வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 3 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 16

கல்யான பறை இசைக்க திருமண வீடு களை கட்டியிருந்தது. குருத்தோலை தோரணங்கள் கல்யாண பந்தலை நிரப்பியிருக்க... மணமகள் சலேத்மேரியின் அண்ணன் பிலேந்திரன் மணமகன் சூசையை கையை பிடித்து அழைத்து பந்தலுக்கு கூட்டி வந்தான்.. மாப்பிள்ளைக்கு சிலுவை போடுங்கப்பா.. ஒரு பெரியவரின் குரலை தொடர்ந்து முழங்காலிட்டிருந்த மணமகனுக்கு அனைவரும் நெற்றியில் சிலுவை வரைந்தார்கள்..

மாப்பிள்ளையை வாசலில் நிறுத்தி பந்தல்கால் நட்டி ( மூகூர்த்தகால் ).. இவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறியபின்.. சொல்லப்படும் ஆசரியம் (மந்திரம்) சொல்லப்பட்டது...
சுத்த திருச்சிலுவை தூய அடையாளத்தால்...
சத்துருவை நீக்கி தாழ்பணியும் நித்தியனே..
எங்கள் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினிலே ..
ஆமென்..

மூக்கையூரில் இவர்களுக்கு துணிகளை வெளுக்கும் சலவைகாரர்கள் மணமகன் நடந்து போகும் பாதையெங்கும் தரையில் மாத்து விரித்தார்கள். பாண்டிய அரசகுடி திருமணங்களில் பட்டு கம்பளம் விரிக்கப்படும். இங்கு சலவைக்கு வரும் புது துணிகளை வெள்ளாவியில் வைத்து வெளுத்து மாத்தாக பயன்படுத்தினார்கள்..

மணமகன் குடைசுருட்டியின் கீழ் தரையில் விரித்திருந்த மாத்தை விட்டு அகலாமல் கம்பீரமாக நடக்க தொடங்க பறை இசையோடு ஊர்வலம் கிளம்பியது.. கல்யாண கட்டியம் காதை பிளந்தது..
அயோத்தி நாட்டை விட்டு பாண்டிய நாட்டிற்க்கு அதிபதியாய் வந்த பங்கமில்லா தங்கமே.. ஒரு பெரியவர் கட்டியம் கூற..
இளைஞர்கள் உரத்த குரலில் "பராக்"  என்றார்கள்..

கடலுக்கு அரசன் பரதகுலபாண்டியன் 
திருமுடி சூடி கொழுவீடு விட்டு தெருவீடு வாறார்.. பராக்....

உத்திரகோசமங்கை கல்தேர் ஒட்டிய  
அஸ்தினாபுரத்து மாவீரன் தெருவீதி வாறார்.. பராக் ..

சுந்தர பாண்டியனே... 
மீன்கொடி கண்டவனே ..
வணங்காமுடியே ... பராக் .... பராக்...... 

மணமகன் ஊர்வலம் மணமகள் வீட்டை அடைந்தும் மணமகளுக்கு பெரியவர்கள் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசிர்வதித்து...

மணமகனும் மணமகளும் ஒருவர் பின் ஒருவராக நடந்து கோவிலை நோக்கி செல்ல..

மங்கையர்க்கரசியே..
பாண்டியனின் அரசியே...
தொல்குடி மன்னன் மகளே..
கடலுக்கு அரசியே..
மனைவி என பெயர் பெற போகும்
மங்கையர் செல்வியே..
எங்கள் குல கொடியே..
பராக்...

ஊர்வலம் கோவிலை அடைந்தது ..

அத்தனை நிகழ்சிகளையும் தன்னை மறைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாரியம்மா பிரமித்து போய் நின்றாள்..

கோவிலுக்கு வடக்கு புறம் இருந்த வீடுகள் வடக்கு தெருவாகவும், தெற்கு புறம் இருந்த வீடுகள் தெற்கு தெருவாகவும் மூக்கையூரில் தெருக்கள் உருவாகியிருந்தது..

பந்தல் கூடிவிட்டபடியால் ஆங்காங்கு இருக்கும் உறவுகள் கல்யாண பந்தலுக்கு வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.. இரண்டு தெருக்ககளிலும் பறையடித்து தண்டோரா போடப்பட்து... எல்லோருக்கும் உணவு பறிமாறிய பின்.. மணமகளின் தந்தை இடுப்பில் துண்டை கட்டியவாறு..ஏதாவது குற்றம் குறை இருந்தாலும் என்னை மன்னிச்சு சாப்பிடுங்க.. என்று சொல்லியபின் தான் அனைவரும் சாப்பிட்டார்கள்...

