வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 8 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 19
இலங்கைக்கு சென்றிருந்த சலேத்மேரியின் அண்ணன் அங்கேயே பத்து வருங்களாக தங்கி அங்கு தனக்கு முன்னால் குடியேறிய தன் இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் செய்தவன்.. டச்சுக்காரர்களோடு (ஹாலந்து) தொழில் ரீதியாக இணக்கமாகி ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் மூலம்... (முத்து வணிகம் தவிர.. இது பாண்டியாபதியின் வாரிசுகளுக்கு மட்டுமே...) இலங்கையில் பெரும் செல்வந்தனாக மாறி போயிருந்தான்..

தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு மரக்கலனில் தன் சுற்றத்தை பார்க்க மூக்கையூர் வந்தவன்.. தன் மாமா சூசையின் இறப்பை கேள்விப்பட்டு அதிர்ந்து.. தன் அடுத்த தலைமுறையும் கடல்ல கஷ்டப்பட வேண்டாம்னு... தன் தங்கை சலேத்மேரியையும், அவளது மகன்களையும் தன்னோடு இலங்கைக்கு கூட்டி சென்றான் பிலேவேந்திரன்..

சூசை சலேத்மேரியின் மகள் குழந்தை தெரஸ் அம்மாங்க மடத்துல சேர்ந்து பத்து வருஷம் ஆகியிருந்தது.. ஒருநாள் இரவில் பெய்த கனத்த மழையில் மேற்கூரைகள் இல்லாமல் பாதி அழிந்து கிடந்த நிலையில் இருந்த தடிமனான மண்சுவர் முற்றிலுமாக கரைந்து போய் அந்த இடத்தில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது.. பல வருடங்களாக அந்த வீட்டில் வசித்து வந்த ஒரு ஆன்மா வீடில்லாமல் பனை மரத்தில் குடியேறி கடலையே பார்த்து கொண்டிருந்தது..

மாரியம்மா...

ஒரு புனிதமான காதல் இங்கு வாழ்ந்து காட்டப்பட்டது என்பதற்கான எந்த தடயங்களுமே இல்லாமல் போயிற்று மூக்கையூரில்..


******************************************

கி. பி. 1713.... 

வேம்பாரும், மூக்கையூரும் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதால் செல்வ செழிப்பான ஊராக மாறி போயிருந்தது. டச்சுக்காரர்கள் கிறிஸ்தவ மதம் என்றாலும் அவர்கள் வேறு சபை பிரிவினர் (கால்வீனிஸ்ட்)... அவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தை அழிக்க உலகமெங்கும் தீவிரம் காட்டினார்கள்..

டச்சுக்காரர்களின் தீவிர வற்புறுத்தலின் பேரில் விஜயன் சேதுபதி இரண்டு ஊர்களின் மீதும் படையெடுத்து (மூக்கையூர் மறவநாடு ஆனால் வேம்பார் பரவநாடு) சென்று மூக்கையூரிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தை தரை மட்டமாக்கியதோடு செல்வங்களையும் கொள்ளை அடித்து சென்றான்...

வேம்பாரில் திருத்தலமாக (Baslica) மாறிபோயிருந்த பரிசுத்த ஆவி ஆலயத்தை தன்னுடைய இருப்பிடமாக மாற்றினான் விஜயன் சேதுபதி. (ஏற்கனவே டச்சுபடையினர் ஆலய பீடத்தை முற்றிலுமாக சேதப்படுத்தியிருந்தார்கள்) பாதிரியார்களை அனைவரையும் அடித்து துரத்தியதால் அவர்கள் அனைவரும் காடுகளிலும், அருகில் உள்ள தீவுகளிலும் மறைந்து வாழ்ந்து மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றினார்கள்.

டச்சுகாரர்களின் அராஜாகத்தால் நிறைய குடும்பங்கள் இலங்கை மன்னாருக்கு குடிபெயர்ந்தது (இன்று இலங்கையில் வாழும் பரதவ இனத்தவரில் பாதிபேர் வேம்பாரை பூர்வீகமாக கொண்டவர்கள் ).. வேம்பாரில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக பரிசுத்த ஆவி ஆலயத்தில் திருப்பலி நடைபெறவில்லை.. 

