வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 14 September 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் நெய்தல் பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

 ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள நெய்தல் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


181.தலைவி கூற்று

நெய்தல் உண்கண் நேரிறைப் பணைத்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉம்
துறைகெழு கொண்கன் நல்கின்
உறைவுஇனிது அம்மஇவ் அழுங்க லூரே.

182.தோழி கூற்று

நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழு மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே.

183.தலைவி கூற்று

தண்கடல் சேர்ப்பன் பிரிந்தென பண்டையில்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ விலரே.

184.தலைவி கூற்று

நெய்தல் அருங்கழி நெய்தல் நீக்கி
மீன்உண் குருகினம் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக்கு அவருடை நட்பே.
185.தலைவன் கூற்று

அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்றுறை
இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீங்கிள வியளே.

186.தோழி கூற்று

நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்குகழி நெய்தல் உறைப்ப இத்துறைப்
பல்கால் வரூஉம் தேரெனச்
செல்லா தீமோ என்றனள் யாயே.

187.தோழிகூற்று

நொதும லாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே.

188.தலைவன் கூற்று

இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரூம்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகைபெரி துடைய காதலி கண்ணே.

189.தோழிகூற்று

புன்னை நுண்தாது உறைத்தரும் நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்ல ஆயின தோழிஎன் கண்ணே.

190.தோழிகூற்று

தண்நறு நெய்தல் தளைஅவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்றஎம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com