வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 13 September 2015

தமிழக வரலாற்றில் பாண்டியர்களின் கடல்சார் தொடர்பு

சங்க நூல்களில் கூறப்படும் கடல்கோள் செய்திகளும், சங்கங்களின் அழிவும், கடலால் அழிந்த பகுதிகளுக்கு மாற்றாகப் புதிய நிலப்பகுதியினைப் பாண்டியர்கள் கைப்பற்றியதும் போன்ற செய்திகள் பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைப் புலப்படுத்துகின்றன.

"மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெள்வலின்
மெலிவு இன்றி, மேல் சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியனான் வணக்கிய, வாடாச் சீர்த்தென்னவன்..."

என்னும் கலித்தொகை வரிகள் (எண் 104 வரி 4--5) பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட செய்தியையும் அதற்கு ஈடாகப் புதிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதையும் குறிக்கிறது.

முதல் இரு சங்க நூல்களும் கடல் கோளால் அழிந்தபோது தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில நூற்கள் கூடக் காப்பாற்றப்படாமல் அழிந்தது எவ்வாறு என்பதும், தொடக்கக் காலப் பாண்டியர்களின் தலை நகரங்கள் நெய்தல் நிலத்தில் கடற்கரை அருகில் அமைக்கப்பட்டது ஏன் என்பது போன்ற வினாக்கள் நமக்கு ஒரு கேள்வி.

தமிழக வரலாற்றில், பாண்டியர்களின் கடல் சார்ந்த தொடர்பு, உறவு, தோற்றம், குலம் போன்றவை பற்றிய மீள் ஆய்வும் அவசியமாகின்றது.  அத்தகைய ஒரு சிறு ஆய்வில் பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை சங்க இலக்கியங்கள, அயல்நாட்டினரின் குறிப்புக்கள், குறிப்பாக இலங்கையில் அண்மையில் நிகழ்த்தப்பட்டக் கல்வெட்டுக்கள் ஆய்வு முடிவுகள், நாட்டார் இலக்கியங்கள், வாய்மொழிக்கதைகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.

நெய்தல் நில மக்களின் தொன்மை:-

பாண்டியர்களுக்கும் நெய்தல் நிலத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவானது, உறுதியானது.  இதனால் தமிழ் இலக்கியங்களில் நெய்தல் நில மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும், "பரதவர்" என்ற சொல்லின் தொன்மையையும் தோற்றத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

தமிழில் பரவை என்றால் பெரும் நீர்ப்பரப்பு அல்லது கடல் எனப் பொருள் படும். பரவை என்பதிலிருந்து பரவர் என்ற சொல் பிறந்தது.  (பரவை+அர்) பரவர். பரதர் என்றால் நெய்தல் நில மக்கள், வைசியர் எனவும், பரதவர் என்ற சொல்லுக்குத் தென் திசை ஆண்ட குறுநில மன்னர்கள் எனவும் அகராதிகள் பொருள் கூறுகின்றன.  (கழகத் தமிழ் அகராதி, 11--647).  பரவர், பரதர், பரதவர் என்ற முப்பெயர்களும் எழுத்து வேறுபாடுகளைக் கொண்டவை தாம்.  பரதவர் என்ற பெயரில் தகரம் கெட்டு, 'பரவர்' என்றும் வகரம் கெட்டு 'பரதர்' எனவும் மாறியுள்ளது.

"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்
கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",

(சூடாமணி நிகண்டு சூத்திரம்77)

இந்தச் சூத்திரத்தின்படி பரதவர்கள் நெய்தல் நில மக்களில் தலையானவர் என்பது தெரிகிறது.  

