வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 6 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 17


இருபத்தைந்து வருடங்கள் கடந்திருந்தது.......

ஆண்டவரை நேரடியா பார்த்து மூக்கையூர் பங்கு விஷயமாக சில கோரிக்கைகள் சொல்லனும்னு கிளம்பி போக நெனச்ச சந்தியாகப்பர் போன தடவை தான் சொன்னதை கடவுள் எதையுமே காதுல வாங்கல.. அதுனால இந்தமுறை சிபாரிசுக்கு தன் உடன் பிறந்த சகோதரர் யோவானையும் சேர்த்து கூட்டிட்டு போவோம்னு முடிவெடுத்தார்.. என்னை யாருமே மகிமை படுத்துவதில்லை. இயேசுவுக்கு நெருக்கமான சீடர்னு சொன்னானுக.. நற்செய்திலாம் எழுதியிருக்கேன். திருச்சபை கூட என்னை கண்டுக்கல. புனிதர் பட்டம் கொடுத்ததோட என்னை ஊத்தி மூடிட்டானுவ.. உனக்கு தான் உலகம் முழுவதும் ஆலயங்கள்.. உன்னை தான் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். நீ சொல்லி கேட்காததையா நான் சொல்லி கேட்டுறப்போறாரு ஆண்டவரு..

நான் வரல.. என்று சொன்ன தன் சகோதரர் யோவானை சமாதானப்படுத்தி அவரையும் கூட்டி சென்றார் சந்தியாகப்பர்.. அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கியலே.. என்ன விஷேசம்னு கேட்ட கடவுளிடம்..

ஒன்னும் பெருசா இல்ல ஆண்டவரே.. எனக்கு பெரியவீடு கட்டி தர்றம்னு சொன்னிய.. அதுவும் செய்யல இப்ப மூக்கையூர் ஆலயத்தை தரம் உயர்த்தியாவது தாங்க என்றார் சந்தியாகப்பர்..

தரம் உயர்த்துறதுன்னா.. கடவுள் புருவத்தை உயர்த்த..

ஆண்டவருக்கு இப்ப உள்ள தூய தமிழ் வார்த்தை தெரியாதுல.. வேற ஒன்னுமில்ல ஆண்டவரே மூக்கையூர் தனி பங்காக மாறனும்...
கடவுள் கண்ணைமூடினார்..

மூக்கையூரின் முதல் பங்குகுரு கூட்டப்பனையை சேர்ந்த ஜோப்டீரோஸ். அவன் அப்பனே பிறக்க இன்னும் பத்து வருஷம் இருக்கு.. கண்ணை திறந்த கடவுள் சந்தியாகப்பரிடம் இன்னும் அறுபது வருஷம் பொறுத்துக்க.. அதுவரைக்கும் நான் சொன்ன வேலையை மட்டும் பாரு ..

உத்தரவு ஆண்டவரே.. சகோதர்கள் இருவரும் திரும்பி செல்லும் போது சந்தியாகப்பர் ஏதோ முனங்குவது மாதிரி தெரிஞ்சுச்சு கடவுளுக்கு.. எதற்கெடுத்தாலும் பொசுக் பொசுக்னு ஓடி வர்றான்... இவன் வர்ற குதிரை காலை ஒடச்சு விட்டாத்தான் ஊர்லயே இருப்பான் போல..கடவுள் நினைத்தார்.

தன் சிறு வயதிலிருந்தே தன் அம்மாச்சி பிரசவம் பார்க்க செல்லும் வீடுகளுக்கெல்லாம் ஒத்தாசைக்கு (உதவி) சென்ற மாரியம்மா அவள் அம்மாச்சி செத்த பிறகு அந்த பகுதியில் பிரபலமான மருத்துவச்சியாக மாறி போயிருந்தாள். பிரசவம் பார்க்க இரவில் கூட அவளை மாட்டுவண்டியில்அழைத்து செல்லவார்கள். வெகுமதியாக பத்து ஆழாக்கு அவுச்ச நெல்லும், வேம்பாறு வண்ணப்பெட்டி நிறைய கருப்பட்டியும் பெரும் அளவுக்கு மதிப்புமிக்கவளாக மாறிப்போயிருந்தாள் மாரியம்மா.. கழுத்தில் தாலிகயிறு தொங்கியதால் பிரசவத்திற்க்கு செல்லும் இடமெல்லாம் அவளை தாயாகவே மதித்தார்கள்...

