வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 1 January 2017

பரதவர், பரதர், பரவர் – ஓரினத்தவரே!
பரதவர், பரதர், பரவர் என்ற சொற்களுக்கு நிகண்டு, அகராதி போல்வன கூறுகின்றவை அடிப்படையில் ஒரு பார்வை. 

பரதவர்

பரதவர் என்ற சொல்லிற்கான பொருள்கள்:

1. செந்தமிழ் அகராதி – ந.சி. கந்தையா

a. நெய்தல் நில மக்கள் 

b. தமிழ்நாட்டை ஆண்ட ஒரு சார் குறு நில அரசர் (பக்கம் 425)


2. நர்மதாவின் தமிழ் அகராதி -செந்தமிழறிஞர் மாருதிதாசன்

a. நெய்தல் நில மக்கள் (583)


3. தமிழ் - தமிழ் அகராதி – பேராசிரியர்.டாக்டர்.மு.நிலாமணி 

a. நெய்தல் நில மக்கள் 

b. நுளையர் (703)


4. வேமன் தமிழ் – தமிழ் அகராதி – பேராசிரியர் கொற்றவை சகி ஜெய ஸ்ரீ 

a. நெய்தல் நில மக்கள் (778)


5. அபிதான சிந்தாமணி – ஆ. சிங்காரவேலு முதலியார்

a. ஒரு குறுநில மன்னர் (1038)


6. சதுரகராதி -வீரமாமுனிவர் 

a. செட்டிகள் 

b. துரியோதனாதிகள் (307)


7. கழகத் தமிழ் அகராதி 

a. நெய்தல் நில மக்கள்

b. நுளையர் 

c. தென்திசைக் குறுநில மன்னர் (647)


8. தி லிப்கோ டிக் ஷனரி 

a. நெய்தல் நில மக்கள்

b. வைசியர் 


பரதவர் என்ற சொல்லிற்குச் செந்தமிழ் அகராதி, கழகத் தமிழ் அகராதி ஆகியன நெய்தல் நில மாக்கள் எனவும், நர்மதாவின் தமிழ் அகராதி, தமிழ் – தமிழ் அகராதி, வேமன் தமிழ் - தமிழ் அகராதி, தி லிப்கோ டிக் ஷனரி ஆகியன நெய்தல் நில மக்கள் எனவும் பொருள் கூறுகின்றன. இதனால் பரதவர் நெய்தல் நிலத்தில் வாழ்பவர்கள் என்பது விளங்குகிறது. 

கழகத் தமிழ் அகராதி தென்திசைக் குறுநில மன்னர் எனவும், அபிதான சிந்தாமணி ஒரு குறுநில மன்னர் எனவும், சதுரகராதி துரியோதனாதிகள் எனவும் பொருள் கூறுகின்றன. இதனால் இப்பரதவர்கள் தமிழகத்தின் தெற்குத் திசையில் உள்ள நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் என்பதும், துரியோதனர் முதலான கௌரவர் அரச பரம்பரையினர் என்பதும் தெளிவாகிறது. 

இச்சொல்லிற்கு சதுரகராதி செட்டிகள் எனவும், தி லிப்கோ டிக் ஷனரி வைசியர் எனவும் பொருள் கூறுகின்றன. இதனால் இப்பரதவர் வணிகத் தொழிலைச் செய்தார்கள் என்பதும், அவ்வணிகத்தொழிலைச் செய்தமையால் செட்டிகள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பதும் தெரிய வருகிறது. 

இச்சொல்லிற்கு தமிழ் – தமிழ் அகராதி, கழகத் தமிழ் அகராதி என்பன நுளையர் எனப் பொருள் கூருகின்றன. இதனால் இப்பரதவர் இனத்தின் ஒரு பிரிவினர் நுளையர் என்ற பெயரால் அழைக்கப்பட்டமையும், இப்பரதவர் இனத்திலிருந்து தோன்றிய இனமே நுளையர் என்பதும் விளங்குகிறது. 

