பரவரின் வானியல் அறிவு
பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை 'அறிவர், பணி, கணியன்' -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் 'அறிவர்கள்' குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் 'பெருங்கணிகள்' இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது.
தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் 'தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social History of the Tamils-Part 1)

சோதிடம் என்பதற்கும் முந்தையது வானவியலாகும். இதன் பல்வேறு நூனுக்கங்கள் பற்றித் பரவர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது.
திசைக்காட்டிக் கருவி (CAMPASS) கண்டு பிடிப்பதற்கு வெகு காலம் முன்பிருந்தே பரவர்கள் மிகவும் பிரபலமான கடலோடிகளாக வணிகர்களாக இருந்து கலங்களை உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பண்ட மாற்றம் செய்து வந்தனர். எனவே தான் அவர்கள் கடலினை தமது தாயாக இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். நீரையும், காற்றையும் துணை கொண்டு தமது மரக்கலத்தை செலுத்த பல்வேறு அறிவுகள் அவர்களிடம் காணப்பட்டது.
- எப்படி எந்த மரத்தில் கப்பல் கட்டுவது ?
- அதன் பாய்களில் எத்தனை விதம் ?
- பாய்கள் எவ்வாறு அமைப்பது ?
- காற்றின் போக்கும் வேகமும் என்ன ?
- காற்றின் வகைகள்?
- திக்குத் தெரியாத நடுக்கடலில் திசை காண்பது எப்படி ?
- கடலில் ஓடும் நீரோட்டம் என்ன?
- எப்போது புயல் வரும் ?
- எங்கெங்கே சுழல்களும் நீரோங்களும் உள்ளன ?
- எங்கிருந்து எந்த நட்சத்திரத்தில் கிளம்பினால் எப்போது எங்கு சென்றடைய முடியும் ?
- எங்கெங்கு நல்ல குடி நீர் கிடைக்கும் ?
- எத்தனை நாள் பயணத்துக்குப் பிறகு எந்த தீவினை அடையலாம் ?
என்பதனைத்தையும் வானவியல் துணை கொண்டு தான் கண்டு பிடித்தனர்.
தை மாதம் பிறக்கும் போது ஏற்படும் காற்றின் மாறுபாட்டினைக் கொண்டு தங்களின் வாணிபத்தினை ஆரம்பிக்க தங்கள் மரகலங்களை கடலில் இயக்கினர். இதனால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லாடல் பரதவருக்கும் பொருந்தியது.
கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் என்றெல்லாம் ஒலைச் சவடிகள் நூலாக வெளி வந்துள்ளன.