நெய்தல் நில மக்களிடம் தலைவர்கள் இருந்தார்கள்,  அவர்கள் அரசருக்கு ஒப்பானவர்கள் என்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

"கொண்கனே துறைவனோடு
குறித்த மெல்லம்புலம்பன்
தண்கடல் சேர்ப்பன் நெய்தல்
தலைவனைச் சாற்றும் நாமம்"

என்ற சூடாமணி சூத்திரமும்,

"கொண்கள் துறைவன் மெல்லம் புலம்பன்
தண்கடல் சேர்ப்பன்"

என்ற திவாகர சூத்திரமும்

"மெல்லப் புலம்பன் தண்கடல் சேர்ப்பன்
துறைவன் கொண்கண் நெய்தல் தலைமகன்

என்ற பிங்கலச் சூத்திரமும் இதைத் தெளிவுபடுத்தும்.  பரத குலத் தலைவன் அரசனுக்கு நிகரானவன் என்பதை,

அரசர் முறையோ பரதர் முறையோ

என்ற சிலப்பதிகார வரியால் அறியலாம்.  சிலப்பதிகாரம் (23--160)

சங்க இலக்கியங்களிலும்  சிலப்பதிகாரத்திலும் பரதர் என்ற சொல் பலவகையில் கையாளப்படுகிறது.  "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர், பரதவ குமாரன்" என அவர்களது உயர்வு குறிக்கப்படுகிறது.,  பெரும்பாணாற்றுப் படை 320 முதல் 335 வரையிலான வரிகள் இவர்களைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களில் கூறப்படும் செய்திகளிலிருந்து பரதவர் முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல் போன்ற தீரமிக்க செயல்களாலும், கடல் கடந்த வியாபாரங்களாலும் சிறந்தோங்கினார் என்பது தெளிவாகிறது.  

வலை வீசும் புராணம் இவர்கள் காற்றையும் கடலையும் எதிர்த்துப் போராடும் இவர்களது வாழ்க்கை முறையினைத் தெளிவாகக் கூறுகிறது.  பெருமீன்கள், பனைய மீன்கள் போன்றவற்றை நீரில் எதிர்த்துப் போராடி வெல்லும் திறமை மிகுந்த வேட்டைச் சமூகமாக இது விளங்கியது.  போராட்டங்களில் தனக்கு உதவிய மீனையும், பிற மீன்களின் இருப்பிடத்தை அறிய உதவி புரியும் மீன்களையும் தங்களுடைய நட்பு விலங்காக அவர்கள் கொண்டிருந்தனர்.

படகு முறிந்து கடலில் தத்தளித்த மீனவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்த மீனைப் பற்றிய வாய்மொழிக் கதைகள் எல்லாப் பகுதிகளிலும் வழக்கில் உள்ளன.

இதுவே பிற்காலத்தில் அவர்களது அரசியல் வியாபாரச் சின்னமாக மாறியது என்பதை இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தெளிவாக விளக்குகின்றன. (புஷ்பரத்தினம், 1999:70)

பரதவர்களை 'கடலர்' என்று திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகள் கூறுகின்றன.  நிலத்தில் போராடும் வீரர்கள் மறவர்கள் என அழைக்கப்பட்டது போலக் கடலில் (பரவை)போரிட்ட வீரர்கள் பரவர் என அழைக்கப்படனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாண்டியர்களின் குலச்சின்னமான மீன் அவர்கள் நெய்தல் நிலத் தலைவர்கள் என்பதை மறைமுகமாகக் கூறும்.  மேலும் பாண்டியர்களின் பல்வேறு பெயர்களான கடலன், வையைத் துறைவன், மீனவன் போன்ற வார்த்தைகள் கடல் சார்ந்தவற்றையே கூறுகிறது.  பாண்டியர் பற்றிய பல பாடல்கள் "மீனவ" என்றே தொடங்குகிறது.

யாப்பெருங்கலம் இயற்றிய அமுதனார் தாம் இயற்றிய நூலில் மீனவன் கேட்ப என்றே கூறியுள்ளார்.

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் கோபாலன் கணபதி ஆகிய காகதீயர்களை வென்ற செய்தி சிதம்பரம் நடராசர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.  அதில்

கொங்கர் உடல் கிழிய குத்தியிரு  
வெங்கண் அழலில் வெதும்புமே
சூழ்த்தாம் அம்புனையுஞ் சுந்தரதோள்
மீனவனுக்கு ஈழத்தான் இட்ட இறை  
(இந்தப் பாடல் முழுமையாக இல்லை)
என்று மன்னன் திறை செலுத்தியது கூறப்பட்டுள்ளது.  

பாண்டியர்களின் கடல் சார்ந்த தொடர்புகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் கூற முடியும்.