பரதர்

பரதர் என்ற சொல்லின் பொருள்கள்:

1. பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர் 

a. வணிகர் 

b. நெய்தல் நில மக்கள்


2. செந்தமிழ் அகராதி – ந. சி. கந்தையா 

a. குருகுலத்தரசர் 

b. பரதவர் 

c. தீயோர்

d. செம்படவர் (424) 


3. நர்மதாவின் தமிழ் அகராதி – செந்தமிழறிஞர் மாருதிதாசன் 

a. மீனவர் (583)


4. தமிழ் – தமிழ் அகராதி – பேராசிரியர். டாக்டர். மு.நிலாமணி 

a. நெய்தல் நில மக்கள்

b. குருகுல அரசர்

c. கூத்தர் 

d. தீயோர் (703)


5. வேமன் தமிழ் – தமிழ் அகராதி – பேராசிரியர் கொற்றவை சகி ஜெய ஸ்ரீ 

a. நெய்தல் நில மக்கள்

b. வைசியர் (778)


6. அபிதான சிந்தாமணி – ஆ. சிங்காரவேலு முதலியார் 

a. சூர்ய குலத்தரசன் (37,38)

b. வைசியர் (778)


7. கழகத் தமிழ் அகராதி 

a. நெய்தல் நில மக்கள்

b. வைசியர் 

c. கூத்தர் (647)


8. தி லிப்கோ டிக் ஷனரி

a. கூத்தர் 

b. குருகுலத்து அரசர் 

c. நெய்தல் நில மக்கள்


பரதர் என்ற சொல்லிற்குச் செந்தமிழ் அகராதி, தி லிப்கோ டிக் ஷனரி ஆகியன குருகுலத்தரசர் எனவும், தமிழ் – தமிழ் அகராதி குருகுல அரசர் எனவும், அபிதான சிந்தாமணி சூர்ய குலத்தரசன் எனவும் பொருள் கூறுகின்றது. இதனால் பரதர் அரச குலத்தவர் என்பதும், சூரிய குலம், குருகுலம் ஆகிய குலங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

இச்சொல்லிற்கு பிங்கல நிகண்டு, தமிழ் -தமிழ் அகராதி, வேமன் தமிழ் அகராதி, கழகத் தமிழ் அகராதி, தி லிப்கோ டிக் ஷனரி ஆகியன நெய்தல் நில மக்கள் என பொருள் உரைப்பதால் இப்பரதர் நெய்தல் நிலத்திற்கு உரிய மக்கள் என்பது விளங்குகிறது. 

இச்சொல்லிற்கு தமிழ் – தமிழ் அகராதி, கழகத் தமிழ் அகராதி, தி லிப்கோ டிக் ஷனரி ஆகியன கூத்தர் எனப் பொருள் உரைப்பதால் இப்பரதர் கூத்தாடும் கலையை அறிந்தவர்கள் என்பது விளங்குகின்றது.

இச்சொல்லிற்கு வேமன் தமிழ் அகராதி, அபிதான சிந்தாமணி, கழகத் தமிழ் அகராதி ஆகியன வைசியர் எனவும், பிங்கல நிகண்டு வணிகர் எனவும் பொருள் கூறுகின்றது. இதனால் இப்பரதர் வணிகம் செய்தமை விளங்குகின்றது. 

இச்சொல்லிற்கு நர்மதாவின் தமிழ் அகராதி மீனவர் எனப் பொருள் கூறுகின்றது. இதனால் இப்பரதர் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்தவர்கள் என்பதும் தெரியவருகின்றது. 

இச்சொல்லிற்கு செந்தமிழ் அகராதி பரதவர் எனப்பொருள் கூறுவதால் இப்பரதர் ‘பரதவர்’ பெயரால் அழைக்கப்பட்டமையும், இவ்விருவரும் ஒரே இனத்தவர் என்பதும் விளங்குகின்றது. 

இச்சொல்லிற்கு செந்தமிழ் அகராதி செம்படவர் எனப்பொருள் கூறுவதால் செம்படவர் இப்பரதரில் ஒரு பிரிவினரே என்பதும் தெரிய வருகின்றது.



