வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 14 September 2015

பாண்டியர்களும் பரதவர்களும்

சங்க இலக்கியங்களிலும், மேலை நாட்டுச் சரித்திர ஆசிரியர்களின் வரலாற்று ஏடுகளிலும் தென்பாண்டி நாட்டில் வாழ்ந்த பரதவர்களைப்பற்றிய செய்திகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர்களைப் பற்றிய வரலாறு தெளிவாகத் தெரியவில்லையென்றாலும், அவர்கள் பாண்டிய மன்னனின் கப்பற்படையை இயக்கி வந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
பாண்டிய நாட்டின் பொருளாதாரம், பரதவர்கள் செய்து வந்த கடற்தொழில்களான மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், சங்கு குளித்தல், முத்துக்குளித்தல் போன்றவற்றின் மூலம் மிகவும் வலுவுள்ளதாக இருந்திருக்கிறது. தாங்கள் கடலில் குளித்து எடுத்த முத்துக்களை விற்று அதற்கு மாற்றாக உலகின் தலை சிறந்த பொருட்களை ஈட்டியதால், மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். பாண்டிய நாட்டின் உட்பகுதியில் பஞ்சம் ஏற்படும்பொழுதெல்லாம் தாங்கள் பிடித்த மீன்களை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றியவர்கள் இந்தப் பரதவர்கள்.

தென்பாண்டி நாட்டின் கடலோரக் கிராமங்கள் "முத்துக்குளித்துறை" என அழைக்கப்பட்டது. இங்கு முத்துக்குளித்தல் நடைபெற்று வந்ததால் இந்தப் பகுதி முழுவதும் பொதுவாக முத்துக்குளித்துறை என்றே அழைக்கப்பட்டு வந்தது. முத்துக்குளித்துறை மக்களையும் மாலுமிகளையும் கொண்ட ஒரு சிறிய குடியரசாக இருந்திருக்கிறது. இவர்களுக்கு என்று ஒரு தலைவர் இருந்தார். அவரின் ஆலோசகராக ஒவ்வொரு பெரிய கடற்கரை ஊர்களிலும் செயல்பட்டவர்கள், "பட்டங்கட்டி" என்றழைக்கப்பட்டார்கள்.

இவர்கள் பாண்டிய மன்னனிடம் தங்களுடைய தலைவனின் பிரதிநிதிகளாக இருந்தனர். கிராமத்தின் நிர்வாகப் பொறுப்பை 'அடப்பன்' என்பவரும், வரவு செலவுகளைக் கவனித்து வரி வசூலிப்பவராக 'கணக்கப்பிள்ளை' என்பவரும் இருந்து வந்தனர். ஒரு நாட்டின் சுயாட்சியை அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் அவர்களிடம் இருந்தன. இவர்கள் மிகுந்த போர்க்குணம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே பாண்டிய மன்னர்கள் அவ்வப்போது பரதவர்கள் மீது போரிட்டு அவர்களை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் கி.பி. 640 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தான். இவனுக்கு மாற வர்மன் என்ற பெயரும் உண்டு. இவனுடைய ஆட்சிக்காலத்தில் பாண்டியநாடு உயர்நிலையில் இருந்தது. இந்த மன்னன் பரதவர்களோடு போரிட்டு அடக்கினான் என்று வேள்விக்குடி சாசனம் தெரிவிக்கிறது.

"நெல்வேலிச் செருவென்றும்

விரவி வந்தடையாத

பரவரை பாழ்படுத்தும்

அறுகாலினம் புடை திளைக்குங்

குறுநாட்டவர் குலங்கெடுத்தும்"

'குறுநாட்டவர் குலங்கெடுத்தும்' என்ற வரிகள் பரவர் குறுநாட்டுக்குச் சொந்தமானவர்களாக இருந்திருக்கின்றனர் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. அரிகேசரி வென்றடக்கிய பரவர் என்பவர் பாண்டிய நாட்டின் தெற்குப் பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர் ஆவார் என்று வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார்.

பாண்டியர்கள் கடல் சார்ந்த நாட்டினை ஆண்டு வந்தமையால் அவ்வப்போது தங்கள் நாட்டிற்குக் கடல் வழியாக வரும் இன்னல்களிலிருந்து தங்கள் குடிமக்களைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களுக்கு மிகப் பெரிய கடமையாக இருந்தது. எனவே பாண்டிய மன்னர்கள் தென் கடற்கரையில் வாழ்ந்து வந்த நெய்தல் நில மக்களாகிய பரதவர்களுக்குப் போர்ப்பயிற்சி கொடுத்து தங்களுடைய படைவீரர்களாகவும், கடற்கரைப் பகுதியின் காவலர்களாகவும் வைத்திருந்தனர் என 'மதுரைக்காஞ்சி' கூறுகிறது.

பரதவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றனர். எந்தவித அச்சமுமின்றி, அவர்கள் கடலுக்குள் சென்று திமிங்கிலம், கொடிய சுறா போன்ற மீன்களை எறியுறியால் எறிந்து கொல்லும் ஆற்றல் உடையவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை, "கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை' என்று நற்றிணைப் பாடல் தெரிவிக்கிறது. கடலில் பெரிய மரக்கலங்களைச் செலுத்தி வெளிநாடு சென்று வாணிபம் செய்யும் முறை இந்த நெய்தல் நிலத்துப் பரதவர்களால் தொடங்கப்பட்டதேயாகும்.

பரதவரைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போரிட்டு அடக்கினான் என்ற செய்தியினைப் பத்துப்பாட்டில் ஒன்றான 'மதுரைக் காஞ்சி' என்ற சங்கப்பாடல் இவ்வாறு தெரிவிக்கிறது.

"தென் பரதவர் போரேறே",

இது போன்று சோழன் செருப்பொழியெறிந்த இளஞ்சேட்சென்னி இப்பரதவர்களுடன் போரிட்டு வென்றதனை, 

"தென் பரதவர் மிடல் சாய" என்று புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.

பரதவர் திறம் கண்டு வியந்த பாண்டிய மன்னர்கள் நெய்தல் நிலப்பகுதியை ஒரு குறுநில நாடாகவே கருதியிருக்கிறார்கள். பரதவர்களின் 'சாதித்தலைவரை' ஒரு குறுநில மன்னனாகவே பாண்டிய மன்னர்கள் கருதி வந்தனர். நெய்தல் நிலத்தின் படை வீரர்களாகத் திகழ்ந்த பரதவர்கள் காலப்போக்கில் தங்களுடைய வலிமையாலும், திறமையாலும் ஒரு குறுநாட்டை நெய்தல் நிலப்பகுதியில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கென்று சொந்தமாக கொடியிருந்திருக்கிறது. அதில் சிவப்பு வண்ணத்தில் மீன், வில், அம்பு சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர்களின் ஊர்களில் உள்ள முக்கியமான இடங்களில் அதனை ஏற்றி வைத்திருந்தனர். அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, நற்றிணை, பட்டினப்பாலை என்று பல்வேறு சங்க இலக்கியப் பாடல்கள் பரதவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் அவர்களுடைய போர்க்குணத்தையும் பற்றிக் கூறுவதன் மூலம் அவர்கள் தமிழ்நாட்டின் தொன்மைக்குடியினர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இன்று தூத்துக்குடி என்று பொதுவாக அனைவராலும் அழைக்கப்பட்டாலும், பரதவர்கள் இன்றும் தங்களுடைய ஆலயப் பாடல்களிலும், விருத்தப்பாக்களிலும் தூத்துக்குடியை, "திருமந்திர நகர்" என்றே குறிப்பிடுகின்றனர். தூத்துக்குடியை பரதவர்கள் 'திருமந்திர நகர்' என்று குறிப்பிடுவதற்கான காரணங்களைப் பழங்காலக் கலவெட்டுக்களில் காணப்படும், 'திருமந்திர நகர்' என்ற சொற்களின் மூலம் அறிய முடிகிறது.

"திருமந்திர ஓலை நாயகம்" என்ற கல்வெட்டில் காணப்படும் வார்த்தைக்கு "அரசன் ஆணையை ஓலையில் எழுதிய பின்னர் அவ்வோலையை அரசனிடமிருந்து கிடைத்த ஆணையாகக் கருதி அதைப் பார்த்து அனுமதி அளிக்கும் உயர் அதிகாரி, " என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு வார்த்தை திருமந்திர நகர் என்பதாகும். இதற்குக் "கோவில்" என்றும், கோவிலில் வழங்கப்படும் உணவைத் தயாரிக்க ஏற்படும் செலவினங்களைக் கொடுத்துக் குறித்து வைக்கப்படும் ஊர்" என்ற பொருள் வருகிறது.

மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களையும் ஆராயந்து பார்க்கும்போது சில செய்திகள் கிடைக்கின்றன. பாண்டியர்களால் முத்துக்குளித்துறையின் பரதவகுலத்தினர் குறுநில மன்னராகவே கருதப்பட்டு வந்திருக்கின்றனர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் அரசாணையை, முத்துக்குளித்துறைத் தலைவன் மற்ற பரதவ மக்களுக்குத் தெரிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக பரதகுலத் தலைவர், "திருமந்திர ஓலை நாயகம்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுபோலவே தூத்துக்குடியில் முத்துக்குளிக்கும்போது கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மதுரை, திருச்செந்தூர், போன்ற ஊர்களில் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டுக்கும் அதற்குச் செய்வதற்கான செலவினங்களுக்கான பணத்தையும் முத்துக்குளித்துறைத் தலைவனான பரதவகுலத் தலைவன் பாண்டிய மன்னனிடம் கொடுத்திருக்க வேண்டும். எனவே பாண்டிய மன்னர்களால் தூத்துக்குடி, "திருமந்திர நகரம்" என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிட்டிருக்கப் படவேண்டும். கல்வெட்டுக்களில் காணப்படும் இரண்டு வாசகங்களான, 'திருமந்திர ஓலை நாயகம்' அல்லது 'திருமந்திர போனகப் புறம்' என்பது மருவி, "திருமந்திர நகர்' என்று பரதவர்களால் தூத்துக்குடி அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பரதவர்கள் மத்தியில் மட்டுமே திருமந்திர நகரம் என்ற வார்த்தை தூத்துக்குடியைக் குறிப்பிடும் சொல்லாக இன்றளவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செய்திகளால் பரதவர்கள் தென்பாண்டி நாட்டில் வலிமையுள்ளவர்களாகவும் குறுநிலங்களின் சொந்தக்காரர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

- மோ. நேவிஸ் விக்டோரியா,






Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com