வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 22 September 2021

அலைகளின் மைந்தர்கள் - 21
பாண்டியாபதியின் உத்தரவையடுத்து...

டச்சுகாரர்கள் கடல் வணிகம் செய்வதற்கு தோணிகளை அவர்களுக்கு கொடுக்க கூடாதென்று தூத்துக்குடி பரதவர்கள் முடிவெடுத்தார்கள். இவர்களால் மட்டுமே எந்த நாட்டிற்கும் வணிக கப்பலை துல்லியமாக கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில்.. யாருமே கடலுக்குள் போகமாட்டோம் என்று திடமாக மறுத்ததால்.. டச்சுகாரர்களின் கடல் வணிகம் முற்றிலுமாக தடைபட்டது...

இலங்கையிலிருந்த டச்சுவின் தலைமை நிர்வாகம் தூத்துக்குடி வந்து பாண்டியாபதியோடு பேச்சுவார்த்தை நடத்தியதின் விளைவாக.. இடிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டிக்கொள்ளவும் திருப்பலி நிறைவேற்றவும் டச்சு நிர்வாகம் அவர்களுக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து, பரதவர்கள் கடல் வணிகத்தை தொடர்ந்தார்கள்.. அதே நேரம் வேம்பாரில் பரிசுத்த ஆவி ஆலயத்தை சுற்றி மிக பெரிய கோட்டை எழுப்பி (டச்சு கோட்டை) ஏற்றுமதி இறக்குமதிக்கான பண்டகசாலையாகவும் ஆயுதகிடங்காகவும் ஆலயத்தை மாற்றி இருந்தார்கள்...

கொச்சியிலிருந்து பாதிரியார்கள் திரும்ப தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.. 1713 ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பரதவகுல சாதி தலைவர்களாலும், பாண்டியாபதியாலும் கொற்கை, சிவாந்தாகுளம், துப்பாசிபட்டி, வேம்பார், பாண்டியன் தீவு ஆகிய ஊர்களி
லும் கடைசியாக பாண்டியாபதியின் வீட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரதவரின் அன்னை ஏழுகடல்துறை ஏக அடைக்கல தாயாகிய திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா முத்துக்களாலும், தங்கத்தினாலும் அலங்கரிக்கப்பட்டு பாண்டியாபதியின் தலைமையில் ஊர்வலமாக தூத்துக்குடி வீதிகளில் நகர்வலம் வந்து மீண்டுமாய் கோவில் பீடத்தில் கம்பீரமாக நிலை நிறுத்தப்பட்டாள்...

மரியே வாழ்க.. மரியே வாழ்க...

1716 இல் தூத்துக்குடியில் முத்து வணிகம் சிறப்பாக இருந்ததால் அப்போதைய பரதகுல சாதி தலைவர் தொன் கப்பிரியேல் ஆரோக்கிய தெக்குரூஸ் கோமஸ் அவர்கள் அன்னை நகர்வலம் வர ஒரு சிறு தேர் செய்ய முடிவெடுத்தார்.. இதுதான் பனிமய அன்னை தூத்துக்குடி வீதிகளில் நகர்வலம் வந்த முதல் தேர்.. 1720 லிருந்து 1779 வரை நகர்வலம் வந்தது. 

பின்னாளில் தூத்துக்குடி பரத இனம் தொழில் ரீதியாக கஷ்டப்பட (முத்து சிலாபம் இல்லாமல் போக) தேரோட்டம் நின்று போனது.. பின் 1802 ல் தேர்மாறன் என்று அழைக்கப்பட்ட தொன் கப்ரியேல் தெக்குரூஸ் தங்கத்திலான தேர்செய்து பரதவரின் அன்னையை தூத்துக்குடியெங்கும் நகர்வலம் வர செய்தார்.. தஸ்நேவிஸ் மாதாவிற்கு தூத்துக்குடி சாதி தலைவர் தேர் செய்து கொண்டிருப்பது.. இடிந்தகரையிலிருந்து மூக்கையூர் வரைக்கும் பரவியது..

கட்டுமரத்திலும், சின்ன வள்ளத்திலும் தூத்துக்குடி வந்து புதிதாக செய்து கொண்டிருக்கும் தேரை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சென்றார்கள்.. மூக்கையூரிலிருந்து இளைஞர்கள் கட்டுமரத்தில் கடல் வழியாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு... வைப்பாற கடந்து ஒடிக்கிட்டு இருக்கும்போது திடிரென கடல்ல வெப்பல் வுழுந்து கட்டுமரங்களால் தொடர்ந்து ஒட முடியல. எதிர்த்த நீவாடு வேற... தொளவைய போட்டு போனாலும் போய் சேர முடியாதுன்னு கட்டுமரத்த சாயவுட்டு வைப்பாரில் கரையேறி கடற்கரைல நின்றிருந்த பசங்கள் உதவியோடு கட்டுமரங்களை கரைய ஏத்தும்போது... மாதாவே.. மாதாவேன்னு சொல்லி கட்டுமரத்த மேலே இழுத்தாங்க.. (வைப்பாத்துகாரங்க வாயில எப்போதுமே மாதா.. மாதான்னுதான் வரும். ஏன்னா... தங்களின் குடும்ப உறுப்பினராகவே ஏற்று கொண்டிருந்தார்கள் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் பரலோகமாதா என்னும் மோட்ச அலங்காரி தாயை..)

