"தமிழக வரலாறு –மக்களும் பண்பாடும்" நூல் கூறும் பரதவரின் வணிகம்
தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:
கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே (MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து க(ஹ)ர்க்குப் (HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகை தரும் மெழுக்கு, கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில் (SOUTHERN NOBIA) உள்ள யாம் (YAM) நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது.
இதிலுள்ள கருங்காலி மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார். (தமிழக வரலாறு பக்.31). கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEPPPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி (Sebni) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின் தோல் முதலியன உள்ளன.
அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும், இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)
தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32).
![]() |
ancient phoenician explorations discoveries |
பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் சு(ஸ்)மித், சு(ஸ்)காப், கென்னடி, சு(ஸ்)வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
இந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு, முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.)
அரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் தெரிவிக்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.(பக்.30,31)