படும் நக்கவாரத்தை அவர் கைக்கொண்டதையும் தெளிவாக்குகிறது.

இந்திய வரலாற்றின் இணையற்ற தனிப்பெரும் வீரரான முதலாம் இராஜேந்திரர் நிகழ்த்திய கடற்போர்கள், அவரது கப்பற்படைப் பெருமையைப் பரக்கப் பறைசாற்றுவன. ‘அலைகடல் நடுவே பலகலம் செலுத்தி’ எனும் அவரது மெய்க்கீர்த்தியும் அதன்வழி அவர் கைக்கொண்ட தென்கிழக்காசிய நாடுகளும் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயரைக் கொள்ளுமளவு அவரது கடற்போர் வெற்றிகள் அமைந்தன. 

சோழ வணிகர்களின் கடற்செலவுகளைச் சீர்மை செய்யவும் கடற்கொள்ளையர்களை ஒடுக்கவும் தமிழர் பண்பாட்டுப் பதிவுகளை அறிமுகப்படுத்தவும் இராஜேந்திரர் மேற்கொண்ட பல கலப் பயணம் இந்திய வரலாறு அது நாள் வரை அறியாதது. இராஜேந்திரரைத் தவிர, வேறெந்த இந்திய அரசரும் இராஜேந்திரருக்கு முன்போ, பின்போ இத்தகு பேரளவுக் கடற்பயணம் நிகழ்த்தியதில்லை. 

தொலைக் கிழக்கு நாடுகளை வென்றதுமில்லை கம்போடியாவிலும் தாய்லாந்திலும் வேரூன்றியிருக்கும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பிழைகளைக் கோயில்களாகவும் சிற்பங்களாகவும் காணும்போது தமிழரின் ‘கலம்’ விளைவித்த சிந்தனைக் களம் புரிகிறது. வழிபாட்டுச் சிந்தனைகள், வாழ்க்கைச் சிந்தனைகள், வணிகச் சிந்தனைகள் என அவைதான் எத்தனை வகையின! எத்தனை திறத்தன! வியட்நாமிலும் தாய்லாந்திலும் சுமத்ராவிலும் தமிழர் வணிகத் தொடர்புகள் காட்டும் கல்வெட்டுகள் இன்றும் பார்வைக்கு உள்ளமை நினைத்து மகிழத்தக்கதாகும்.

தம்முடைய ‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ என்ற நூலில் புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கா. இராசன் பெருங்கற்காலத்திலேயே தமிழர், வணிகத்தில் சிறந்து விளங்கியமையை விரித்துரைக்கிறார். சங்க காலத்திற்குச் சுமார் 700 ஆண்டுகள் முற்பட்டமைந்ததாகக் கருதப்படும் பெருங்கற்கால வணிகச் சான்றுகளைக் கொடுமணல் அகழாய்வுகள் அளித்துள்ளன. அரிய மணிக்கற்கள், பாறைகளில் நிகழும் வேதியியல், இயற்பியல் காரணங்களால் தோன்றுகின்றன. 

இவை விளைந்திருக்கும் இட அறிவு, இவற்றை வெட்டியெடுத்து அணிகலமாய் மாற்றத் தேவையான தொழில் நுட்பம் என இவ்விரண்டுமே பெருங்கற்கால மக்களிடம் நிறைந்திருந்தன. அகழாய்வில் கிடைத்துள்ள பல்வேறு வகையான மணிகளில் பெரில் எனப்படும் பச்சைக் கல்லும் சபையர் என்றழைக்கப்படும் நீலக்கல்லும் குவார்ட்ஸ் என அறியப்படும் பளிங்குக் கல்லும் இங்கேயே கிடைக்கின்றன. வைடூரியம், அகேட், சூதுபவழம் போன்றவை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து தருவிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூலப்பொருட்களின் இறக்குமதியும் அழகுப் பொருட்களின் ஏற்றுமதியும் பெருங்கற்காலத்திலேயே வளமாக நிகழ்ந்துள்ளன. 