வடிவலம்ப நின்ற பாண்டியன், திருவிற்பாண்டியன் (தொல்காப்பியப் பாயிரம்) எனவும் சிறப்பிக்கப்படுகிறான். புதிய நிலப்பகுதிகளைத் தன்னுடன் இணைத்த என்ற பொருளைக் குறிக்கும்.  கடற்கோளால் தென்பகுதியை இழந்து அதற்கீடாக வட பகுதியை வென்று தனது அரசைப் பெருக்கினான் என்பதாகும்.  இவன் சாவா, சுமத்ரா, போர்னியோ போன்ற நாடுகளை வென்றுள்ளான்.  இவையனைத்திலும் பாண்டியர் ஆட்சி நடைபெற்றது என்பதற்குச் சான்றாக போர்னியோத் தீவில் ஆறு ஒன்றுக்கு, "கடுங்கோன்" எனப் பெயரிட்டிருப்பதையும் ம.இராசசேகர்  தன்னுடைய 'பாண்டியர் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கடல் கடந்த இந்த ஆதி படைகள் வன்மை வாய்ந்த நெய்தல் நிலத்தில் நடத்தப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் நாம் உணரலாம்.  இவனுடைய காலத்தில் கடல் பொங்கி வந்ததாகக் கூறப்படுவது முதற் கடற்கோளாக இருக்கக் கூடும்.  இவன் 'கடல் சுவற வேலெறிந்தான்' என்பது கடல் கடந்து பல நாடுகளை வென்றான் என்பதாகவும், கடல் வடிவம்பலம்ப நின்றது என்பது இவன் கடலில் கப்பலைச் செலுத்திய திறனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  கடற்கோளால் உலகம் அழியப் பாண்டிய வேந்தன் ஒருவன் மட்டும் தப்பி உயிர் வாழ்ந்திருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்படுகிறது. 

இதே போன்று "கடலுள் மாய்ந்த இளம் வழுதி" என்ற தொடர் கடல் போரில் உயிரிழந்த அல்லது கடலில் மீன் வேட்டைக்குச் சென்ற பாண்டிய இளவலைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

மன்னர்கள் காடுகளில் வேட்டைக்குச் செல்வதைப் போலப்  பாண்டிய மன்னர்கள் கடலில் வேட்டைக்குச் சென்றனரோ என்று எண்ண இடமளிக்கின்றது.  இதே போன்ற ஒரு நிகழ்ச்சி 'வலை வீசும் புராணத்திலும்' கூறப்படுவது சிந்திக்கத் தக்கது.

குறுநில மன்னர்கள் ஆட்சியும் இனக்குழுக்களின் அரசும்:

பெரும் மன்னர்களும், அரசுகளும் திடீரென்று தோன்றி இருக்க முடியாது.  இவர்களின் தோற்றத்திற்குத் தெய்வீகக் கதைகள் புனையப் பட்டிருந்தாலும் ஆதியில் இவர்கள் வலிமை வாய்ந்த இனக்குழுவின் தலைவர்களாகவோ அல்லது வலிமையும் பொருளாதார பலமும் பெற்றவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்.  இவர்களே மெல்ல மெல்ல தம்முடைய ஆற்றல், அறிவு பல நாட்டு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு போன்றவற்றால் பல்துறைப்பட்ட அனுபவ அறிவைப் பெருக்கிக் கொண்டு அதனடிப்படையில் அரசுகளையும் ஆட்சி முறையையும் தோற்றுவித்திருக்க இயலும்.

எளிமையான அமைப்புக்களிலிருந்து சிக்கலான அமைப்புகள் தோன்றுவது அறிவியல் பூர்வமானது.  இந்த வளர்ச்சிப்படி அமைப்பினை இலங்கைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.  (புஷ்பரத்தினம், 1999: 153)

இந்தப் பண்புகள் அனைத்தும் அமையப் பெற்ற இவர்களைப் பற்றி மதுரையை அடுத்த அரிட்டாப்பட்டி கிராமத்தில் உள்ள சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் செய்தி இவ்வாறு கூறுகிறது.

