இரத்த பூமி - 18
தன் மக்களுக்காக கண நேரத்தில் பயணப்பட்டு கடல்கள் பல கடந்து இரவும் பகலும் துஞ்சாது இரப்பாளியின் கையிலிருந்து கோட்டையை காப்பாற்றுவதற்கு பயணப்பட்ட பரதவதலைவன் விக்கிரமாதித்திய பாண்டியன் தம் எண்ணப்படி விதாலனால் கைப்பற்றப்பட்ட தூயத்தந்தையையும் கேப்டன் கொட்டின் கோ அவரது குடும்பத்தார் போர்துக்கீசியரையும் படை வீரர்களையும் வேறு வழியின்றி பரதவரால் திரட்டப்பட்ட ஒரு லட்சம் பணத்தை கொடுத்து மீட்டு வந்தார்.

புன்னைக்காயலிலிருந்த புன்னைக்காயலை மீட்க வந்த புறநானூற்று கடலோரத்து பரதகுல மறவர்கள் புரட்சிபரணி பாடினர். தூயத்தந்தை காலில் விழுந்து வணங்கினர். கேப்டனை கட்டித்தழுவி மகிழ்ந்தனர். போர்த்துக்கீசிய வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி முழங்கினர். ஆனால்....
காத்தவராயனை காணாத கொற்கைகோ சலனப்பட்டான் பதட்டமானான். பரதவதலைவனை நோக்கி "ஐயா! காத்தவராயன் எங்கைய்யா?" எனக்கேட்க பாடன் பதப்பதைக்க அடப்பனார் எழும்பி கூட்டத்தை அடக்கினார். பாண்டியனாரின் மௌனம் கூட்டத்தின் ஆரவாரத்தை உடைத்தது. மையான அமைதி எங்கும் கவிழ்ந்தது. நிசப்தமான வெளியிலே வெடித்து சிதறிய வார்த்தைகளால் பாண்டியனார் "என் மகன் காத்தவராயன் என் வம்சம் காக்க நானே தளபதி என சரணடைந்தவன் சடலமாகி போனானே மக்களே...!" என ஓலமிட்டு அழுதார்.
பரதவ கூட்டமே கண்ணீரால் கலங்கியது. மாபெரும் வெற்றி மயானத்தின் அழுகுரலாய் மாறிப்போனது. ஊருக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட காத்தவராயனின் உடல் கோட்டைக்குள்ளே கொண்டு வரப்பட்டது. புன்னைகோட்டையில் இருந்த கோவிலின் முன்பே அடுத்தாரை காத்த காத்தவராயனின் உடல் மக்களின் பார்வைக்காக இறக்கி வைக்கப்பட்டது.
சாவுக்கும் அஞ்சாத பரதவ மமதையோடு துணிந்து கைதாகிப் போன காத்தவராயனை உயிரற்ற சடலமாய் கொண்டு வந்ததுதான் மாபெருங்கொடுமை. குமரியில் தன் கடல் அம்மைக்கு கோவில் எழுப்பிய பரதவ அரசன் வில்லவராயனின் வழித்தோன்றல் பாண்டியம்பதியின் பால்ய தோழன். காத்தவராயனின் தந்தை தேவராயன் 1532 தூத்துக்குடி கலவரத்திலே முன்னின்று மூர்களை வேட்டையாடி மூர்களுக்கு எமனாய் தெரிந்தவர் அதனாலே நயவஞ்சகமாய் நாயக்க படை சுற்றி வளைத்து கைது செய்து கொண்டு போனது, அதன் பின்னர் அவர் உயிரோடு திரும்பி வரவேயில்லை. அவர் பிள்ளை தான் காத்தவராயன்
கொற்கை கோவுடன் இணைந்தே வளர்ந்தவன். கொற்கை கோவுக்கு காவலாய் இருந்தவன் கொற்கை கோ வை காப்பற்றுவதற்கு தானே தளபதி என பழியேற்ற உத்தம நண்பன். சடலமாய் வந்த காத்தவராயனை காண சகிக்காத அவனது மறைவை முற்றிலும் நம்பாத அடப்பனார் அடக்க முடியாமல் கதறினார்.
ஐயோ காத்தவராய...உன்னை நான்தானே கொன்று போட்டேன். மறுவார்த்தை சொல்லாமல் கைதாகிப் போனாயே.. என் பிள்ளைகள் இருக்க
ஊரான் பிள்ளையை கையளித்தேனே..பாண்டிய பரம்பரை காக்க ...நானே தவறான முடிவெடுத்தேனோ... ஐயா பாண்டியம்பதி என்னை கொன்று விடுங்கள் ஐயா! என ஒரு புரத்தில் அவர் அழுது புலம்பி இருக்க...
ஐயோ! ராயா என மார்பிலடித்தபடி சாமிகளே உங்களுக்கு கண்ணில்லையா என்னய்யா தப்பு செய்தேன். ராயனோட அய்யா வையும் நாயக்கமாருதான் பிடிச்சிட்டு போய் கொன்னானுவ, இப்போ என் மவன் ராயனையும் கொன்னுபோட்டானுவளே... இத கேக்க நாதியே இல்லியா... பரவமாரு உசுரு என்ன மசுரா போச்சா...
ஐயா சமுதாயம் சமுதாயம்னு என்னை போல என் மருமவளையும் சின்னவயசிலே தாலி அருக்க வச்சி வாழா வெட்டியா ஆக்கிடிளே னு மார்பில் அடித்து அடித்து ஒப்பாரி வைத்து காத்தவராயனின் ஆத்தா அழுவதை பார்த்தவர்களும் கண்ணீர் முட்டி கதறினர்.
குழந்தை பெற்று ஒரு வாரமே ஆன காத்தவராயனின் மனைவி, பல் நாக்கு பூண்டு பரத்திகளின் மடியிலே கிடக்க பரத்தி முத்தம்மை கையிலிருந்த காத்தவராயனின் சின்னஞ்சிறு சிசுவின் அழுகை இன்னும் இன்னும் சோகத்தை இரட்டிப்பாக்க... புன்னை நகர் பரணியாற்று கரையின் தண்ணீருக்கு போட்டியாய் பரதவ பரத்திகளின் கண்ணீரால் மூழ்கியது. யார் யாரைத் தேற்றுவது ......
உடைந்து போன பரதவ தலைவர் ஓரமாய் ஒடுங்கி கிடக்க... தீராத பழிகுரலும் ஒப்பாரி ஓங்குரலும்... புன்னை கோட்டை தாண்டி பரதவரின் கடலோர கரையெங்கும் பரதவ பரத்தியரின் அழுகையும் கண்ணீரும் எதிரொலித்தது.
உங்களை போல அடுத்தாரை காத்த காத்தவராயனின் பிரிவால் வருந்தும்
…கடல் புரத்தான்…