நடந்து வந்த ஒன்றிரண்டு வேம்பார் இளைஞர்களோடு இவர்களும் சேர்ந்து தூத்துக்குடிக்கு நடந்து போனார்கள். ராயப்பு மட்டும் அவர்களோடு தயங்கி தயங்கி பின்னால் நடந்து வந்தான்.. முதன் முதலாக தஸ்நேவிஸ் அன்னையின் கருணை நிறைந்த முகத்தை மிக அருகில் போய் பார்த்து அதிசயித்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கிவிட்டு.. அன்னை நகர்வலம் வர செய்து கொண்டிருக்கும் அழகிய தேர் முக்கால் வாசி முடிந்த நிலையில் இருந்ததை ஆச்சரியமாக பார்த்தார்கள்.. 

வைப்பாறை மீண்டும் அடைந்ததும் கோவிலுக்கு போய்ட்டு போவோம்னு தன்னோடு கூட வந்தவர்களை கட்டாய படுத்தி கூட்டி சென்றான் ராயப்பு ..
(எதுக்குன்னு அவனுக்கு மட்டும்தானே தெரியும்).

வழியெங்கும் பார்வையாலே செல்வியை தேடிக்கொண்டு அவளை காணாது சோர்ந்து போய் கோவில்ல நெடுஞ்சாண்டையாய் விழுந்து... எம்மா.. எப்படியாவது அவளை என் கன்னுல காமிச்சுறுங்க..

(இதுக்குலாமா வேண்டுவானுக.... பீடத்தில் கொலு வீற்றிருந்த மோட்ச அலங்காரி தாய் மனதுக்குள் சிரித்து கொண்டாள்)

கோவிலிலிருந்து கடற்கரையை நோக்கி வரும்போது.. ஒரு வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண் செருமும் சப்தம் கேட்டு அது யாரென்று புரிந்து ராயப்பு மற்றவர்களிடமிருந்து பின் வாங்க.. உள்ளே வாங்க என்றாள் செல்வி.. புது பொண்ணு மாதிரி அலங்கரித்து நின்ற செல்வியை பார்த்து அப்படியே மெய்மறந்து போனான்....

உனக்கு கல்யாணமான்னு நக்கலாக கேட்ட ராயப்பிடம்.. ஆம் என்பது போல் தலையை மேலும் கீழுமாக அசைக்க அவன் முகம் வாடுவதை பார்த்து.. எனக்கு கல்யாணம் முடிஞ்சு மூனுமாசம் ஆயிட்டு இப்ப நான் என் புருஷன் வந்திருக்கார்னு அலங்கரிச்சு நிக்கேன்னு அவன் அருகில் போய் நின்றாள் செல்வி.. ராயப்பின் கை செல்வியின் கரத்தை ஆதரவாக பற்றியது.. அவள் விடுவிக்க விரும்பவில்லை..

ஊர்ல சண்டிதனம் பன்றீயலாம்.. செல்வி ராயப்பிடம் கேட்க அதெல்லாம் இல்லை என்று மறுத்தான். போனமாசம் நீங்க குடிச்சுட்டு தொளவையை வச்சு ஒருத்தன மண்டய ஒடச்சது தெரியும்.. மீன் வாங்க வந்தவனை நீங்க அடிச்சதும் தெரியும்.. இன்ன ஒன்னும் சொல்லவா.. ராயப்பு மௌனமாக நிற்க .. அங்காடி விக்கிறவள்ட்ட சிரிச்சு சிரிச்சு பேசுனதும் எனக்கு தெரியும்..இவள்ட்ட இதைலாம் யார் வந்து சொல்லிட்டு போறா.. ம்ம் ..சந்தியாகப்பர் குதிரைல ஏறி வந்து என்னட்ட சொல்லிட்டு போனாறு.. நான் ஊருக்கு வந்துக்கிறேன் அப்புறம்ல இருக்கு உங்களுக்கு.. 

கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடியே இப்படின்னா... கல்யாணம் முடிஞ்சா நம்மள என்ன பாடுபடுத்துவாளோ.. நீங்க தொட்டால் நான் சுருங்கிறுவேன் மச்சான் என்றாள் செல்வி... நான் நினைப்பதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்னு ராயப்பு கண்ணை சுருக்கும் போது... புருஷன் என் நினைக்கிறார்னு பொண்டாட்டிக்கு தெரியாதா என்றாள் செல்வி..

....... தொடரும் ......

- சாம்ஸன் பர்னாந்து 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com