வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 7 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 18
புள்ள பெத்தவங்களுக்கு இடிமருந்து கொடுப்பதற்கு அதற்கான மருந்து பொருட்களை (ஒமம், சதகுப்பை, வசம்பு, வால்மிளகு, கருஞ்சீரகம், அரிசிதிப்பிலி, பெருங்காயம், சுக்கு, மஞ்சள், கருப்பட்டி, நல்லெண்ணெய்) உரலில் போட்டு இடித்து கொண்டிருந்தாள் மாரியம்மா..

தன் மனைவி சலேத்மேரியோடு மாரியம்மா வீட்டிற்குள் நுழைந்த சூசை.. எதுக்கு என் மகள்ட்ட சலேத்மேரி அண்ணன் மகனை கல்யாணம் கட்டாதேன்னு சொன்ன.. கோபத்தோடு கேட்ட சூசையிடம்..

உங்களுக்கு அவனை பத்தி தெரியுமா? எனக்கு அவனை பத்தி தெரியும்.. தெனமும் கள்ளு குடிச்சுட்டு பனை மரத்து கீழே படுத்து கெடப்பான். அவனுக்கு வேற தப்பான பழக்கம்லாம் இருக்கு.. நான் உங்கள்ட்ட சொல்லமாட்டேன்.. நம்ம மகளை அவனுக்கு கட்டி கொடுக்க மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் திருந்திருவான்க்கா என்ற சலேத்மேரியிடம்..

சின்ன வயசுல மோசமா திரியுறவன், கல்யாணம் முடிஞ்ச பிறகும் அப்படித்தான் இருப்பான் என்ற மாரியம்மாவிடம்..

என்னடி..பெத்தவ சொல்றா.. நீ ஏன் கேட்க மாட்டேங்கிற.. கோபத்தில் சூசை கண்ணத்தில் ஓங்கி அறைவிட குப்புறபோய் மணலில் விழுந்தாள் மாரியம்மா.
ரெண்டு சுருக்கு பையை விரிச்சு அதிலிருந்த தங்க ஆபரணங்களை சலேத்மேரியின் சேலை மடியில் அள்ளி போட்டு இதை கொண்டு போ.. இது எல்லாம் நம்ம மகளுக்கு நான் சேர்த்து வச்சது. என்னை அடிச்சாலும் கொன்னாலும் அவனுக்கு நம்ம மகளை கட்டி கொடுக்கமாட்டேன். மாரியம்மாவின் ஆக்ரோஷத்தை பார்த்து ..

மாமா இன்னொரு நாள் பேசிக்கிறுவோம். வாங்க போவோம் தன் கணவன் சூசையை கூட்டி சென்றாள் சலேத்மேரி ..

வீட்டிற்குள் நுழையும் போதே தன் மகள் குழந்தை தெரஸ் அழும் சப்தம் கேட்டு பதறிபோய் உள்ளே போனாள் சலேத்மேரி ..

மச்சான் போதைல வீட்டுக்குள்ள வந்து நீதான் என் பொண்டாட்டின்னு சொல்லிட்டு போறாக.. எனக்கு கல்யாணமே வேண்டாம்மா.. நான் அம்மாங்களா போயிர்றேன்.. வேம்பாருல உள்ள மடத்துல என்னை சேர்த்து விட்டுறுங்கன்னு காலை பிடித்து கதறிய மகளை பார்த்து.. அவனுக்கு கட்டி குடுக்ககூடாதுன்னு கணவனும் மனைவியும் அப்பவே முடிவெடுத்தார்கள் ..

எதுக்கு மாமா அவுகள அடிச்சிய.. கைல ஒன்னு வயித்துல ஒன்னு இருக்கும் போது நம்ம மகளை அவுகதானே வளர்த்தாக .. அந்த உரிமைல சொல்றாக.. இப்ப எதுக்கெடுத்தாலும் ரொம்ப கோபப்படுறிய.. போய் சமாதானப்படுத்திட்டு வாங்க.. தன் கணவனை மாரியம்மா வீட்டிற்க்கு அனுப்பி வைத்தாள் சலேத்மேரி ..

நான்தான் அவனுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல.. மறுபடி எதுக்கு அழுகுற.. தன் மடியில் தலைவைத்து படுத்து அழுது கொண்டிருந்த மாரியம்மாவை அதட்டினான் சூசை.. வயசானவுடனே கோபம் பொத்துக்கிட்டு தான் வருது.. எழுந்து போய் அடுப்பை பத்த வைத்தாள்..