இதுதான் கல்யாண விருந்தின் மரபு...

தொடர்ந்து இரண்டு நாட்களாக சூசையை பார்க்காததால்.. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மாரியம்மா.. இன்னைக்கு எப்படியும் தன் கணவனை பார்த்துடனம்னு அதிகாலையிலயே அங்காடி பெட்டியை தலையில் வைத்தவாறு கடற்கரை நோக்கி நடக்க தொடங்கினாள்...

வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்த சலேத்மேரியை பார்த்தவுடன் அருகில் சென்று.. கல்யாண பொண்ணு கோலத்துல நீ ரொம்ப அழகாய் இருந்த..
புதுபெண்ணின் கண்ணம் வெட்கத்தால் சிவந்தது.. சரி வர்றேன்னு சொல்லிட்டு கடற்கரை சென்றவள் ... தன் கணவனை அங்கும் இங்கும் தேடி கானாமல்.. தான் கொண்டுவந்த அங்காடிகளை கூட யாருக்கும் விற்காமல் சோர்ந்து போய் நடந்து வந்தவள்...

எப்படியும் தன் கணவனை இன்னைக்கு பார்த்துறனம்னு சலேத்மேரி வீட்டை கடக்கும் போது அருகில் சென்று எட்டி பார்த்தாள் மாரியம்மா.. பின்னாலிருந்து அக்கா மாமா வீட்டுக்குள்ள தூங்குறாக.. சலேத்மேரியின் குரல் கேட்டு வெலவெலத்து போனாள் மாரியம்மா..

கொட்டானிலிருந்த அங்காடிகள் கீழே விழுந்து மணலில் சிதறி கிடந்தது..

உங்கள் இருவருக்குமான உறவு எனக்கு தெரியும்..நேத்து நீங்க என் மாமா மடியில் படுத்து கிடந்து அழுதது வரை எல்லாம் எனக்கு தெரியும்..

எப்படி என்பது போல் கண்களை உயர்த்தினாள் மாரியம்மா ..

முதல்நாள் ராத்திரி உங்க ரெண்டுபேர் கதையைத்தான் விடிய விடிய எனக்கு சொன்னாங்க மாமா.. எனக்கு என் மாமாவை ரொம்ப பிடிக்கும்.. எனக்கு முன்பே தெரிஞ்சுறுந்தா என் மாமா வாழ்க்கையை கெடுத்திருக்க மாட்டேன்.. நான் எங்க ஊர் இடிந்தகரைக்கு திரும்ப போயிறுப்பேன்.. மாரியம்மாவின் கைககளை பிடித்து கொண்டு கலங்கிய கண்களோடு என்னை மன்னிச்சுறுங்க என்றாள்..

ஐயோ ...

அவுங்க அரசகுடி வாரிசு.. நான் பண்டம் விற்ப்பவள்.. நான் தகுதியே இல்லாதவள்.. நான் உன் வாழ்க்கையை கெடுக்கமாட்டேன்.. அவுங்களை விட்டு விலகி போய்றேன் என்ற மாரியம்மாவின் கைகளை இறுக்கி.. என் மாமாவின் ஒழுக்கம் எனக்கு தெரியும்.. அதுனால நான் உங்களை நம்புறேன். நீங்க இல்லைனா மாமா செத்துருவாங்க மாரியம்மாவின் கால்களை கட்டிபிடித்தாள் சலேத்மேரி.. இரண்டு பேரின் உடைகளும் ஏங்கி ஏங்கி அழுத கண்ணீரால் தெப்பலாக நனைந்திருந்தது.. 

வீட்டை கடந்து செல்லும்போது அக்கா என்ற கூப்பிட்ட சலேத்மேரியின் குரலுக்கு திரும்ப.... வீட்டுக்கு போய் சீக்கிரம் சோறு பொங்குங்க.. மாமா பசிதாங்க மாட்டாங்க. எந்திச்சதும் உங்க வீட்டுக்கு வர சொல்றேன் என்றாள் சலேத்மேரி..
......... தொடரும் .........
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com