"இலஞ்சி வேள் மாப்பரவன் மகன்
எமயவன் நல்முடிவுகை கொடுப்பித்தவன்"
(தம்பி ஐயா பர்னாந்து, The Hindu, 15--9--20

இதற்கு இலஞ்சியின் அரசன் மாப்பரச எமயவான் இந்தக் குகை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தான் என்பது பொருள்.  இதில் மாப்பரசன் என்றால் அறிவுடைய பரவன், பெரிய பரவன், பெருமையுடைய பரவன் என்று பொருள்படும்.  இதனை பரதவ குமார என்ற சிலப்பதிகார சொல்லாட்சியோடு ஒப்பு நோக்கத்தக்கது.

"தென் பரதவர் போர் ஏறே", "பரதவர் தலைவன்" எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய சங்க இலக்கியங்களின் சொல்லாட்சி ஒப்பு நோக்கத்தக்கது. அதாவது வரலாற்றின் தொடக்கத்தில் வலிமை, அறி செல்வம் நிரம்பப் பெற்ற நெய்தல் நில மக்களுள் ஒருவன் தலைவனாக எற்றுக் கொள்ளப்பட்டு ஆட்சி அமைக்கத் தலைப்பட்டிருக்கலாம் என்பதும், தங்கள் அடையாளமாக மீன், படகு, கப்பல் போன்றவற்றைப் பயன்படுத்தியதும் இலங்கையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் செய்திகளால் உறுதி செய்யப்படுகின்றது.

இலங்கையில் இது வரை கிடைத்த கல்வெட்டுக்களில் வரும் குலம், சமூகம், தொழில் பிரிவுகள் பற்றிய செய்திகளையும், இதற்குச் சம காலத் தமிழ்நாட்டு இலக்கியங்களில் வரும் செய்திகளின் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டுபவையாக இவை அமைந்துள்ளன.  சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்திற்கும் இலங்கை பிராமிக் கல்வெட்டுகக்ளில் வரும், 'பரத' என்ற பெயருக்கும் இடையிலான பெயர் சமூக அந்தஸ்து, தொழில் வாழ்விடங்களில் காணப்படும் ஒற்றுமை இவ்வாய்வுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகும்.

இலங்கையில் கிடைத்த கி.மு. 1--ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு சமூகத்தின் உயர்நிலைகளில் இருந்த பலதரப்பட்ட பிரிவினர் அளித்த குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, நாணயங்கள், உணவு, தானியம் என்பன பற்றிக் கூறுகின்றன.

இவற்றைப் பிற மதத்தவரும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு வர்த்தகம், பொருளாதார நடவடிக்கைகளுக்காகச் சென்றவர்களும் அவதானித்துள்ளனர்.  இவ்வாறு தானமளித்தோரில் பலர் தமது பெயருடன் தமது மூதாதையினர் பட்டம், பதவி, தொழில், வாழுமிடம் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர்.  இவை சுருக்கமான தகவல்களாக இருப்பினும் அக்காலத்தில் எவ்வாறு சமூக, தலைமை அமைப்பானது உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக் கொள்ள உதவுகின்றன.

இதுவரைக்கும் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த கல்வெட்டுக்களில் 155-க்கும் மேற்பட்டவற்றில் 'பத' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது 'பரத' என்ற சொல்லின் இன்னொரு வடிவமாகக் கருதப்படுகிறது.  இதன் பெண்பாற் சொல்லாக 'பதி' என்ற பெயர் காணப்படுகிறது.  இவ்விரு பெயர்களும் கல்வெட்டுக்களில் ராஜா, பருமக போன்று ஒரு பட்டப் பெயருக்குரிய நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  (புஷ்பரத்தினம்--தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு) 

தோலமி சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'பதை எனக் கூறுகிறார்.  இது பரதவரைக் குறிக்கலாம். (டி.கே.வேலுப்பிள்ளை, 1980, புஷ்பரத்தினம், பக்கம்:62)

திராவிட சொல்லகராதியில் 'பரத' என்ற சொல்லுக்குச் சமமாகப் பரதவர், பரதர், பரவர் என்ற சொல் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலோனி என்ற அறிஞர் தென் தமிழ் நாட்டிலும் வடமேற்கு இலங்கையிலும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியங்களில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரு பெயர்களும் ஒன்றென்கிறார். (புஷ்பரத்தினம், 1999:61).  இலங்கைத் தமிழகப் பண்பாட்டுத் தொடர்பின் பின்னணியில் நோக்கும்போது இது பொருத்தமுடையதாகத் தெரிகிறது.