இதன் தொடர்ச்சியைச் சங்க காலத்திலும் காணமுடிகிறது. கலைமான் ஓடும்போது, அதன் குளம்படி பட்டுத் தெறித்த மணிகளின் சுடரொளியைப் படம் பிடித்துள்ளது புறநானூற்றுப் பாடலொன்று. சேரமானின் மலையில் ஆநிரை மேய்க்கச் சென்ற, முல்லை நில ஆயர்கள் மிளிரும் கதிர்மணிகளைப் பெற்றனர் என்கிறது பதிற்றுப்பத்து. நற்றிணையும் ஐங்குறுநூறும் வான் பளிங்குக்கு இடையே திருமணிகள் கிடைத்தாகக் குறிப்படுகின்றன. சேர அரசனுக்குரிய கொல்லி மலை மீது, சூரியனின் மாலைக் கதிர்கள் படும்போது, அம்மலையில் பொதிந்துள்ள மணிக்கற்கள் கண் சிமிட்டுவதாக அகநானூறு குறிப்படுகிறது. 

குறுந்தொகையோ, மலை நிலத்துக் கானவர்கள் கிழங்குக்காகத் தோண்டிய இடமெல்லாம் மணிகள் சிதறியதாகச் சுட்டுகிறது. மற்றோர் அகப்பாடல், யானைத் தந்தம் கொண்டு நிலத்தைத் தோண்டி, மணிகள் எடுக்கப்பட்ட தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இக்குறிப்புகள் கொண்டு நோக்கும்போது, தமிழ்நாட்டில் பல வகையான மணிகள், இயற்கையாகக் கிடைத்தமை தெரியவருகிறது. இவற்றை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாதபடி இன்றும்கூட காங்கேயத்திற்கு வடமேற்கே உள்ள சிவன்மலை, பெருமாள்மலைக் குன்றுகளில் மக்கள் மணிகளைச் சேகரித்து வருகின்றனர்.

இயற்கையாகக் கிடைத்த இத்தகு மணிகளைத் துளையிட்டு அணிகலனாக்கிட வல்ல தொழிலர் இருந்தமையை மதுரைக்காஞ்சியின் ‘திருமணிக் குயினர்’ என்ற சொல்லாளுகை புலப்படுத்துகிறது. இவ்வரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ‘மண்டை’ எனும் கலனை அக நானூறு ‘மணிசெய் மண்டையாக’ அறிமுகப்படுத்துகிறது. சில மணிகள் வடக்கிலிருந்து தருவிக்கப்பட்டதை, ‘வடமலைப் பிறந்த மணி’ எனும் பட்டினப்பாலை அடி தெளிவு படுத்துகிறது. 

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த சூதுபவழம் குஜராத், மகாராட்டிரம்ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது. வைடூரியம் ஆப்கானிஸ்தானில் உள்ளது. பட்டினப்பாலையின் ‘வடமலைப் பிறந்த மணி’, சூழபவழம் போன்றவற்றைக் குறித்ததாகக் கொள்ள இடமுண்டு. அணிமணிகளைப் போலவே இரும்பின் பயன்பாடும், பெருங்கற்காலத்தில் மிக்கிருந்தமையை அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட உலைக்கலங்கள் உணர்த்துகின்றன. 

சங்க இலக்கியங்களில் காணப்படும் இரும்பு, எஃகு, கொல்லன், உலைக்கூடம், உலைக் கல், துருத்தி, விசைவாங்கி, மிதியுலை முதலிய கலைச் சொற்கள் சங்க காலத்தில் இரும்பை எஃகாக மாற்றும் தொழில்நுட்பம் அறியப்பட்டிருந்தமையை உணர்த்தவல்லன. பிளைனி, இரும்புப் பொருட்கள் ரோம நாட்டிற்குச் சேர நாட்டிலிருந்து சென்றதாகக் கூறுவார். தகடூர்ப் பகுதியில் வார்ப்பு இரும்பு செய்யப்பட்டது. எஃகும் இரும்பும் ஏற்றுமதியாகி, சங்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவின.