சாப்பிட்டு முடித்து கிளம்பியவனிடம்.. என்னங்க.. என்னமோ நடக்க போறது மாதிரி நெஞ்சு படபடன்னு அடிக்குது பயமாயிருக்கு.. நான் தூங்கின பிறகு நீங்க போங்க.. மீண்டும் மடியில் படுத்து அவன் தொடைகளை தன் இரு கைகளாலும் இறுக்கி பிடித்திருந்தாள் மாரியம்மா..

மீன்பாடு சரியில்லாததால் ஒருவாரமாக எந்த கட்டுமரமும் கடலுக்கு செல்லவில்லை.. அதிகாலையில் தன் மகன்களை எழுப்பிய சூசை.. நாளைக்கு கனத்த நாளு (அமாவாசை) எப்படியும் இன்னைக்கு பாடுவரும். நல்லதண்ணி தீவை நெருக்கி பாருக்குள்ள போக வேண்டாம்.

சேத்துக்கால்ல இழுப்போம்னு சொல்லி தன் மகன்களை கடற்கரைக்கு கூட்டி சென்றான் சூசை. அப்பா நீங்க கடலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன தன் மூத்த மகன் இருதயராசாவை அதட்டி.. அப்பா சாகுற வரைக்கும் கடலுக்கு வருவேன் ஏறு.. மரத்துல தன் மூன்று மகன்களோடு கடலுக்கு சென்றான் சூசை ..  கொண்டுவந்த ரெண்டு ஒமலும் மீன்களால் நிறைந்திருந்தது..

நான் பெரிய கம்மாருகாரண்டா ..

தன் அப்பா தன்னை பார்த்த பார்வையிலே புரிந்து கொண்டான் இருதயராசா.. கட்டுமரம் கரையை நெருங்கும் போது கச்சான் காத்து ரொம்ப ஒரமா இருந்துச்சு.. மார்சா (அலை) கூட கெடக்கு.. ரொம்ப கவனம்னு சூசை சொல்லும் போதே.. மரம் குறுக்க ஆடியது..

தம்பீ..தொளவையை போட்டு மரத்தை நேர்க்கட்டுன்னு இருதயராசா சொல்லி முடிக்குமுன் ஒங்கி வந்த மார்சா அப்படியே கட்டுமரத்தை புரட்டி போட்டது.. தண்ணீருக்குள்ளிருந்து எழுந்த சூசை தன் மகன்கள் மூன்று பேரும் கரையை நோக்கி நீந்தி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கும்போது.. மார்சாவில் புறண்டு வந்த கட்டுமரம் சூசையின் பின்னந்தலையில் ஒங்கி அடிக்க... நீருக்குள் மூழ்கினான் சூசை.

அப்பா.. அப்பா.. இருதயராசா தன் தம்பிகளோடு ஏங்கி ஏங்கி அழுதவாறு கடற்கரையெங்கும் தேடி கொண்டிருந்தான். சூசை கரையேறவேயில்லை.. சூசை உடல் கடற்கரைல அடஞ்சு கெடக்குன்ன அதிகாலையில் ஊரெங்கும் செய்தி பரவியது.. அவனின் உடலை கிடத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கும் போதுகூட சலேத்மேரியின் கண்கள் மாரியம்மாவை தேடியது..

துஷ்டி வீட்டுக்குள் மாரியம்மாவை எங்குமே கானோம்.. பொழுது சாஞ்சவுடனே அடர்ந்த பனைமர கூட்டத்திற்குள் புதைக்க பட்டிருந்த தன் அப்பா கல்லறைக்கு விளக்கு வைக்க போன இருதயராசா.. கல்லறையில் குவித்து வைத்திருந்த மணல் மேல் ஒரு பெண் குப்புற படுத்திருப்பதை கண்டு ஓடிபோய் தலையை திருப்பி பார்த்தான்..

மாரியம்மா

வாயிலிருந்து இரத்தம் வெளியேறி உறைந்து போய் இருந்தது.. முகமெல்லாம் ஈக்கள் மொய்க்க இறந்து கிடந்தாள் மாரியம்மா.. கல்லறைக்கு அருகில் அரளி செடிகள் பூத்து குலுங்கி கிடந்தது.. ஒரு காதல் தேவதையின் எரியூட்டப்பட்ட சாம்பல் மூக்கையூரிலுள்ள மரம் செடி கொடி அனைத்திலும் அடர்ந்து படர்ந்து கிடந்தது..  
....... தொடரும் ......
- சாம்ஸன் பர்னாந்து 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com