மூக்கையூரில் நடந்தவைகளை கேள்விபட்ட ஆப்பநாட்டு தலைமையும், சாயல்குடி ஜமீனும் விஜயன் சேதுபதியை சந்தித்து மூக்கையூர் மக்கள் அரசகுடிகள் என்று விளக்கி கூற..மீண்டும் அவர்களை கோவில் கட்ட அனுமதித்தார் விஜயன் சேதுபதி. வேம்பாரை விட்டு படைகளை விலக்க கூடாது என்று விஜயன் சேதுபதிக்கு கடுமையான உத்தரவு போட்டிருந்தது டச்சுபடை.. முத்து வணிகத்தில் இவர்களுக்கும் தூத்துக்குடி பரதவ வணிகர்களுக்கும் நடந்த உரசல்களே காரணம். 

(பரத இனத்தின் பாதுகாவலி தஸ்நேவிஸ் அன்னை நகர்வலம் வர தேர் செய்து கொடுத்த தேர்மாறன் என்று அழைக்கப்பட்ட தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸை கைது செய்வதற்கு இலங்கையிலிருந்து திருப்பி அனுப்புங்கள் என்று உத்தரவிட்ட ஆங்கிலேயர்களின் கோரிக்கையை இலங்கை டச்சு நிர்வாகம் நிராகரிக்கும் அளவுக்கு பரதவரோடு பின்னாளில் நெருக்கமானார்கள் டச்சுகாரர்கள்...)

மூக்கையூரில் கோவில் கட்ட சேதுபதி நிர்வாகம் அனுமதித்ததன் பேரில் தகவல் கொச்சின் தலைமைக்கு செல்ல ஆலோசனைக்கு பின்.. போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டு புனித சவேரியார் உடல் பாதுகாக்கப்பட்டிருக்கும் குழந்தையேசு ஆலய வடிவில் கட்ட தீர்மானித்தார்கள்..

மூக்கையூருக்கு எதிரே உள்ள உப்புதண்ணி தீவை சுற்றியுள்ள பாறைகளை பெயர்த்தெடுத்து சுண்ணாம்பு காய்ச்சப்பட்டது.. கோவில் கட்டுவதற்கான முக்கிய மூலப்பொருட்கள் சுண்ணாம்பும், கருப்பட்டியும் இவர்களுக்கு எளிதாக கிடைத்ததால் தாங்களே கட்டிட வேலை செய்து இரண்டே வருடத்தில் பிரம்மாண்டமான ஆலயத்தை கட்டி முடித்தார்கள்..

மூக்கையூரில் புதிய சந்தியாகப்பர் ஆலயம் உருவானது... அவன் சொன்ன கோரிக்கைககளை நான் நிறைவேத்தலைன்னு கோவில் திறப்புக்கு கூட என்னை கூப்ட மாட்டேங்கிறானே.. மீன் திங்குறவன்ல ரோஷம் கூடத்தான் இருக்கும்.. அவன் கூப்பிடலைனாலும் நம்ம போவோம்னு முடிவெடுத்த கடவுள்.. 

சந்தியாகப்பர் மேல் கோபத்தோடு தன் படைகளுடன் (புனிதர்கள்) மூக்கையூரை நோக்கி சென்றார்.. வேறு ஊர்களில் குடியேறிய மூக்கையூர்காரர்களுக்கு திறப்புவிழா அழைப்பு சொல்லப்பட்டது.. புனித சந்தியாகப்பர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கம்பீரமாக தெருக்களில் வலம்வர புறப்பட்டார்.. இளைஞர்கள் பெருங்கூட்டத்தை லாவகமாக விலக்கி சப்பரத்தை முன்னெடுத்தார்கள். அவர்களை உடம்பெங்கும் திட்டு திட்டாக முறுக்கேறிய ஒரு இளைஞன் வழிநடத்தினான்..

வயசுக்கு வந்த புள்ளைகல்லாம் சந்தியாகப்பரை விட இவனைத்தான் பார்த்துச்சு.. கூட்டத்தில் நின்ற செல்வியை அவன் பார்வை நிலைகுத்தாமல் கடந்து சென்றது.. சப்பரத்தின் பின்னாலயே சென்று கொண்டிருந்தாள் செல்வி.. மாதாவே.. மாதாவே.. அவன் என்னை திரும்ப பார்க்கனும்.. வேண்டிகொண்டே போனாள் ..

ரொம்ப தூரம்வரை நேராக சென்றது சப்பரம்.. செல்வி தன் நெற்றியில் சிலுவை வரைய ஆரம்பித்தாள்..
பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து நாமத்தினாலே..
சப்பரம் டக்கென திரும்பி எதிரே செல்லும்போது மீண்டுமாய் அவன் பார்வை அவள்மீது பட்டது.. கண்களில் மின்னலாய் இறங்கிய அவன் பார்வை இதயத்தில் இறங்கி நிலைகுத்தி நின்றது செல்விக்கு..

ஆமென் ....
...... தொடரும் ......
- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com