சங்க இலக்கியங்களுள் பழைமையானவை பேசும் பண்டமாற்றைப் போலவே ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் அக்காலத்தே செழித்திருந்தது. இந்தியாவிலேயே மிகுதியான ரோம நாணயங்கள் தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளன. மேற்கத்திய வணிகர்கள் பொன்னொடு வந்து மிளகொடு பெயர்ந்தனர். காவிரிப்பூம்பட்டினத்தில் வந்திறங்கிய பொருட்களை இலக்கியங்கள் குறிக்குமாறே, தமிழ்நாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகளும் பல பொருட்களை முன் நிறுத்துகின்றன. உள்நாட்டு விளைவும் வெளிநாட்டு வரவும் தமிழர் வணிகம் செழிக்கப் பேருதவியாயின.

தமிழ்நாட்டிலிருந்த பல்வகை வணிகக் குழுக்களைச் சங்க காலம் முதலே தொடர்ச்சியாகக் காணமுடிகிறது. உப்பு வணிகச் சாத்துக்களை இலக்கிய அடிகளில் காணுமாறு போல, நானாதேசிகள், மணிக்கிராமத்தார், சேனாமுகத்தார் செட்டிகள், குதிரைச் செட்டிகள், நகரத்தார் எனப் பல வணிகக் குழுக்களைக் கல்வெட்டுகள் அடையளப்படுத்துகின்றன. மணிக்கிராமத்தார் கொடும்பாளூர், உறையூர் போன்ற பல முக்கியமான ஊர்களில் தங்கியிருந்தனர். 

இவர்தம் கல்வெட்டொன்று தாகோபாவில் கிடைத்துள்ளது. குவாசிர் அல் காதிம் என்ற இடத்தில் கிடைத்துள்ள பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புடனான பானை, செங்கடல் பகுதியில் தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. பெர்னிகே துறைமுகத்திலும் ‘கோற்பூமான்’ எனும் பெயருடன் பானையோடு கிடைத்துள்ளது. பொ. கா 40ஐச் சேர்ந்ததாகக் கருதப்படும் இப்பானையோடு தமிழர்களே நேரடியாக ரோம் நாட்டுடனான வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை நிறுவும். வியன்னா அருங்காட்சியகத்தில் அறியப்பட்டுள்ள பேப்பிரஸ் தாள் ஒப்பந்தம் முசிறித் தமிழ் வணிகர் ஒருவருக்கும் அலெக்ஸாண்டிரியாவின் கிரேக்க வணிகர் ஒருவருக்கும் பொதுக்காலம் 200 இல் ஏற்பட்டதாகும். 

ஈழத்தில் காணப்படும் பல பழங்கல்வெட்டுக்கள் தமிழர் இலங்கையுடன் கொண்டிருந்து வணிகத் தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டுக் கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள வணிகக் கல்வெட்டுக்கள் வணிகர்களின் ஈரநெஞ்சைப் படம்பிடிக்கின்றன. தாம் வாழும் ஊர், அங்குள்ள கோயில் இரண்டிற்கும் வணிகப் பெருமக்கள் ஆற்றிய அரும்பணிகள் இப்பதிவுகளால் வெளிப்படுகின்றன. தாங்கள் கொணரும் அனைத்து விற்பனைப் பொருள்களிலும் ஒரு பகுதியைக் கோயிலுக்களிப்பதை இக்குழுக்கள் மரபாகக் கொண்டிருந்தன. இந்த நற்செயலே, சோழர் காலத்திலும் பிற்பாண்டியர் காலத்திலும் இந்த மண்ணில் விளங்கிய வணிகச் சூழலை அறியத் துணையாகிறது. 

 -  இரா. கலைக்கோவன்
நன்றி : www.varalaaru.com
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com