சூசையின் மனைவி சலேத்மேரியின் முதல் பிரசவம் மட்டுமே அவள் அம்மாச்சி பார்க்க.. மற்ற ஏழு குழந்தைகளுக்கும் மாரியம்மாவே பிரசவம் பார்த்தாள். கடைசி குழந்தை பிறந்து கண்விழித்த சலேத்மேரி.. மாரியம்மாவை கூப்பிட்டு அக்கா.. நானும் எட்டு புள்ள பெத்துட்டேன்.. நீங்க இதுவரைக்கும் என்னட்ட எதுவுமே வாங்குனதில்ல... கேட்டதுமில்ல...
நான் எது கேட்டாலும் தருவியா..?

புள்ள பெத்த வலியையும் தாண்டி எதுனாலும் தர்றேன் என்றாள் சலேத்மேரி..

சிரித்து கொண்டே என் புருஷனை என்னட்ட தர்றியா என்றாள் மாரியம்மா..

சரிக்கா.. என்றாள் சலேத்மேரி.

அவளின் பதிலை கேட்டு அதிர்ந்து போனவளிடம்..
இந்த நெரஞ்ச வாழ்க்கை நீங்க எனக்கு போட்ட பிச்சை என்றவள்.. இத்தன வருஷமா மாமாவுக்கும் உங்களுக்கும் என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும்..
தினமும் அவுக உங்களை பார்க்க வருவாக.. ஒருவேளை சோறு உங்க கையால சாப்பிடனும் கொஞ்சநேரம் நீங்க மாமா மடியில தொடையை இறுக்கி பிடிச்சுட்டு தூங்குவிய..

நீங்க முழிக்கிற வரைக்கும் மாமா அப்படியே உட்கார்ந்திருப்பாக.. இதுதானே இன்னை வரைக்கும் நடக்குது.. இன்னும் எத்தன வருஷம் ஆனாலும்அது மட்டும் தான் நடக்கும். நான் என்னை நம்புறத விட நீ என்னை அதிகம் நம்புற.. மாமாவை உங்களவிட அதிகம் நம்புவேன்க்கா..

தரையில் படுத்து கிடந்த சலேத்மேரியின் தலைமுடியை வருடியவாறு.. நான் சாகுறவரைக்கும் உன்னுடைய இந்த நம்பிக்கை மட்டுமே எனக்கு போதுமென்றவள்..

என் பூர்வீக சொத்து நான் வாழுற பெரிய வீடு நான் வாங்கிய நிலம் நகைகள் எல்லாமே என் புருஷனுக்கும், நம்ம புள்ளைகளுக்கும் தான். நான் எதுக்கு உன்னட்ட கூலி வாங்கனும்..

எழுந்து போன மாரியம்மாவை கண்ணில் நீர் மல்க பார்த்து கொண்டேயிருந்தாள் சலேத்மேரி ..

சூசையும் அவனுடைய புள்ளைகளும் சாப்பிடுவதற்க்கு வீட்டுக்குள் வட்டமா உட்கார்ந்து இருந்தார்கள்.. கேப்பை களியை தட்டு நெறைய வச்சு, அகப்பையால நடுவுல அகலமா குழி தோண்டி அதுக்குள்ள சுடசுட மீன் கொழம்ப சலேத்மேரி ஊத்தி கொடுக்க, நாலாவதா பொறந்த ஒத்த பொம்பளபுள்ள பதினஞ்சு வயசு முடிஞ்ச குழந்தைதெரஸ் எல்லோருக்கும் சாப்பாட்டு தட்டை தூக்கி கொடுத்தாள்.. அம்மா என்று தன் மூத்த மகன் கூப்பிட... என்னடா என்று சலேத்மேரி சாப்பிட்டவாறே கேட்டாள்.

அப்பாவை நாளைக்கு கடலுக்கு வரவேண்டாம்னு சொல்லுங்கத்தா..

அணியத்துல (கட்டுமரத்தின் முன் பகுதி) அப்பாவால நிக்கமுடியல. பிந்தலைக்கு (பின்பகுதி) வாங்கன்னு கூப்பிட்டா வரமாட்டேங்கிறாக. ரொம்ப தள்ளாடுறாக. நாளைக்கு அப்பாவை இறக்கி விட்டுட்டு தம்பியை (இன்னும் 12 வயசு முடியல) கடலுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னான் சூசையின் மூத்த மகன் இருபத்திரெண்டு வயதுடைய இருதயராசா...

....... தொடரும் ....
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com