மேலும் பாண்டி நாட்டுச் செல்வமாக இருந்த நெய்தல் நிலத்து முத்து பற்றிச் சங்க இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. பாண்டியர்களின் செல்வச் செழிப்பிற்குக் காரணமாகக் கடல்படு திரவியங்களே கூறப்படுவதும் இங்கு சிந்திக்கத் தக்கது.  ுத்து, பாண்டியரின் சொத்தாகவும், மீன் பாண்டியரின் பிரதான உணவாகவும் விளங்கியது.  சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப் பொருளாகவும், உப்பு உள்நாட்டு வர்த்தகப் பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் மேலைநாட்டுக் குதிரைகள் தென்பாண்டித் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப் பட்டதைக் கூறுகின்றன.  பாண்டி நாடு நெடுகிலும் கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலத்தில் குதிரை வர்த்தகம் நடந்ததாகத் தெரிகிறது.  பாலி நூல்கள் தமிழ்நாட்டு பரதவ வணிகர்கள் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறுகின்றன.

இவ்வாறு பலதரப்பட்டப் பொருளாதார நடவடிக்கையில் நெய்தல் நில மக்கள் ஈடுபட்டதனால் செல்வம் குவிந்தது.  இவர்களின் மாளிகைகள் கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புகள் இவர்களின் செல்வ நிலையைக் காட்டுகின்றன.  பாண்டிய நெடுஞ்செழியனைக் 'கொற்றவன் காவலன்,' "பரதவத் தலைவன்", எனக் கூறுவது அரசியலிலும், சமூகத்திலும் பாண்டிய மன்னர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் இடையேயான மிக நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.

பாண்டிய நாட்டிலுள்ள தாமிரபரணியாற்றங்கரை பரதவர் வாழும் இடமாக அடையாளம் காணப்படுகிறது.  இதே பெயர் முழு இலங்கையையும் குறிக்கும் பெயராக மாறியது.  இச்சமூகத்தினரின் வர்த்தக அரசியல் பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகிறது.

"பரதர்" பற்றி வரும் கல்வெட்டுக்களில், பொல நறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில், 'பரதஸஹகிதஸ" என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது

இதில் 'பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது.  இது 'பரத' என்பவனைக் கப்பல் தலைவனாகவோ அல்லது வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவனாகவோ கருத இடமளிக்கிறது.

குரு நாகல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் தலைவன் என்ற பட்டயத்துக்கு உரிய 'பரத' என்பவன் அரச தூதுவனாகக் கடமையாற்றியமை கூறப்பட்டுள்ளது.

கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதிரன், தசபிடன், மகாசாத்தன், கபதி கடலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களோடு 'பரத திஸ" என்ற பெயர் பொறித்த நாணயமும் கிடைத்துள்ளன.  இதன் சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் முன்புறத்தில்     இரு மீன் கோட்டுருவமும் இடம் பெற்றிருப்பதாகும்.  இதைப் பாண்டியர்களின் தொடக்கமாகக் கருத இடமுண்டு.  இதில் பரத என்ற பெயர் "பரதவ" சமூகத்தையும் 'திஸ' என்ற சொல்லானது 'திரையர்' என்ற பொருளையும் தரும்.  திரை என்ற சொல்லுக்குக் கடல், கடலலை, குளம் என்ற பல பொருள்கள் உள்ளன.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டது.  அதன் மத்தியில் 'திஸஹ' என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.  இதை 'திஸ' அல்லது 'திரையன்' என்பானின் வணிக முத்திரை எனலாம். முதலில் பெரும் பரதவ வணிகர்கள் தஙக்ள் வியாபார அடையாளமாகப் பயன்படுத்திய சின்னம் பின்பு படிப்படியாகப் பாண்டியர்களின் கொடியாகவும், அரசச் சின்னமாகவும் உருமாறியிருக்கக் கூடும்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையில், ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்களான 'சேன, குத்தக' என்போரின் பெற்றோர் வெளி நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து இலங்கையில் விற்பனை செய்த குதிரை வணிகனின் பிள்ளைகள் என மகாவம்சம் கூறுகிறது.  குதிரை வியாபாரத்தில் தென்பாண்டி நாட்டு பரதவ வணிகர்கள் ஈடுபட்டனர் எனப் பாலி நூல்கள் கூறுவதன் அடிப்படையில் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட குறுநில மன்னர்களின் ஆட்சியையும் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.  மெல்ல மெல்ல வலிமை வாய்ந்த நெய்தல் நிலத் தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், முடியுடைய வேந்தர்களாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது நெய்தல் நில மக்களுக்கும், பாண்டியர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெளிவாக விளங்குகிறது.  அதாவது இருவரும் ஒருவரே அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

