வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 28 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 23

மூக்கையூர் கோவில் திறப்புவிழா முடிஞ்சு ஒரு வருஷத்த தாண்டிட்டு.. இன்னும் ஆண்டவர திரும்ப போய் பார்க்கல. திருவிழாவுக்கு வந்தவரும் கோபத்துல உம்முன்னு இருந்தாரு.. எந்த கோரிக்கையும் வைக்காம அவர போய் பார்த்துட்டு வருவம்ன்னு நெனச்ச சந்தியாகப்பர் போனதடவை மாதிரியே தன் கூடப்பிறந்த சகோதரர் யோவானையும் துணைக்கு கூட்டிட்டு போவோம்ன்னு நெனச்சார்..

நீ அவர மதிக்கலைன்னு உன்மேல உள்ள கோபத்தில என்னைய என்ன ஏதுன்னு கூட கேட்கமாட்டேங்காரு.. நான் வரலைன்னு திடமா மறுத்துட்டார் யோவான்..

ஆண்டவரை நெருங்கும் போது..

மோயிசன் அவர் அருகில் நின்று பேசி கொண்டிருந்தார்..

ரெண்டுபேரும் சேர்ந்து எந்த கடலை பொளக்க போறாங்கன்னு தெரியலையே... திடீர்னு ஞாபகம் வந்தவராக மோயிசன் கானான் பிரதேசத்துல செங்கோல வேற தொலச்சுட்டம்னு சொன்னாரு.. இப்ப என்ன பண்ணுவாங்கன்னு தெரியல..

சந்தியாகப்பர பார்த்ததும் உத்தரவு ஆண்டவேரே... அவரிடமிருந்து விலகி சென்றார் மோயிசன்..

என்ன ஆளையே இங்கிட்டு காணோம்.

நோய்களிலிருந்து மக்களை நல்லா பாதுகாக்கிறியாம். மத்த எல்லோரும் சொல்றாங்க... Keep it up என்றார் கடவுள்..

திருதிருவென முழித்த சந்தியாகப்பரிடம் தொடர்ந்து நல்லா பண்ணுயா என்றார் கடவுள்..

அவருக்கென்ன.. உலகம் பூரா சுத்துறவறு. எங்கயாவது பேசுற மொழியை இங்க வந்து நம்மள்ட்ட சொல்லி காமிப்பாரு... வந்த குதிரையில் ஏறி மூக்கையூருக்கு திரும்ப புறப்பட்டார் சந்தியாகப்பர்..

செல்விய பார்த்து ஆறேழு மாசமானதால ரொம்ப சோர்ந்து போய் இருந்தான் ராயப்பு.. கடலுக்கு கூட ஒழுங்கா செல்றதில்லை.. ஒருநாள் செல்விய பார்க்கனும்னு ஆவேசத்துல நரிப்பையூர் வரைக்கும் நடந்து போய் பின் நிதானிச்சு தன்னால அவளுக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு திரும்பி வந்துட்டான்..

என்னம்மா வைப்பாத்துகாரங்க வீட்ல கூட்டமாயிருக்கு.. ராயப்பு தன் அம்மாவிடம் கேட்க.. அவள் மகள் சமஞ்சுட்டா.. ரெண்டுநாள்ள தலைக்கு தண்ணி ஊத்துறாகளாம்..

வெளுப்புக்கு வள்ளங்கள் கடலுக்கு போகும்போது.. ஒரு வள்ளம் மட்டும் வைப்பாரிலிருந்து விடிவெள்ளிய கணக்கு பன்னி மூக்கையூரை நோக்கி சென்றது... ஒமல்ல உள்ள மீனை கடற்கரையில் கொட்டி குனிந்தவாறு ரகம் பிரித்து கொண்டிருந்தான் ராயப்பு..

திடிரென ஒரு வள்ளம் தன் அருகில் கரை பிடித்து... ஆண்களும், பெண்களுமாக வள்ளத்திலிருந்து இறங்கினார்கள்... வள்ளத்துல இருந்து இறங்கிய செல்விய பார்த்து சத்தோஷத்துல அப்படியே சிலையா நின்னுட்டான் ராயப்பு.. அந்த நேரத்தில அங்காடி விக்கிறவ அவன் பக்கத்துல வந்து கொட்டான தலையிலிருந்து இறக்கினாள்.. திரும்பி பார்த்த செல்வி இவர்கள் இருவரும் ஒன்றாக நிற்பதை பார்த்து ராயப்பை முறைத்து பார்த்தபடியே சென்றாள்..

