வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 24 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 22

தன் கரத்தை பிடித்திருந்த செல்வியின் கைகளை விலக்கி.. இருட்டுறதுக்குள்ள மூக்கையூர் போகனும்.. நான் வர்றேன் என்றவனிடம்.. 

காத்து ஒரமா கெடக்கு அதுலாம் சீக்கிரம் போயிறலாம் நான் சமச்சு தர்றேன்.. என் கையால சாப்பிட்டுட்டு போங்க என்று சொன்னாள் செல்வி.. 

உங்க அம்மா அப்பா ன்னு இழுத்தான் ராயப்பு..

அம்மா விளாத்திகுளம் சந்தைக்கு போயிறுக்காக...  அப்பாவும், தம்பியும் கடற்கரைல நிக்காங்க. எல்லோரும் வீடுவந்து சேர பொழுதடஞ்சுறும்.

உனக்கு எதுக்கு செரமம் நான் கிளம்புறேன்..

ஏன் அந்த அங்காடி விக்கிறவள பார்க்க போகனுமாக்கும்?.. கிண்டலாக செல்வி கேட்க..

சட்டுனு தரையில் உட்கார்ந்த ராயப்பு சோத்த பொங்குடி என்றான்.

கோவம் வருதாக்கும் உங்களுக்கு...

மூணு மாசமா நான் உங்கள பார்க்காம தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்
புருஷன பார்த்துகிட்டே இருக்கனும்... பக்கத்தில உட்கார்ந்திருக்கனும்னு எல்லா பொண்டாட்டிக்கும் ஆசையிருக்கும் இதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறிக ..

இந்த வைப்பாத்தாளோட காலம் தள்ளுறது கொஞ்சம் கடுசுதான்..

ராயப்பை மொறச்சு பார்த்து.. புருஷன் பட்டினியா கெடக்க கூடாதுன்னு நெனப்பா வைப்பாத்துகாரி..

அடுக்கு பானைக்குள்ள இருந்த நெத்திலி கருவாட்ட எடுத்து கொஞ்ச நேரத்தில சமச்சு முடிச்சுட்டா செல்வி.. நெல்லுசோறு சாப்பிட்டு அசதில வீட்டு நடு சட்டத்தில சாய்ந்திருந்த ராயப்பிடம்.. என்னங்க என்று கூப்பிட்ட செல்வியிடம் என்ன என்பது போல் பார்த்தான் ராயப்பு..

ஊருக்கு போனவுடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... உங்கள பார்க்காம என்னால இருக்க முடியல..

எனக்கு ஒரு பிரச்னையிருக்கு கொஞ்சகாலம் ஆகட்டும்..

கண்டிப்பா என்னைய கல்யாணம் கட்டுவியல்ல..?

நான் உன் புருஷன்னுதானே என்ன நடந்தாலும் பரவாயில்லைனு நடு வீட்ல உக்காந்திருக்கேன்.. வாசலில் நின்றவளை வேண்டுமென்றே உரசிக்கொண்டு
வீட்டிலிருந்து வெளியே வந்தான் ராயப்பு.. 

நெனப்பு இருக்குல அப்ப சீக்கிரம் தாலிகட்ட பாருங்க...

ம்ம்.. தலையாட்டிகொண்டே கடந்து போனவனை..

மச்சான்.. சினுங்கிகொண்டே செல்லமாக கூப்பிட்ட செல்வியை திரும்பி பார்த்தான் ராயப்பு. ஒன்னுமில்லை...நீங்க போங்க

கோட்டி புடுச்சுறுக்கு போல.

ஆம.. உங்க மேல என்றாள்...

கட்டுமரம் மறையும் வரை ஒரு எருக்கஞ்செடிக்கு பின்னால் மறைந்து நின்று கடலையே பார்த்து கொண்டிருந்தாள் செல்வி...

கி.பி. 1538 ஆம் ஆண்டு கொச்சி மறைமாவட்ட அனுமதியுடன் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட புனித இராயப்பர் ஆலயம்தான் தூத்துக்குடியின் முதல் ஆலயம். அதுவே தூத்துக்குடி கிறிஸ்துவ மக்களின் பங்கு ஆலயமாக இருந்தது. பிறகு வேறு எந்த ஒரு ஆலயமும் தூத்துக்குடியில் கட்டப்படவில்லை..

