வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 2 September 2021

துருப்பிடித்துப்போன துறைமுகம்

தூத்துக்குடிக்கு தெற்கே...
துயரத்தின் பிடியில்
அலைகடலின் அரவணைப்பில்
கருவேல மரங்களின் கண்காணிப்பில்

இன்றைய தேதியில்
இதுதான் கொற்கை...
ஆமாம்
சரித்திரத்தின் பக்கங்களில்
தன் பெயரை
பொன் எழுத்துக்களால்
பதித்துக்கொண்ட
இந்த
துறைமுகம்
இன்று
துருப்பிடித்துக் கிடக்கிறது..!
கால மாற்றத்தில்
காற்று
கடல் மணலை இறக்குமதி செய்ய
அலைகள்
இந்த துறைமுகத்தையே
ஏற்றுமதி செய்துவிட்டன.. ?
கிழக்கு திசையில்
சற்றே நகர்ந்தால்
கொற்கை நகரம்
ஒரு
குக்கிராமத்தைப் போல
தலைகுனிந்து கிடக்கிறது. .
மாட மாளிகைகளும் இல்லை
வானத்தை வருட கோபுரங்களும் இல்லை.
எங்கு நோக்கினும்
ஏழை ஜீவன்களும்
எருமை மாடு களும்தான்...
ஊருக்கு நடுவில்
பொற்கை செழியன் கட்டிய
கொற்கை தேவி கோயில்
ஆரவாரமில்லா விட்டாலும்
அர்ச்சனை மட்டும்
அன்றாடம் நடக்கிறது.
அதன்
அருகே இருக்கும்
முருகன் கோயிலின்
சுற்றுச்சுவர்களை
சுற்றிப் பார்த்தால்
அச்சில் விட முடியாத
அசிங்க வார்த்தைகள்
எல்லாம்
இக்கால மன்னர்களின்
கரிக்கட்டை கல் வெட்டுக்கள்தாம்.
அன்றும்
அலைகள் அடித்து
கிழித்துப் போட்ட
பூம்புகாரை
புதுப்பித்து
புது வடிவம் தந்ததோடு
சங்க தமிழுக்கு
குங்குமத்தில் பொட்டு வைத்த முதல்வரே..
வங்கக் கடலோரம்
வாழுகின்ற வரலாற்றை
வாட விடலாமா?
இந்த முறை
உங்களை
கோட்டைக்கு கொணர்ந்ததும்
ஒரு துறைமுகம்தானே..!
அதற்காகவேனும்
கொற்கைக்கு நீங்கள்
குடமுழுக்கு நடத்தலாமே?
- அருள்செழியன்
ஜூனியர் விகடன், மே, 1989.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com