யாத்தே.. இன்னைக்கு நான் செத்தேன். சும்மாவே வைப்பாத்தா கிண்ணாரம் சுத்துவா.. இன்னைக்கு நம்ம கத முடிஞ்சுச்சு..

அண்ணே மொச்சபயிறு வாங்கலையா.. இவ ஒருத்தி.. மீனை விக்காம அப்படியே போட்டுட்டுஅவளை நோக்கி ஓடினான் ராயப்பு.. தன்னை பின் தொடர்ந்து வேகமாக நடந்து வரும் ராயப்பை பார்த்து தாமசிச்சு நடந்து ஒரு பனையின் மறைவில் நின்றாள் செல்வி..

தனக்கு எதிரே வந்து மூச்சிறைக்க நின்றவனிடம்.. காலைலயே உங்கள தேடி வந்துட்டா போல...?

இன்னொருத்தி இருக்கிறதால தானே என் நெனப்பு உங்களுக்கு வரல.. முன்னமே தெரிஞ்சுருந்தா உங்கள பார்க்க இங்க வந்திருக்க மாட்டேன்னு கோபமாக சொன்னவளிடம்..

கேந்தி ஏத்தாத பார்த்துக்க..

ராயப்பு தன் இரு கைகளையும் செல்வி கழுத்தருகே கொண்டுபோய்... கொதவலைய (குரல்வளை) நெறிச்சு ஒன்னைய கொன்னுபோடுவேன்.. நானே ஒன்னைய பார்க்க முடியாம கோட்டிக்காரன் மாதிரி இந்த ஊர்ல அலையுறேன்.. பக்கத்திலே நின்று உன்னை பார்க்கனும்னு அவ்வளவு ஆசையா ஒடிவந்தா.... எப்படியும் உன் நெனப்புலயே என்னை சாவடிச்சுறுவடி ...

செல்வி... தூர இருந்து அவள் அம்மாவின் குரல் கேட்க.. இந்தா வர்றேன்.. ராயப்பை முறைத்து கொண்டே சென்றாள் செல்வி..

கி.பி. 1658 ல் கொழும்பிலிருந்து வந்த டச்சு படை தூத்துக்குடியையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் முழுவதுமாக ஆக்கிரமித்து. அந்த பகுதியிலுள்ள பெரிய ஆலயங்களான வேம்பார், தூத்துக்குடி, புன்னகாயல், மணப்பாடு இவற்றில் தூத்துக்குடி ஆலயத்தை மட்டும் முற்றிலுமாக தரைமட்டமாக்கிவிட்டு மற்ற மூன்று ஆலயங்களையும் தங்களின் வணிக கிட்டங்கியாக மாற்றியிருந்தார்கள்..

கி.பி.1695 ஆம் ஆண்டு சாதி தலைவர் இடத்தில் கட்டப்பட்ட மணப்பாடு பரலோகமாதா ஆலயம் வாணிப கிட்டங்கியாக மாற்றப்பட்ட போது அங்கு வசித்த சில குடும்பங்கள் கோவில் இல்லாத ஊர்ல குடியிருக்க கூடாதுன்னு மணப்பாட்டிலிருந்து உள் நாட்டிற்க்குள் அமராபுரம் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்தது...

உள் பகுதிகளில் டச்சுகாரர்களின் ஆதிக்கம் இல்லாததால் சிறிய அளவிலான பரிசுத்தஆவி ஆலயம் ஒன்றை கட்டி வழிபட்டார்கள்... 1710 ல் இவர்களுக்கும், பரதவர்களுக்கும் ஏற்ப்பட்ட உடன்படிக்கையை அடுத்து, டச்சு நிர்வாகம் யேசுசபை குருக்களை அழைத்து ஆலயங்களில் திருப்பலி நடத்தி கொள்ள அனுமதி அளித்தது...

இனி பரதவர்களை துன்புறுத்த மாட்டோம் என்ற அவர்களின் வாக்குறுதி செய்தியாக பரவி.. டச்சுகாரர்களின் மிரட்லுக்கு பயந்து உள் நாடுகளில் வசித்த மக்கள் மீண்டும் கடற்கரைக்கு திரும்ப தொடங்கினர்.. அமராபுரத்தில் தங்கியிருந்தவர்கள் பிற்காலத்தில் மணப்பாடு திரும்பி பரலோகமாதா கோவில் அழிக்கப்பட்ட அதே இடத்தில் அமராபுரம் நினைவாக பரிசுத்த ஆவி ஆலயத்தை எழுப்பினார்கள் ...

....... தொடரும் .......

- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com