வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 10 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 20

கி.பி. 1708 லிருந்து 1710 வரை பெயர் தெரியாத ஒரு கொள்ளை நோய்க்கு (ப்ளேக்) ஏழுகடற்றுறையின் இரண்டாம் கடற்துறை வைப்பாறு மிகவும் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோர் நோயால் இறந்தார்கள். மூக்கையூரும், வேம்பாரும் அதிகம் பாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் வேம்பாரில் புனித செபஸ்தியாரும், மூக்கையூரில் சந்தியாகப்பரும் குதிரையிலேயே வலம் வந்து ஊர் எல்லையிலேயே நோயை தடுத்து நிறுத்திட்டாங்கன்னு.. வைப்பாரில் பேசிக்கொண்டார்கள்.. (குதிரை கால் தடயம் எல்லாம் பார்த்தார்களாம்)..

அன்றிலிருந்து வைப்பார் மக்கள் மூக்கையூரில் நடக்கும் திருவிழாக்களுக்கு வந்து போக தொடங்கியிருந்தார்கள்.. கி. பி. 1713 சேதுபதி படைகள் வேம்பாரை கைப்பற்றியபோது இலங்கைக்கும், உள் நாடுகளுக்குள்ளும் தப்பித்து சென்றவர்கள் போக மீதி பேர் அருகிலுள்ள தீவுகளில் தஞ்சம் புகுந்தனர். போகும்போது செபஸ்தியார் சுருபம் உட்பட அனைத்து சுருபங்களையும் தீவுகளுக்கு கொண்டுபோய் பாதுகாத்தார்கள்..(நாயக்கர் மற்றும் சேதுபதியிடம் கடற்படை இல்லாததால் ஒவ்வொரு படையெடுப்பிலும் தங்களை தற்காத்து கொள்ள அருகிலுள்ள தீவுகளில் தஞ்சம் புகுந்தனர். சில தீவுகளில் (வான்தீவு) பாண்டியாபதியின் வேண்டுதலுக்கு இணங்க போர்த்துகீசிய படைகள் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது..)

1715 இல் மூக்கையூர் சந்தியாகப்பர் கோவில் திறப்பு விழாவிற்கு வந்த வைப்பாறு மக்கள் வேம்பாரை கடந்து வரும்போது அங்கு எந்த சுருபங்களும் இல்லாததால். ஆண்கள் கடல்வழியாக நல்லதண்ணி தீவிற்கு சென்று அங்கிருந்த செபஸ்தியாரை கும்பிட்டுவிட்டு தன் உறவுகளிடம் நலம் விசாரித்துவிட்டு மூக்கையூர் சென்றார்கள்.. பெண்கள் அனைவரும் கடலில் கால்களை நனைத்தபடி மூக்கையூரை நோக்கி நடந்து வந்தார்கள்.

இந்த வருஷமாவது நல்ல சம்மந்தம் வரட்டும்ன்னு சந்தியா ராயப்பருக்கு நேர்ச்சை போட்டு கோவில் திருவிழாவிற்கு போகமாட்டேன் என்று சொன்ன தன் மகளை சமாதானப்படுத்தி அவள் அப்பத்தாவோடு மூக்கையூருக்கு அனுப்பியிருந்தாள் செல்வியின் அம்மா...

தன் ஒன்றுவிட்ட சித்தியின் வீட்டில் தங்கியிருந்த செல்வி.. திருவிழாவில் பார்த்த அவனை வைப்பாறுக்கு திரும்ப போறதுக்கு முன்னாடி எப்படியாவது அவனை திரும்ப சந்திக்கனும்னு அடுத்தநாள் காலையில் அவனை பார்ப்பதற்க்கு ரொம்ப மெனக்கெட்டா..

கோவிலுக்கு பலமுறை போவதும் வருவதுமாக இருந்தும் ஒருமுறை கூட அவன் கண்ணில் தென்படல. சோர்ந்து போய் அமர்ந்திருந்த செல்வியை அவள் சித்தி கூப்பிட்டு.. ரெண்டு வீடு தள்ளியுள்ள எங்க மதினி வீட்ல போய் கருப்பட்டி வாங்கிட்டுவா.. நீ ஊருக்கு போகும்போது ஏதாவது பலகாரம் செஞ்சு கொடுத்தது அனுப்பனும்ல...

பனை ஓலையால் வேயப்பட்ட சுற்றுவேலி கதவை திறந்தவள்.. வீட்டிற்கு முன்னால் போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்து கடலுக்கு கொண்டு செல்லும் ஒமல்ல உள்ள பீத்தலை பொத்தி கொண்டிருந்தான் ராயப்பு ..