பரவர்

பரவர் என்ற சொல்லிற்கான பொருள்களாவன:

1. செந்தமிழ் அகராதி – ந.சி.கந்தையா 

a. கடற்கரைகளில் மீன் பிடித்து வாழும் சாதியார் (425)


2. தமிழ் – தமிழ் அகராதி – பேராசிரியர். டாக்டர். மு.நிலாமணி 

a. வலைஞர் 

b. ஒரு சாதியார் (784)


3. வேமன் தமிழ் – தமிழ் அகராதி – பேராசிரியர். கொற்றவை சகி ஜெய ஸ்ரீ 

a. ஒரு சாதியார் 

b. ஒரு செம்படவர் 

c. வலைஞர் (780) 


4. அபிதான சிந்தாமணி – ஆ. சிங்காரவேலு முதலியார் 

a. நெய்தல் நில மாக்களில் ஒருவகை சாதியார் 

b. இவர்களைப் பரதவர் என்றும் கூறுவர்.

c. இவர்கள் கடலோடி வகுப்பினர் (1041)


5. கழகத் தமிழ் அகராதி 

a. ஒரு சாதியார் 

b. வலைஞர் (648) 


பரவர் என்ற சொல்லிற்குச் செந்தமிழ் அகராதி கடற்கரையில் மீன்பிடித்து வாழும் ஒரு சாதியார் என்றும், அபிதான சிந்தாமணி நெய்தல் நில மாக்களில் ஒரு வகை சாதியார் எனவும் பொருள் கூறுகின்றன. இதனால் இப்பரவர் நெய்தல் நிலக் கடற்கரைகளில் வாழும் நெய்தல் நிலத்திற்கு உரிய மக்கள் என்பதும், இவர்கள் மீன்பிடித்தல் தொழில் செய்து வாழ்பவர்கள் என்பதும் விளங்குகின்றது. 

இச்சொல்லிற்கு தமிழ் -தமிழ் அகராதி, வேமன் தமிழ் – தமிழ் அகராதி, கழகத் தமிழ் அகராதி ஆகியன வலைஞர் எனப் பொருள் கூறுகின்றன. இதனால் இப்பரவர்கள் வலையால் மீன்பிடித்தொழில் செய்பவர்கள் என்பது தெளிவாகிறது.

இச்சொல்லிற்கு அபிதான சிந்தாமணி கடலோடி வகுப்பினர் எனப் பொருள் கோருகின்றது. இதனால் இப்பரவர் கடலில் கலம் செலுத்தி, வணிகம் செய்பவர்கள் என்பது தெரிய வருகிறது.

இச்சொல்லிற்கு அபிதான சிந்தாமணி இவர்களைப் பரதவர் என்றும் கூறுவர் எனப் பொருள் கூறுவதால் இப்பரவர் பரதவர் என்ற பெயராலும் அழைக்கப்படுவர். இப்பரதர், பரதவர் இருவரும் ஒரு இனத்தவர் என்பதும் தெரியவருகிறது. 

இச்சொல்லிற்கு வேமன் தமிழ் – தமிழ் அகராதி செம்படவர் எனப் பொருள் கூறுவதால் இச்செம்படவர் பரவர் இனத்தின் ஒரு பிரிவினர் என்பது தெரியவருகிறது. 

அகராதிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் பரதவர் தமிழ் நாட்டின் தெற்குத் திசையிலிருந்து ஆண்ட மன்னர்கள் எனவும், பரதர் குருகுலத்து அரசர் எனவும், கூறப்படுவதாலும், இவ்விருவரும் நெய்தல் நிலத்திற்குரிய மக்கள் எனக்கூறப்படுவதாலும், பரதவர், பரதர் என்ற இருவரும் ஒரே இனத்தவர் என்பது தெளிவாகின்றது.

மேலும் பரதவர், பரதர், பரவர் என்ற மூவரும் நெய்தல் நிலத்திற்குரிய மக்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் வணிகத் தொழிலைச் செய்பவர்கள் எனக் கூறப்படுவதாலும், பரதவர் என்ற சொல்லிற்கு செட்டிகள், நுளையர் எனவும், பரதர் என்ற சொல்லிற்கு பரதவர், செம்படவர் எனவும், பரவர் என்ற சொல்லிற்குப் பரதவர், செம்படவர் எனவும் பொருள் கூறப்படுவதாலும் இம்மூவரும் ஒரே இனத்தவரே என்பது உறுதியாகின்றது. 

- முனைவர் எஸ். ஏ. ரெமிஜியுஸ் பரதவாஜ், கன்னியாகுமரி. 



Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com