1712 ஆம் ஆண்டு தஸ்நேவிஸ் மாதா ஆலயம் கட்டி முடித்து திறக்கப்பட்டாலும் கோவிலின் வேலைகள் முழுமையடையாமல் இருந்தது.. 1714 ஆம் ஆண்டு வேலைகள் முற்றுப்பெற்று திருவழிபாடுகள் முறையே நடைபெற்று வந்ததால் புதிய பனிமய அன்னை ஆலயமே தூத்துக்குடி மக்களின் பங்கு கோவிலாக மாறியது. (1733 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக அங்கீகரிக்கப்பட்டது. 1982 ல் (Basilca) திருத்தலமாக மாறியது.)

1710 ஆம் ஆண்டு கொச்சின் வந்த கான்ஸ்டாண்டைன் பெஸ்கி முத்துக்குளித்துறை பகுதிகளான மணப்பாடு, தூத்துக்குடி, புன்னகாயல் பகுதிகளுக்கு வந்து பின் தமிழையும் வேதபோதக பனிகளையும் தெளிவாக கற்க 1714 இல் வேம்பார் வந்தார். கற்று தேர்ந்து பின்னர் வீரமாமுனிவர் என்று பெயர் மாற்றி தேம்பாவணி போன்ற சிறந்த நூல்களை படைத்தார்..

செல்வ செழிப்பான வேம்பார் அடிக்கடி நாயக்கரின் படைகளால் சூறையாடப்பட சில குடும்பங்கள் பரவ நாட்டை விட மறவநாடு பாதுகாப்பானது என்று மறவ நாட்டில் கீழக்கரை மற்றும் நரிப்பையூரிலும் குடியேறினார்கள்..

ஐந்தாறு வருடங்களில் ஐம்பது குடும்பங்கள் என்ற அளவுக்கு பெருகி போயிருந்தது.. மற்ற பரவ ஊர்களை போலவே நரிப்பையூரிலும் சாதி தலைவர் (அடப்பன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.. மூக்கையூரிலிருந்து வியாபர நிமித்தமாக வெளியேறி கடலாடியில் நிரந்தரமாக தங்கியிருந்தவர்கள் கருவாடு விற்க மீண்டும் ஒரு சந்தையை கண்டு பிடித்தார்கள்..

வியாபாரத்திற்காக கடலாடி, மூக்கையூரிலிருந்தும் மக்கள் சென்று கமுதியிலும் நிரந்தரமாக குடியேற தொடங்கினார்கள்... பின் ஒரு சில வருடங்களிலேயே பார்த்திபனூர், விருதுநகரிலும் மூக்கையூர் மக்கள் குடியேறினார்கள். பிற்காலத்தில் கருவாடு மட்டுமல்ல மற்ற தொழிலும் சிறந்து விளங்கினார்கள்..

மாலிக்காபூரால் பரதவர்களின் மொத்த வணிகமும் சிதறடிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெகுவிரைவில் மீண்டு.. முத்து குளித்தலும்.. மேலைநாடுகள் வரை பிற வணிகமும் செய்து போர்த்துகீசியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கு போட்டியாக விளங்கினார்கள்..

1710 ஆம் ஆண்டு பரதவர்களின் ஒத்துழையாமையால் டச்சுகாரர்களின் கடல் வணிகம் சரிய தொடங்கி பின் பரதவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் (கோவில் கட்ட அனுமதி) மீட்டெடுத்தாலும்.... பரதவர்களின் வணிகத்தை அழிக்க இலங்கையிலுள்ள டச்சு தலைமை நிர்வாகம் முடிவெடுத்தது...

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிக பொருட்களை சூழ்ச்சியால் இவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்க கிரேக்கம், ரோமாபுரி போன்ற மேலை நாடுகளின் வணிகம் முற்றிலுமாக நின்றுபோனது.. ரங்கூன், மலேசியா, கொழும்பு போன்ற கீழ்திசை நாடுகளுக்கு மட்டுமே சிறிய அளவில் வணிகம் நடந்தது..

பரதவ வணிக பட்டினங்களான மணப்பாடு, வீரபாண்டியன் பட்டணம், தூத்துக்குடி ,வேம்பார் போன்றவற்றின் கடல் வணிகம் சரிய தொடங்கியது...

........ தொடரும் ........
- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com