குமரி முனையில் அரசனாகவிருந்த வில்லவராயன் என்பான் பகவதி அம்மன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்ததாக ஆலயத்தின் ஒரு கல்வெட்டுச் சான்று பகருகிறது.  இதைத் திருவிதாங்கூர் மக்கள் தொகை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.  பாண்டிய மன்னர்கள் 'குமரிச் சேர்ப்பன்' என்று குறிக்கப்படுவது இங்கு நமக்கு புதிய வரலாற்றுச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.

மேலும் இலங்கையை ஆண்ட பராக்கிரம பாகுவுக்கும் 91153--1186) குலசேகர பாண்டியனுக்கும் நடந்த போரில் வில்லவராயன் கொல்லப்பட்டான் என்று அத்தியாயம் 76 பாடல் வரி 163 சூள வம்சம் என்ற பாலி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது.  இருவரும் ஒருவரா அல்லது ஒரே குலத்தில் உதித்தவர்களா என்பது ஆய்வுக்குரியது.

இதே போன்று ஐவர் ராஜாக்கள் கதையில் குலசேகர பாண்டியனுக்காகக் கன்னடியனுடன் வில்லவராயனும், வில்லவராயக் கூட்டங்களும் போரிட்டு மாண்டதையும், மற்றொரு மந்திரி காலிங்கராயன் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாகக் கடற்துறைக்கு அழைத்துச் சென்று பாதுகாத்ததையும் மிக விரிவாகச் சொல்கிறது.

செண்பகராமன் பள்ளுவின் தலைவன், காலிங்கராயன் என அழைக்கப்படுவதும் நமக்கு நெய்தல் நில பரதவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த உறவினைக் காட்டுகிறது.  இவையனைத்தும் பரதவ குலத்தினரிடம் வழங்கப்பட்ட பட்டங்களாகும்.  இவர்களில் சிறந்தோரே குறுநில மன்னர்களாகவும், தளபதிகளாகவும் விளங்கினர் என்பது மேற்கூறியவற்றால் புலனாகும்.

"ஒன்று மொழி" பரதவர் என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளுக்கேற்ப இவர்களுக்குள் நிலவிய அசாதாரணமான ஒற்றுமை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டியர்களின் வலிமையான ஆட்சிக்கு அடிகோலியது.  இவர்களே முதன்மையான பாண்டியர்களின் தளபதிகளாகவும், மந்திரிகளாகவும் கடற்துறைகளிலும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இருந்து ஆட்சி செய்தனர்.  இடைக்காலங்களில் முதன்மைப் பாண்டிய மன்னனுக்காக போரில் உயிர் துறந்ததையும் வரலாற்றின் மூலமாகவும், நாட்டார் இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம்.  சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் இறந்த பிறகு கோநகர் கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன் மன்னரானது, காலம் காலமாக நடந்து வந்த பரம்பரைப் பழக்கம் என்பதற்கு வலிமையான சான்றாகும்.

மேற்கூறிய செய்திகளிலிருந்து பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்குமான தொடர்பு அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்களாக இருக்க முடியாது என்பதையும் அவர்களுக்கு இடையிலான மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதையும் இருவரும் ஒருவரே என்பதையும் பாண்டியர்கள் நெய்தல் நிலத் தலை மக்கள் தாம் என்ற புதிய முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதையும் உணரலாம்.

- ச.சகாயராஜ்,  ஆசிரியர்கார்மல் மேல்நிலைப்பள்ளிநாகர்கோவில்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com