அவனை பார்த்த சந்தோஷத்தில் உடம்பெல்லாம் புல்லரிச்சுபோய் நிற்க.. நிமிர்ந்து அவளை பார்த்தவன் என்ன என்பதுபோல் பார்வையால் கேட்டான்..
திக்கி தினறிபோய் .. எங்க சித்தி கருப்பட்டி வாங்கிட்டு வரசொன்னாங்க..

யாரு வைப்பாரு அத்தையா ..?

ம்ம் ..

(முன்பெல்லாம் அவர்களின் குடும்பத்து வர்க்க பெயரை சொல்லி அழைத்தவர்கள் இப்போதெல்லாம் அந்த குடும்பம் எந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வருகிறதோ அந்த ஊரின் பெயரை சொல்லியே அழைத்தார்கள்.. உவரியான், மணப்பாட்டான், தாழையான், கமுதியான், கடலாடியான் இப்படி அழைக்கப் பட்டார்கள்...)

வீட்டிற்குள் நுழைந்து ஒரு கொட்டான் நிறைய கருப்பட்டிகளை கொண்டுவந்து கொடுக்க.. கைககள் நடுநடுங்க கொட்டானை வாங்கியவள் இவன் விரல் தீண்டியதும், வியர்த்துபோய் மயக்கமாகி கீழே சாய்ந்தவளை தாங்கிபிடித்து குவித்து வைத்திருந்த ஒமல்ல சாய்த்து வைத்தான் ராயப்பு..

தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தவள் ..

கொட்டானை தலையில் தூக்கி நடந்தவாறு... மாதாவே.. மாதாவே.. ன்னு ஏதோ முனங்கி கொண்டே போனாள் ..

ஏய்.. என்ன சொல்ற..

வாசல்வரை போனவள் திரும்பி வந்து

கண்டிப்பாக சொல்லனுமா என்றாள்..?

ம்ம்..

மாதாவுக்கு நன்றி சொன்னேன்.

எதுக்கு..?

என் புருஷன கண்ணுல காமிச்சதுக்கு.

ஒமல் மேலே உட்கார்ந்திருந்த ராயப்பு ரெண்டு கையவும் விரிச்சமேனிக்கு தரையில சாஞ்சிட்டான்..

(வீட்டுக்கு அருகில் நின்ற பனைமரத்திலுள்ள பச்சை ஓலைகளும் சந்தோஷத்தில் தலையாட்டியது. அங்கு ஒரு ஆன்மா இன்னும் உயிரோடு இருப்பது யாருக்கும் தெரியாது.. )

திருவிழா முடிஞ்சு ஊருக்கு திரும்புறவுங்க நல்ல வெப்பல் போட்டு கடல்ல அலைகளே இல்லாதாலே தங்களுடைய குடும்பங்களையும் கட்டுமரத்திலும், சிறு வள்ளங்களிலும் ஏறி வைப்பாறுக்கு புறப்பட்டார்கள். சிலர் மட்டும் நடந்து சென்றார்கள்.. அன்னைக்கு சரியான பாடு என்பதால் வலைகளிலிருந்து மீன்களை பிரித்து எடுப்பதில் தீவிரமாயிருந்தான் ராயப்பு. தன்னை கடந்து சென்ற செல்வியை அவன் கவனிக்கவில்லை..

க்க்கூம்.. செருமிக்கொண்டே அவனை கடந்து சென்ற செல்வியை நிமிர்ந்து பார்த்தான்.

கொஞ்சதூரம் தன் அப்பத்தாவோடு சென்றவள் தனியாக திரும்பி வந்து அவனிடம் என்னங்க என்றாள்..

(இந்த குரலும் வார்த்தையும் ஏற்கனவே கேட்து மாதிரி இருந்தது ராயப்புக்கு)

நீங்க எப்ப என்னை தாங்கிபுடிச்சியலோ அப்பவே நான் உங்க பொண்டாட்டி.. நீங்க என் புருஷன்.. உங்களுக்கு என்னைக்குமே நான்தான்.. மறந்துறாதிக.. ன்னு சொல்லிவிட்டு ஒட்டமும் நடையுமாக தன் அப்பத்தாவை நோக்கி சென்றாள் செல்வி..

குவிச்சு வச்சிறுந்த மீனை கள்ளபிராந்தும் (பருந்து), காக்காவும் எவ்வளவு தூக்கிட்டு போச்சுனு ராயப்புக்கு தெரியாது ...

........ தொடரும் ........
- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com